Thursday 22 November, 2012

ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல – விஜி



         ‘ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல...‘ கவிதைத் தொகுப்பின் தலைப்பே நமக்குள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தொகுப்பிற்குள் செல்ல நம்மைத் தூண்டுகிறது. கவிதை, ஹைக்கூ, மரபுக்கவிதை, பாடல்கள் என பல்வேறு வடிவங்களில் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. கவிதைகளின் பாடுபொருள் பல்வேறு தளங்களில் கலவையாக பயணிக்கிறது.

‘அழைப்பிதழ்கள் வரவேற்பதில்லை‘ என்ற முதல் கவிதையே தொகுப்பிற்குள் நம்மை வரவேற்கிறது. மொய் கலாச்சாரத்தையும், அதன் அதீத உச்சத்தையும்
‘வாழ்த்துக்களை விட
பற்று வரவு நேர் செய்யும்
நாளைச் சொல்லி வரும்
அழைப்பிதழ்கள் வரவேற்பதில்லை’ என்ற வரிகள் உணர்த்துகின்றன. இன்றைய சமூக யதார்த்தப் போக்கை ஸ்ரீபதியின் கவிதைகள் ஆதங்கத்தோடும், விமர்சனப் பார்வையோடும் முன்வைக்கின்றன.
‘ஒரு வழியாக
காலம் திருப்தியுற்றது
ஒரு கவிஞனை
காலாவதியாக்கியதற்காக‘ என்ற வரிகள் இன்றைய வாழ்க்கை சூழலின் நிலையையும் அதன் நெருக்கடியையும் மிக எளிதாக உணர்த்தி விடுகின்றன.
அதனை இன்னமும் அழுத்தமாக உணர்த்துகின்றன
‘தங்கபுஷ்பம் பூத்தால் மட்டுமே
தலையில் வைத்தாடும் உலகே...‘ என்ற வரிகள். பொருளைத் தேடி ஓடும் இன்றைய உலகமயமாக்கல் சூழலில், அதன் பாதிப்புகள் மனித மனங்களிலும், வாழ்விலும் எப்படியுள்ளன என்பதைக் கவிதைகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனையும் சகித்துக் கொண்டு வாழ்வை ஓட்டும் நிலைக்கு மனிதர்கள் பக்குவப்பட்டு போனதை
‘சகித்துக் கொள்ள
பழக்கப்பட்ட பின்
ஜனநாயகம் என்பது
சுயநலமாய்
சுருங்கிக் கொள்வதுதானோ?‘ என்ற வரிகள் அம்பலப்படுத்துகின்றன.
பிற மனிதனைப் பற்றிய கவலையே இல்லாத தனியார்மய, தாராளமய வாழ்வுப் போக்கில், அவற்றால் சுரண்டப்படும் இயற்கை வளங்கள், நாம் இழந்துவரும் இயற்கைச் சூழல் பற்றி ஞாபகப்படுத்திச் செல்கின்றன சில கவிதைகள்.
சமூக ஒடுக்கு முறைகளை அடையாளம் காட்டி, அதன் வலியையும், கொடூரத் தனத்தையும் விளக்கி அதற்கெதிரான மனநிலைக்கு நம்மை கிளர்ந்தெழச் செய்கின்றன ஸ்ரீபதியின் கவிதைகள். மத, ஜாதிய ஏற்றத்தாழ்வுகளையும், கட்டமைப்புகளையும் கேள்வி கேட்கச் செய்கின்றன பல கவிதைகள். ‘அய்யனார்கள் மாநாடு’ என்ற கவிதை ஆரிய பிழைப்புவாதத்தை தெளிவாக தோலுரித்துக் காட்டுகிறது. இந்துமத படிநிலை அமைப்பு, மனிதர்களுக்கிடையே மட்டுமல்ல அவர்களுக்கான கடவுள்களுக்கிடையேயும் இருப்பதை ‘அய்யனார்களின் ஒப்பாரி’ முகத்திலறைந்து கூறுகிறது. காலங்காலமாகத் தொடரும் தீண்டாமை முதலிய மதவெறிக் கோட்பாடுகளாலும், செயல்பாடுகளாலும் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புக் குரலை, எழுச்சியை
‘எங்களின் எலும்புகளின் மீது
உங்கள் கோட்டைகள் எழும்பியது
உணரப்பட்ட பின்...
உங்கள் ராஜா வேசத்திற்கு
எப்படி எங்கள் சாமரங்களை
இன்னும் எதிர்பார்க்கிறீர்கள்?‘
‘உங்களுக்கான சொர்க்கங்களை
நீங்கள் புவியில் அனுபவிக்கும்போது
எங்களை மட்டும் ஏன்
வானத்தின் வாசல் திறப்பதற்காக
காத்திருக்கச் சொல்கிறீர்கள்?‘ போன்ற வரிகள் நமக்கு எடுத்துரைப்பதுடன் ஒரே மதம், ஒரே கடவுள் என்ற மாயவலையை அறுத்து எறிகின்றன, உண்மை நிலையை உணர்த்தி. மதக் கட்டுப்பாடுகளுக்குள் மட்டும் அடங்காத பாலின ஒடுக்குமுறையையும், அதனை எதிர்க்கும் பெண்ணின் கலகக் குரலையும் சில கவிதைகள் மிக அழுத்தமாகப் பதிவு செய்கின்றன.
‘அர்த்தநாரியின் இடப்பாகமும்
ஆதாம் எலும்பும்
கருப்பு அங்கியும்
ஆதிக்கத்தின் சின்னங்கள்‘
‘காமத்துப் பாலோடு
பொருட்பால் கொடுத்தாலும்
உன்னால் மறுக்கப்படுகிறதே அறத்துப்பால்‘
‘கல்பாட்டு உடைந்த பின்னும்
உன்னையே பிரதிபலிக்க
கண்ணாடி அல்ல நான்‘
‘உடைபடப் போவதில்லை நான்
உடைக்கப் போகிறேன்
ஒதுங்கிக்கொள்‘ போன்ற கவிதை வரிகள் ஆணாதிக்கத்தின் பெண்ணடிமைத்தன செயல்பாடுகளையும், அடையாளங்களையும் சமூகத்திற்கு எடுத்துணர்த்தி அவற்றை மீறவும், தேவைப்பட்டால் தூக்கி எறியவும்கூட பெண்கள் சிந்தித்து தயாராக உள்ள நிலையை மிக வீரியமாக சுட்டிக் காட்டி எச்சரிக்கின்றன. பெண்களை எழச் செய்கின்றன.
அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் அடிப்படையான அரசியல் பொருளாதார ஒடுக்குமுறையின் இன்றைய நிலையினை கவிஞர் கோபத்தோடு கண்டிக்கும் அதே வேளையில் அவற்றை தடுக்கும் மாற்று வழிகளையும் தனது கவிதைகள்வழி இனம்காட்டுகிறார். ‘நவீன ராமாயணம்’ என்ற கவிதை இன்றைய நமது இந்திய ஆட்சியாளர்களை மிகச்சரியாக, பகிரங்கமாக அடையாளப்படுத்துகிறது. ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாய், ஏவல் நாயால் நமது அரசுகள் மாறிப்போன அவலத்தை
‘முதலில் எங்கள் ரத்தத்தை
அடுத்து மூளையை
இப்போது உயிரை
விலைபேசுகின்றன உங்கள் ஒப்பந்தங்கள்‘ என்ற வரிகள் தோலுரித்துக் காட்டுகின்றன. மக்கள்நல அரசு என்ற போர்வையில் மக்கள் விரோதச் செயல்பாடுகள், ஜனநாயகத்தின் பெயரால் சகிக்க முடியாத அளவு அதிகரிப்பதை
‘உங்கள் வல்லரசுக் கனவில்
எங்கள் உறக்கம் தொலைந்து போனது‘ என்ற வரிகள் வேதனையுடன் முன்வைக்கின்றன.
‘வெள்ளை மாளிகையின்
ஜனநாயகக் கொலுவில்
உலகெங்கும் பொம்மைகள்
ராஜவேசத்தில்‘ என்ற வரிகள் அடையாளப்படுத்துகின்றன, உலகையே சுருட்ட நினைக்கும் சூத்ரதாரியான அமெரிக்க ஏகாதிபத்திய முகத்தை. ஏகாதிபத்தியத்திற்கெதிரான போரில் மக்களுக்கான சக்தி எதுவென்பதையும் கவிதைகள் மக்களுக்கு காட்டிச் செல்கின்றன.
பாவம் இந்த ஜடாயுக்கள்
சீதையைக் காத்திட எண்ணி
பரிதவித்துப் படபடக்கின்றன
தனது செஞ்சிறகுகளைஎன்ற வரிகளும், ‘சிவப்பு சூரியன்என்ற கவிதையும் நமக்கு உணர்த்திச் செல்கின்றன உழைக்கும் மக்களுக்கான விடியலின் நிறம் சிவப்புதான் என்று.
சிறகுகள்
இம்மண்ணைக் காயப்படுத்தியதாய்
சரித்திரம் கிடையாதுஎன்ற வரிகள் செஞ்சிறகுகளின் (கம்யூனிஸத்தின்) கீழ் உலகமே பாதுகாப்பாய் வாழலாம் என வரலாற்றுப் பூர்வமாய் பதிலுரைக்கின்றன. எல்லா ஒடுக்குமுறைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் தீர்வாய் எல்லார்க்கும் எல்லாம் என்ற பொதுவுடைமை சமத்துவக் கண்ணோட்டத்தை கவிதைத் தொகுப்பு அழுந்தப் பற்றி நிற்கிறது. மிக வீரியமான ஆயுதமாய் இத்தொகுப்பு நமக்குப் பயன்படும்.
இத்துனை அழுத்தம் இருந்தாலும்கூட தொகுப்பில் இடம் பெற்றுள்ள காதல் கவிதைகள் தொகுப்பின் வீரியத்தைக் குறைப்பதாய் அமைந்துள்ளன. கவிஞரே ஒப்புக்கொண்டபடி, கல்லூரிகால பிதற்றல்கள் அவை. வாரமலர் கவிதைகள் போன்ற அவை தொகுப்பின் வேகத்தை மட்டுப்படுத்துகின்றன. அவற்றை தவிர்த்திருந்தால் கவிதைத் தொகுப்பு பேசப்படும் தொகுப்பாக அமைந்திருக்கும். மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான முயற்சியாயும் சில கவிதைகள் அமைந்துள்ளன. சில கவிதைகளைத் தவிர்த்து தொகுப்பின் வரிசையையும் கவனத்துடன் பரிசீலித்து அமைத்திருந்தால் தொகுப்பு முழுமை பெற்றிருக்கும். தொகுப்பின் அரசியலில் கவிஞர் கவனம் செலுத்தத் தவறியிருக்கிறார்.
தோழர் ஸ்ரீபதியின் அடையாளம் அறிந்ததால் மேலும் சில விமர்சனங்கள் உள்ளே எழுகின்றன. பெண்ணியத்திற்கு ஆதரவான குரல் தொகுப்பு முழுவதும் ஒலிக்கும்போது அதற்கெதிரான குரலாய்நவீனப் பெண்ணே … … … உன் பின்புத்தி துடிப்பால்குடும்ப மரம் கருகிடாதா?’ போன்ற வரிகள் அமைந்திருப்பது கவிஞரின் அடையாளத்தை கேள்விக்குட்படுத்துகிறது. மாற்று அரசியலை அறிந்து கவிதைகளில் முன்வைக்கும் அவரே தன் சுயமும், அடையாளமும் நசுக்குப்படுவதாய் புலம்புவது அவரது அரசியலைப் பலவீனப்படுத்துவதாய் உள்ளது.
(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் நூல் விமர்சன அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

No comments: