Sunday, 25 November 2012

இராமரும் இலங்கையும்

இராமர் சேது பாலமும் பரமசிவ அய்யரும்

(ஜூ.வி பதிவு 6. நவம்பர் 6 அன்று பேசியது)

சென்ற இரண்டு வாரங்களுக்கு முன் உச்ச நீதி மன்றத்தின் முன் தமிழக அரசு சேது சமுத்திரத் திட்டம் சாத்தியமில்லை எனத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளது. இது நாள் வரையிலான தமிழக அரசின் அணுகல்முறைக்கு இது நேர் எதிரானது, இதை எதிர்க் கட்சிகள் எதிர்த்துள்ளன
.

‘ஆடம் பாலம்’ என இதுநாள்வரை சொல்லிவந்த ஜெயலலிதா, இந்த அறிக்கையில் அதை ‘இராமர் சேது’ பாலம் எனச் சொல்லியிருப்பதைக் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக ஜெயலலிதா இராமர் சேதுவை ஒரு தேசிய மரபுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என பிரதமரைச் சந்த்தித்துக் கோரிக்கை வைத்ததும் நினைவுக்கு வருகிறது.

இரண்டாண்டுகளுக்கு முன் நான் வாசித்த ஒரு நூல் எனக்கு நினைவுக்கு வருகிறது. இதை எழுதியவர் பரமசிவ ஐயர். மறைந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவரும், எல்லோராலும் பெரிதும் மதிக்கப்பாடவருமான ஏ.பாலசுப்பிரமணியத்தின் (தோழர் ஏ.பி) சித்தப்பா இவர். மிகவும் ஆசாரமான வைணவக் குடும்பத்தில் பிறந்த பரமசிவர் வால்மீகி இராமயணத்தை எழுத்தெண்ணிப் படித்தவர். அவரது சகோதரர் நீதிபதி சர். சதாசிவ ஐயர் வால்மீகி இராமயணத்தைப் பாராயணம் செய்தவர்.
வால்மீகி இராமயணத்தின் பால காண்டமும் சுந்தர காண்டமும் காவியத் தன்மையில் எழுதப்பட்டுள்ளதாகக் கருதும் பரமசிவர், அயோத்தியா, ஆரண்யா மற்றும் கிஷ்கிந்தா காண்டங்கள் அக்கால வரலாற்றைச் சொல்பவை என்கிறார்.

1934ம் ஆண்டு இலங்கை சென்று வந்த இரவீந்திரநாத் தாகூர் சென்னையில் பேசும்போது, சீதையை இராவணன் ஏன்கிற இராட்சசன் கடத்திவந்து சிறை வைத்தது உங்கள் ஊரில்தான் எனத் தான் இலங்கையில் பேசியதாகக் குறிப்பிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பராம்சிவர். இதேபோல இராஜாஜியும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசியதைக் கண்டு மனம் நொந்து போன பரமசிவர், இது போன்ற தவறான நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றை முன்வைப்பது சமகால அரசியல் பகைகளை உருவாக்கும் எனக் கருதி அடுத்த ஐந்தாண்டுகள், தன் வேலையை விட்டுவிட்டு வால்மீகி இராமயண ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.

சிவசமுத்திர நீர்மின் திட்டத்தில் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க பரமசிவருக்கு ஆங்கிலேய அரசு அன்று வெளியிட்டிருந்த புவியியல் நுண் விளக்க வரைபடம் ‘coloured mile to inch topograph’ பெரிதும் உதவியது. வால்மீகி குறிப்பிடும் தமஸா, கோமதி, சயந்திகா, ஸ்றின்ங்கவேரபுரம் முதலிய பகுதிகள் இன்றும் கங்கையின் வடகரைப் பகுதியில் டோன்ஸ், கும்தி, சாய், சிங்ரார் என்ற பெயர்களில் அழைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார். வாவ்மீகியில் காணப்படும் அத்தனை ஊர்களையும் இலங்கை உட்பட அவர் அடையாளம் காண்கிறார். சித்ரகூடமலை, அத்ரியின் ஆசிரமம், விராடன் புதையுண்ட குழி, தாண்டவ வனம் எல்லாவற்றையும் தற்போது அவை எங்குள்ளன எனச் சுட்டிக்காட்டுகிறார். இன்றும் மத்திய மாகாணங்களில் ‘இராவண வம்சிகள்’ என அழைக்க்கப்படும் கோண்டுப் பழங்குடியினர்தான் இராட்சதர்கள் எனவும் முண்டா மொழி பேசும் கோர்க்கர்களே வால்மீகி குறிப்பிடும் வானரர்கள் என்பதையும் நிறுவுகிறார்.

ஆறுகளுக்க்கு இடைப்பட்ட மணற் திட்டுகளை ‘லங்கா’ என அழைக்கும் மரபைச் சுட்டிக்காட்டும் பரமசிவர் இராவணன் சீதையைக் கழுதை பூட்டிய வண்டியில் கடத்திச் சென்றான் எனவும், அனுமன் நீந்திச் சென்றான் எனவும், இராமன் பாலம் அமைத்துப் படைகளுடன் கடந்தான் எனவும் வால்மீகி சொல்வதைச் சுட்டிகாட்டுவார், திரிகூடம் என்பது இந்திரான மலை, அதைச் சுற்றி ஓடும் கிரண் நதி பனகர், சிங்கள் தீபம் மற்றும் மசோலி சாலையில் ஒரு ஏரியைப்போலத் தோற்றமளிக்கும். அதுதான் லங்கா என அறிவியல் பூர்வமாக நிறுவுகிறார்.

வால்மீகியின் லங்காவை இன்றைய சிங்களத் தீவுடன் ஒப்பிடும் வழமை பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்பே வந்தது என்பதைச் சுட்டிகாட்டும் பரமசிவர் இராமன் எந்நாளும் விந்தியமலையக் கடந்ததில்லை என்கிறார்.

பண்டைய வரலாற்றைத் திரித்து இன்றைய அரசியலுக்குப் பயன்படுத்துவது குறித்த அறிஞர் பரமசிவரின் கருத்துக்களைப் படித்துக் கொண்டிருந்தபோது என் கண்களில் நீர் கசிந்ததை என்னால் தடுக்க இயலவில்லை.

No comments: