Thursday, 8 November 2012

’பிராமணாள் கபே’யும் நாயுடுஹால், கோனார் நோட்சும்!


திருச்சி திருவரங்கத்தில் இருந்த ‘ஹோட்டல் ஸ்ரீ கிருஷ்ணய்யர் என்பதில், கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென ‘பிராமணாள்’ என்ற பெயர் நுழைக்கப்பட்டது. தகவலறிந்த திராவிடர் கழகத் தோழர்கள் நேரில் சென்று ‘பிராமணாள்’ பெயர்ப்பலகையை நீக்குங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். பல முறை வேண்டுகோள் விடுத்தும், அவர் மறுக்கவே பிரச்சினை காவல்துறையிடம் சென்றது. அங்கு பல முறை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.

காவல்துறையும், அரசு வழக்கறிஞரும் கூட ‘பிராமணா’ளுக்கு ஆதரவாக இருக்கவே, அடுத்தகட்ட நடவடிக்கையாக விளக்கக் கூட்டத்தினை நடத்த திராவிடர் கழகம் அனுமதி கோரியது. தமிழக முதல்வருக்கு (அவருடைய தொகுதி என்பதாலும்) வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார் திராவிடர் கழக்த் தலைவர் கி.வீரமணி. இதற்கிடையில் இன்னும் சில பெரியாரிய அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கின.  (தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் பாசறை போன்ற அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. கைது, சிறை வரை சென்றது. ஒட்டுமொத்த பெரியாரியக் கருத்தாளர்களும் இந்த இழிவு துடைக்கும் பணியில் திரண்டனர்.

விளக்கக் கூட்டம் நடத்துவதற்கு, மூன்று முறை தொடர்ந்து அனுமதி மறுக்கப்படவே, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகி, நவம்பர் 4 அன்று கூட்டம் நடத்த அனுமதி பெற்றுவந்தது திராவிடர் கழகம்.

நவம்பர் 4, 2012:
இன உணர்வுடன் வெள்ளம்போல் திரண்ட தமிழர் கூட்டத்தின் மத்தியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார். “நீ பிராமணாள் என்றால், நான் சூத்திரனா? அதை இனியும் அனுமதிப்போமா?” என்று பொங்கினார். உணர்ச்சிக் கொந்தளிப்பான அந்தச் சமயத்திலும், ”எவ்வித வன்முறைக்கும் இடம் தராமல் அவரவர் அப்படியே வீடு திரும்ப வேண்டும். கிருஷ்ணய்யர் கடைப்பக்கம் யாரும் போகக் கூடாது” என்று கட்டுப்பாடு விதித்தார். பெரியாரின் இயக்கம் இராணுவத்தைவிடக் கட்டுப்பாடு மிக்க இயக்கம் என்பதை நிரூபித்தது. கிருஷ்ணய்யர் கடை தப்பித்தது.

நவம்பர் 6, 2012:
’பிராமணாள் கபே’ பெயருடன் இருந்த கடையைக் காலி செய்யுமாறு கடை உரிமையாளர் கேட்டுக் கொண்டார். கடை காலிசெய்யப்பட்டது. அடுத்து இடம் தர முன்வந்த பார்ப்பனர் ஒருவரும், ‘பிராமணாள்’ பெயர் இல்லாமல் நடத்துவதாக இருந்தால் கடையை நடத்து என்று சொல்லிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதியான தகவல்கள் வரட்டும்.

இந்தப் பிரச்சினை நடந்து கொண்டிருக்கும்போதே பலரும் (சிலர் குழப்பத்தினாலும், சிலர் குதர்க்கத்திற்காகவும்) கேட்ட கேள்வி ஒன்று தான்.

ஏன் பிராமணாளை மட்டும் குறிவைக்கிறீர்கள்? பார்ப்பனர்களை மட்டும் ஏன் சீண்டுகிறீர்கள்?

சென்னையிலேயே ’நாயுடு ஹால்’ இருக்கிறது; பல இடங்களில் ’தேவர் மெஸ்’ இருக்கிறது; ’நாயர் டீக்கடை’ இருக்கிறது; செட்டியார் வட்டிக்கடை இருக்கிறது; முதலியார், வன்னியர், பிள்ளை, லொட்டு, லொசுக்கு, மயிறு, மட்டை என்று ஏகப்பட்ட ஜாதிப் பெயர்களோடு கடைகள் இருக்கின்றன. ஏன் கோனார் என்ற பெயரில் நோட்சு கூட இருக்கிறது. பெயர்களில் பலரும் இன்றும் ஜாதிப் பின்னொட்டு வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் எதிர்க்காமல், பாவம் அப்புராணி பார்ப்பனர்களை மட்டும் ஏன் தாக்குகிறீர்கள்? அவர்கள் சாதுவானவர்கள், மிருதுவானவர்கள், எதையும் தாங்கிக் கொள்வார்கள் என்பதாலா? இத்தியாதி... இத்தியாதி....

இந்தக் கேள்வியில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது என்று தோன்றும். ஏனெனில் இந்தக் கேள்வியை பார்ப்பனர்கள் கேட்டதை விடவும், பார்ப்பனரல்லாதவர்கள் நிறைய கேட்டார்கள்; கேட்கிறார்கள். அதிகம் படித்த மேதாவிகளும் கூட இக்கேள்வியைக் கேட்டார்கள்.


ஆனால், அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ, வசதியாகவோ மறந்துவிடும் செய்தி ஒன்று உண்டு. ‘மாமி மெஸ்’ இன்னும் இருக்கிறது; ’மாமிஸ் மசாலா’ விளம்பரம் வந்துகொண்டுதான் இருக்கிறது. ‘அய்யங்கார் பேக்கரி’ என்று தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் கடைகள் இருக்கின்றன. அங்கெல்லாமும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தவில்லையே!

ஏன், பிரச்சினைக்குரிய கடையே, வெறும் ‘கிருஷ்ணய்யர் ஹோட்டலாக’ இருக்கும்வரை யார் கேட்டார்? ‘பிராமணாள்’ நுழைந்தவுடன் தானே பிரச்சினை தொடங்கியது.

’அப்படின்னா... புரியலையே?’ என்கிறீர்களா?
மேற்சொன்ன நாயுடு, தேவர், நாயர், செட்டியார், முதலியார், வன்னியர், பிள்ளை,  கோனார், அய்யர், அய்யங்கார் - இவையெல்லாம் ஜாதிப் பெயர்கள்!

அப்ப பிராமணர்/ பிராமணாள்? 
அது வர்ணத்தின் பெயர்! நால்வருணத்தின் அடிப்படையில் இருக்கும் இந்துமத ஜாதி அமைப்பில், பிரம்மனின் முகத்தில் பிறந்ததால் உயர்ந்த வர்ணம் என்று சொல்லப்படுவதின் பெயர்! அது ஜாதிப் பெயர் அல்ல. யாரும் சுப்பிரமணிய பிராமணர் என்றோ, ராமசாமி பிராமணர், அனுஜா பிராமணத்தி, ஜனனி பிராமணத்தி என்றோ பெயர் வைத்துக் கொள்வதில்லை.

சரி, வர்ணத்தின் பெயராகவே இருந்துவிட்டுப் போகட்டும். உங்களுக்கென்ன பிரச்சினை?

இருக்கிறது. அங்கே தான் முக்கியப் பிரச்சினையே இருக்கிறது. இந்த வர்ணாசிரமத்தின்படி தான் பிறப்பின் அடிப்படையில் ஜாதி புகுத்தப்படுகிறது. பிறப்பின் அடிப்படையிலேயே இழிவு சுமத்தப்படுகிறது. பிராமணர் என்பதை ஒப்புக் கொண்டால், மற்ற வர்ணங்களையும் ஒப்புக் கொள்ளவேண்டும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்றெல்லாம் பிரிவுகள் கிடையாது. இந்து மதத்தின் படி அனைவரும் சூத்திரர்களே என்பதை சமூகவியலாளர்கள் மட்டுமல்ல... நீதிமன்றமே சுட்டிக் காட்டியுள்ளது.

எனவே, அவாள் பிராமணர் என்று சொன்னால், நான்/நாம் சூத்திரன் என்று ஆகிவிடுவேன்/வோம்.


சூத்திரன் என்றால்...?

மனுதர்ம சாத்திரம் எட்டாவது அத்தியாயம் 415 ஆவது சுலோகத்தின் படி, சூத்திரன் என்பவன்
”யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்,
பக்தியினால் வேலை செய்கிறவன்,
தன்னுடைய தேவடியாள் மகன்,
ஒருவனால் கொடுக்கப்பட்டவன்,
குல வழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன்,
குற்றத்திற்காக வேலை செய்கிறவன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதான் இந்து சட்டத்தின் அடிப்படை. என்னை/ நம்மைத் தேவடியாள் மகன் என்றும், நம் இனப் பெண்களைத் தேவடியாள் என்றும் சொல்லும் இந்த இழிவை நாம் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும். இந்துமதத்தில் இருந்துகொண்டே நான் சூத்திரனல்ல என்றெல்லாம் சொல்லமுடியுமா? முடியாது. எனவே தான் ’சூத்திரன் என்றால் ஆத்திரங் கொள்’ என்றார் பெரியார்.

அவர்கள் எங்கே உங்களைச் சூத்திரர்கள் என்று சொன்னார்கள்? தங்களைத் தானே பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்?
இதோ பெரியார் கேட்கிறார்:


”நானும் 20 வருடமாகச் சொல்கிறேன். பார்ப்பானை ‘பிராமணன்’ என்று சொல்லாதே! அவனைப் பிராமணன் என்று கூறினார், நீ யார்? ஒருத்தி உன் தெருவில் தன் வீட்டில் ‘இது பதிவிரதை வீடு’ என்று போர்டு மாட்டிக் கொண்டால் மற்றவர் வீடு என்ன என்று அர்த்தம்? என்று கத்திக் கத்தி, என் தொண்டையில் ரத்தம் வரச் சொல்கிறேன். உன் கடையில் ‘பிராமணாள்’ என்று போர்டு போட்டுக் கொண்டால் ‘சூத்திரப் பயலே வாடா!’ என்று தானே கூப்பிடுகிறாய்?” 
(விழுப்புரத்தில் தந்தை பெரியார் உரையிலிருந்து - விடுதலை 30.8.1958)

பெரியார் கேட்பதில் உள்ள நியாயம் புரிகிறதா, இல்லையா? ஒரு வீடு மட்டும் பத்தினி வீடு என்றால் மற்றவர் வீடெல்லாம் தேவடியாள் வீடு என்றல்லவா பொருள்.

அதே தானே பிராமணாள் என்றால், மற்றவர் சூத்திரன் என்று தானே பொருள். அதற்கு, மேலே உள்ள விளக்கத்தைத் தவிர வேறென்ன பொருள் இருக்கிறது. பச்சையாக என் இனத்தைத் தேவடியாள் மகன் என்று சொன்னால் நான் எப்படி பொறுத்துக் கொள்வது?

அப்படியானால், மற்ற ஜாதிப் பெயர்கள் இருக்கலாம் என்று சொல்லுகிறீர்களா? பள்ளிகளில் மட்டும் ஜாதி கேட்கிறார்களே?
இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள் உண்மையிலேயே ஜாதி ஒழிய வேண்டும் என்ற அக்கறையுடன் கேட்ப்தாகக் கருதிக் கொண்டே நாங்கள் இந்த பதிலைத் தருகிறோம். (பலர் குதர்க்கத்திற்காக இக்கேள்வியைக் கேட்டுக் கொண்டே, சமூகத் தளத்தில் ஜாதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நாணயமற்றவர்களாகக் கருதி அவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை -இங்கு!)

இரண்டாவது கேள்விக்கு முதலில் பதில் சொல்லிவிடுகிறேன். பலமுறை சொல்லி இருந்தாலும் கூட. நோய் இருக்கும்வரை அதற்கான மருந்து வேண்டும் என்றால் நோயைச் சொல்லித்தான் மருந்தைக் கோரமுடியும். எதன் அடிப்படையில் ஒடுக்கப்பட்டார்களோ, அதன் அடிப்படையில் தான் தீர்வு தரவேண்டும். இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தற்காலிகமாக சான்றிதழ் கேட்கப்படுகிறது. சான்றிதழ் இருப்பதால் ஜாதி வாழவில்லை. ஜாதிச்சான்றிதழ் இல்லாத காலத்தில் தான் அதன் கொடுமைகள் அதிகம் இருந்தன. ஜாதி - சமூகத்தில் வாழ்கிறதே தவிர, சான்றிதழில் வாழவில்லை. ஜாதிச் சான்றிதழ் மட்டும் தேவையில்லை என்று சொல்லும் பலரின் வீடுகளில், திருமணங்களில், மனங்களில், சமூகத்தில் ஜாதி பெரும்பலத்துடன் கோலோச்சுகிறது. சமூகத்திலிருந்தும், சட்டரீதியாகவும் ஜாதி ஒழிக்கப்படும் போதோ, அல்லது மக்கள் மனங்களில் இருந்து ஜாதி நோய் நீங்கினாலோ ஜாதிச்சான்றிதழுக்கு அவசியமே இல்லாமல் போய்விடும்.

இப்போது முதல் கேள்விக்கு வருகிறேன்.
ஜாதிப் பெயர் மட்டுமல்ல, ஜாதியே இருக்கக் கூடாது என்பது தான் எங்கள் நோக்கம் - கொள்கை. அதற்காகத்தான் பெரியார் அரசியல் சட்டத்தைக் கொளுத்தினார். எல்லா ஜாதிப் பெயர்களும் பொது இடங்களில் பயன்படுத்தப்படக் கூடாது. வீதிகளில் உள்ள ஜாதிப் பெயர்களையே நீக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலேயே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல, அனைத்து பொது நிறுவனங்களிலும் இருக்கும் அனைத்து ஜாதிப் பெயர்களும் நீக்கப்படவேண்டும். அதற்கான கட்டம் வரும்பொழுது அது அய்யர், அய்யங்கார், தேவர், முதலியார், நாயுடு, கோனார் உள்ளிட்ட அனைத்து ஜாதிப்பெயர்களுக்கும் எதிரானதாகவே அது இருக்கும்.

அந்த சமயத்தில், மேற்கண்ட கேள்வியைக் கேட்டவர்களும் ஆர்வமுடன் அதில் பங்கேற்பார்கள். ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம்.

முக்கியக் குறிப்பு: பிராமணாள் கபே பெயர்ப்பலகை நீக்கப்பட்டது என்பது மட்டுமே எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சியைத் தரவில்லை! அதை அவர் ஏதேனும் நிர்ப்பந்தத்தின் காரணமாகக் கூட நீக்கியிருக்கலாம். அது எங்களுக்கு உண்மை வெற்றியல்ல. தான் செய்ததைத் தவறு என்று உணர்ந்து அவர் நீக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அந்த நாளும் வரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
 
நன்றி  : http://princenrsama.blogspot.in

No comments: