மூக்குத்திப் பூக்கள்
பொதிகைமலை
அடிவாரத்தில் நான் பிறந்து, வளர்ந்தாலும், தாமிரபரணி தண்ணீர் குடித்து வாழ்ந்து கொண்டிருந்தாலும்
இலக்கிய உலகில் எனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துத் தந்தது கரிசல் மண்தான்.
கரிசல்பூமியைச்
சேர்ந்த இலக்கிய மேதை திரு.கி.ராஜாநாராயணன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்தான் நான்
இந்த முன்னுரை எழுதும் அளவிற்கு உயந்துள்ளேன். எனவே கரிசல் பூமியில் அதுவும் கந்தகப்பூக்கள்
மூலம் வெளிவரும் இந்தக் கவிதைத் தொகுப்பை வாசகர்களுக்கு முன்மொழிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
‘ஹைக்கூ’ கவிதைகளைக் கரம்பிடித்துக் கொண்டுதான் ஆரம்ப
காலத்தில் நானும் இலக்கிய வீதியில் நடை பயின்றேன். ‘நிரந்தர மின்னல்கள்’, ‘நட்சத்திர
விழிகள்’ என்ற இரு கவிதைத் தொகுப்பு நூல்களும் பரவலான கவனிப்பை எனக்குப் பெற்றுத் தந்தன.
அதன்பின் உரைநடை தேவதையைக் கைப்பிடித்து இலக்கிய வீதியில் ஓடத் தொடங்கிவிட்டேன். உரைநடைக்குள்
வந்த பிறகு, கவிநடை பக்கம் இருந்த என் கவனம் திசைமாறிவிட்டது.
நண்பர்
கந்தகப்பூக்கள் ஸ்ரீபதியின் இந்தத் தொகுப்பு நூலில் இடம் பெற்றிருக்கும் ‘ஹைக்கூ சில
புரிதல்கள்’ என்ற கட்டுரை, தொகுதிகள் செல்லும் முன் ஒரு அழகிய தோரணம் போல் அமைந்து
உள்ளது. அடுத்து தொகுப்பின் ஒவ்வொரு பக்கத்தின் கீழும் ‘நான் ரசித்த ஹைக்கூ’ என்று
ஒரு ஹைக்கூவைப் பிரசுரித்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும். அந்தக் கவிதைகளுள்
எனது கவிதை ஒன்றும் இடம் பெற்றிருப்பதை நான் பெற்ற அங்கீகாரமாகக் கருதுகிறேன். அதனால்
கௌரவம் கொள்கிறேன்.
ஒருபெரிய
பாறையில் சிற்பம் செதுக்குவதற்கும் ஒரு அரிசியில் சிற்பம் செதுக்குவதற்கும் மிகுந்த
வேறுபாடு உள்ளது. ஹைக்கூ எழுதுவது அரிசியில் சிற்பம் செதுக்குவதைப் போன்ற நுட்பமான
காரியமாகும்.
புதுக்கவிதை எழுதுபவர்களுக்கு உரிய சுதந்திரம் ஹைக்கூ
கவிதை எழுதுபவர்களுக்குக் கிடையாது. வரிகள் சுருங்கச்சுருங்க வார்த்தைகள் குறையகுறைய
கவிதையின் கட்டுமானத்தில் கஷ்டம் ஏற்படும்.
ஹைக்கூ
ஜப்பான் தேசத்தில் இருந்து வந்திருந்தாலும், தமிழ் மண்ணில் இருந்து அது முளை விடும்
போது, தமிழ் இலக்கிய மரபுகளுக்கு உரிய அனைத்து விதமான் குணாதிசயங்களுடனும்தான் தமிழ்
இலக்கியத்தில் கால் பாவத் தொடங்குகிறது; செம்புலத்தில் பெய்த நீரின் நிறமும் சிவப்பாவதைப்
போல.
எங்கள்
வட்டாரத்தில் மானாவாரி பூமியில் மழைக்காலத்தில் ‘மூக்குத்தி’ என்றொரு தாவரம் வளரும்.
அத்தாவரம் பூக்கும் பூவிற்கு ‘மூக்குத்திப் பூ’ என்று பெயர். பெண்கள் மூக்கில் அணியும்
மூக்குத்தியின் வ்டிவத்தில் இருப்பதால் அந்தப் பூவை மக்கள் ‘மூக்குத்திப் பூ’ என்று
அழைக்கின்றார்கள் போலும்!
மூக்குத்திப்
பூ ஒன்றை உதிர்த்தால் அதிலிருந்து பத்திற்கும் மேற்பட்ட, சிறிய மூக்குத்திப் பூக்கள்
உதிரும். ‘ஹைக்கூ’வும் மூக்குத்திப் பூ போன்றதுதான். ஒரு ஹைக்கூவுக்குள் பல்வேறு கவிதைப்
பூக்கள் இருப்பதுதான்அக்கவிதையின் விசேசமே.
சிறகுகள் இருந்திருந்தால்
பறவைகளுடன் பறந்திடுவேன்
இந்த இரண்டு
வரிகளிலும் புதுக்கவிதை நயம் உள்ளது. இக்கவிதையின் ‘இரண்டு குடங்களுடன்’ என்ற மூன்றாவது
வரிதான் இதை ஹைக்கூவாக மாற்றுகிறது.
‘சூதாட்டம்’
என்பது ஒரு காலத்தில் அனுமதிக்கப்பட்டது. அதை ஒரு கலையாக அந்தக் காலத்தில் பயின்றார்கள்.
அரசர்கள் சூதாடுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார்கள். மனைவியை வைத்து தர்மன் சூதாடினான்
என்ற புராண மரபுச் செய்தியை கந்தகப்பூக்கள் ஸ்ரீபதியின் ஹைக்கூ புரட்டிப் போடுகிறது.
சூதாட்டம்
மனைவியை வைத்தாடினான்
சிறையில் அடைக்கப்பட்டான்
தர்மன் மனைவியை வைத்துச் சூதாடியதை கதிரை வைத்திழந்தான்
– அண்ணன் கையை எரித்திடுவோம்! என்று பாரதி, பீமனின் குரலில் விமர்சித்தான். கந்தகப்பூக்கள்
ஸ்ரீபதி அதுவே சட்டப்படி குற்றம், தண்டனைக்கு உரிய செயல் என்று பேசுகிறார்.
அழகாய்ச் சிரித்தது
பூ ஒன்று
பெயர் தெரியாவிட்டால் என்ன்?
எந்தக்
குழந்தை சிரித்தாலும் அழகுதான். இரத்த சம்பந்தமான குழந்தை சிரித்தால் அது பேரழகு. இப்படி
பலவாறு அந்தக் கவிதை சிந்திக்கத் தூண்டுகிறது.
தெருவுக்குள் நுழைந்த யானை
தொடரும் குழந்தைகள்
அச்சத்தைச் சுமந்த படி
என்ற ஹைக்கூவின்
கடைசி வரி அச்சத்தையும் சந்தோசத்தையும் சுமந்த படி என்றும் இருக்கலாம்.
எல்லா மகரந்தத் தூள்களும் சூலகம் சென்று சேர்வதில்லை.
அப்படிச் சேர்ந்த மகரந்தங்களெல்லாம் கனியாவதில்லை. ஹைக்கூக்கள் என்ற பெயரில் எழுதப்படுகிற
கவிதைகளில் பல வெறும் வசனங்களாய்ப் போய் விடுவதுமுண்டு.
எந்தத் தொகுப்பிலும் இந்த விபத்து நிகழ இடமுண்டு.
அடித்துக் குமித்த நெல் அம்பாரத்தில் பதர்களுக்கும் இடமுண்டு. கந்தகப்பூக்கள் ஸ்ரீபதியின்
இந்தத் தொகுப்பும் அதற்கு விதிவிலக்கல்ல
ஹைக்கூ
எழுதுவது என்பது கத்தி மேல் நடப்பதைப் போல ஆபத்தானது. கரணம் தப்பினால் மரணம்தான்.
நண்பர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதியின் இந்நூலை நான்
மீண்டும் தமிழ் ஹைக்கூ நேசர்களுக்கு முன்மொழிகிறேன். கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி மேலும்
மேலும் உழைத்து தமிழ் இலக்கிய உலகில் தடம் பதிக்க
வாழ்த்துக்கிறேன்.
வாழ்த்துக்கிறேன்.
அன்பன்
கழனியூரன்
கழுநீர்குளம்
திருநெல்வேலி
மாவட்டம்-627861
9443670820
No comments:
Post a Comment