நூல் விமர்சனம் : ஆதாம் எலும்பில் ஏவாள்
அல்ல
ஆசிரியர்: கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி
நல்ல கவிஞராகவும், சிறுகதையாளராகவும் அறியப்படும் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதியின்
இரண்டாவது கவிதைத் தொகுப்பே ‘ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல’ தொகுப்பாகும். ஸ்ரீபதியின்
‘கந்தகப்பூக்கள்’ மூலம் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
‘உணர்வுகளின் மொழி கவிதை’ என்பார்கள். கோபம் என்ற உணர்வை அதிகம் மொழி பெயர்த்திடும்
தொகுப்பாக இத்தொகுப்பு திகழ்கிறது. தொகுப்பின் அட்டைப்படம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொன்.குமாரின் அணிந்துரை இந்நூலுக்கு சிறப்பு சேர்த்துள்ளது.
தொப்பிலுள்ள முதல் கவிதையான ‘அழைப்பிதழ்கள் வரவேற்பதில்லை’ நல்லதொரு யதார்த்த
சுவையை வாசிக்கின்ற வாசகருக்கு ஏற்படுத்துகிறது.
‘வாழ்த்துக்களை
விட
பற்று வரவு நேர்
செய்யும்
நாளை சொல்லி வரும்
‘அழைப்பிதழ்கள்
வரவேற்பதில்லை’
என்ற வரிகள் திருமண வீடுகளில் நடைபெறும்
மொய் செய்யும் மக்களின் யதார்த்தமாய் பதிவு செய்துள்ளது.
‘நிறைந்திடு தமிழே’ என்ற தலைப்பில் அமைந்த கவிதை – மரபுக்கவிதையின் சிறப்புகளாக
‘சீர்,’ மா, விளம், காய், கனி, அசை, எதுகை, மோனை, தொடை, அடி, சந்தம், பா, அணி போன்றவற்றை
சிறப்பாய் புதுக்கவிதை நடையில், அதே சமயம் மரபுக்கவிதை போல் ஓசை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள
சிறப்பானதொரு கவிதையாகும்.
இத் தொகுப்பின் சிறந்த கவிதையாக ‘நவீன இராமாயணம்’ என்ற கவிதை விளங்குகிறது.
‘இந்திய சீதை அழுது
கொண்டே இருக்கிறாள்
அமெரிக்க அசோக வனத்தில்
– எதற்காக இந்திய சீதை அழுகிறாள்? அடிக்கடி
உயர்த்தப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வாலா? ஊழல் பிரச்சனையாலா? நில ஆக்கிரமிப்புகளின்
படையெடுப்பு காரணத்தினாலா? என்ற பல கேள்விகளை இக்கவிதை நம்முள் எழுப்புகிறது. இக்கேள்விக்கான
விடையை நம்முடைய ஆட்சியாளர்களிடம் கேட்டால், “என் மெளனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள்
உள்ளது” என்று பஞ்ச் டயலாக் பேசுவார்கள். ஆக இந்த ஆளும் அரசு அடித் தட்டு மக்களுக்கான
அரசாக இல்லை. மேல் தட்டு மக்களுக்கான அரசாகவே உள்ளது. வெள்ளையர்களிடம் பெற்ற சுதந்திரம்
கொள்ளையர்களிடம் சிக்கிய பூமாலையாக உள்ளது. இந்த நிலையை எண்ணியே இந்திய சீதை அழுது
கொண்டே இருக்கிறாள். இக்கவிதையின் நிறைவு வரிகளில் ஸ்ரீபதியின் கலக குரல் மிக அருமையாக,
‘இந்த ஜன நாயக தாலியை
கழற்றி எறிந்து
அழுகையைத் துடைத்து
கற்பை நிலை நாட்டும் நாள்
வெகுதூரம் இல்லை
என்பதை உணரத் தொடங்குகிறாள்
சீதை
– என்று எதிரொலிக்கிறது.
திருப்பதியும், முருகனும் மேல் தட்டு சாமிகளாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஆனால் கிராமங்களில் வெட்ட
வெளியில் வணங்கப்படும். அய்யனார்கள் சிந்துவாரற்று கிடக்கிறார்கள்.
‘நாம் இங்கே வெயிலும் மழையிலும்
நாதியற்று நிற்கும் போது
நமது பக்தர்கள் புரியாமல்
‘அவாள்களின்’ கோவிலுக்குப் போய் படியளப்பதனால்
அங்கே படிகளும் தங்கமாய் மின்னுகிறதே...
அய்யனார்கள்’
-என்ற வரிகள் சிறு தெய்வங்களிடயே நிலவியுள்ள
‘தீண்டாமை’ என்னும் அவலத்தை நன்கு உரக்க பேசுகிறது.
‘பொங்கி...’ கவிதை காவிரி நதி நீர் அரசியலை சாட்டையடியாய் விளாசியுள்ளது.
‘உழுதவன் கணக்குப் பார்க்கக் கூடாது
சரிதான்
உயிர்களைக் கூடவா
கர்நாடகத்து கமண்டலத்தை
எந்த காகமாவது
விரித்து விடாதா
- என்ற வரிகள் சமகால அரசியலை அருமையாய்
வெளிப்படுத்தியுள்ளது.
‘சீதைக்காவது வா’ ‘உனக்காக ஒரு கவிதை’ போன்ற கவிதைகள் காதலைக் கொண்டாடுகிறது.
சில மரபுக் கவிதைகளும், சில பாடல்களும் தொகுப்பில் தலை காட்டுகின்றன. தொகுப்பில் உள்ள
சில வழக்கமான காதல் குறுங்கவிதைகளைத் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில்
அக்காதல் கவிதைகள் தொகுப்பின் சீரான வேகத்தை தடை செய்யும் கவிதைகளாக உள்ளது.
மொத்தத்தில் இத்தொகுப்பு வாசிப்போரை தன் வசப்படுத்திடும் மந்திர கோலைக் கொண்டுள்ள தொகுப்பு. இன்னும் கவிதைத்
துறையில் ஸ்ரீபதி பல தளங்களில் முத்திரை பதிக்க வேண்டுமென ஒரு தோழமை கவிஞராக ஆசைப்படுகிறேன்.
விலை ரூபாய் 60/-
பக்கம் 80.
விமர்சனம் ஆக்கம்
: நீலநிலா செண்பகராஜன் , விருதுநகர்.
பேச:9488001251
நூலின் முகவரி : கந்தகப்பூக்கள்
பதிப்பகம்
120 – குட்டியணஞ்சான்
தெரு,
சிவகாசி. – 626123
செல்லிடபேசி - 9843577110
No comments:
Post a Comment