Friday 28 September, 2012

கிருஷ்ணன் காத்திருக்கிறான்

திருப்பூரிலிருந்து வெளிவரும் கனவு இதழ் (எண் 69, ஜூலை 2012) பக்கம் 28ல் வெளியாகியுள்ள கிருஷ்ணன் காத்திருக்கிறான் என்ற எனது கவிதை


இப்போது அழைப்பாள்
இப்போது அழைப்பாள்
இப்போது அழைப்பாள்
பதைபதைப்போடு
நீளமான சீலையோடு
காத்திருக்கிறான் கிருஷ்ணன்!

கரங்களை விரித்து

அபயம் அபயம் என
அலற வேண்டியவளோ...

நிமிர்ந்த நன்னடை போட்டு
நேர்கொண்ட பார்வையோடு
பீமனின் கதையைப் பிடுங்கி
துச்சாதனன் தலையை...

அர்ச்சுனன் காண்டிபம் எடுத்து
துரியோதனன் நெஞ்சை...

ஒளிய ஓடிய சகுனிக்கு
ஏதுமறியாது கிடந்த பகடைகளை...

துணிவற்ற சபையோருக்கு
காரி உமிழ்ந்த எச்சிலை
பரிசாக்கி சிரித்தாள்!

அச்சிரிப்பு
எத்திசையும் விரிந்து
பாண்டவர் சங்கை நெரிக்க
அபயம் அபயம் என்ற
அலறல் ஒலி!

எல்லாம் மாயை
எல்லாம் மாயை
தனக்குள் உச்சாடனம் செய்தபடி
மறைந்திருந்து...
காத்திருக்கலானான் கிருஷ்ணன்...

கீதா உபதேசத்தை(?)
எப்படி வெளியிடுவதெனும்
கேள்வியுடன்!!

- கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி