கனவையும்
நனவையும் பிசைந்து
இன்றைய சிறுகதை விசாலங்களுக்குள் சுதந்திரமாக
அலைய வேண்டுமா,”துணங்கைக்கூத்து” என்னும் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதியினுடைய இந்த சிறுகதை
உலகத்தினுள் நுழையுங்கள். சிவகாசிக் கொடும் வெயிலையும், ஹாஹீஷண்ட் என்னும் மேற்கத்தியக்
கடுங்குளிர் நகரின் நடுக்கத்தையும் ஒரே நேரத்தில் உணர வேண்டுமா, தன் கடும் உழைப்பால்
இந்த இரண்டு எல்லைகளையும் இணைத்து முடிச்சுப் போடக் குட்டிக்கரணமடிக்கும் ஒரு அப்பாவி
இளைஞனின் பரிதாப வாழ்க்கை கொடுஞ்சுரண்டல் என்னும் சமூக பயங்கரத்துக்குள் சிக்கிச் சின்னாபின்னப்படும்
கோரக் காட்சியைக் கண்டு குமுற வேண்டுமா, அல்லது துணை இழந்த முதியவர் ஒருவர், ஏக்கத்தோடு
வாழ்த்தும் சோகத்தைக் காண வேண்டுமா, காமவெறிச் சாமியார்கள் வேள்வி என்னும் திரைமறைவில்
நடத்தும் களியாட்டங்களின் மிருகத்தனத்தைச்
சற்றே உற்றுப் பார்க்க வேண்டுமா? குளத்தப்பன் சமாதி தெய்வீகப்படுத்தப்பட்டு, அதன் மீது
வைதீகச் சாயம் பூசப்பட்டு, தனித்தனி முகங்கள் கொண்ட மனிதர்கள் மந்தைகளாக்கப்படும் விந்தையை
ரசிக்க வேண்டுமா, மக்கள் நலனைப் பேணுவதற்காக அமைக்கப்பட்ட அரசு தன் முழு கவனத்தையும்
செலுத்தி சாராயக் கடையை நடத்தி, குடிமக்களை நிசமான குடிகார மக்களாக்கும் ஜனநாயக அதிசய
அற்புதத்தைக் கண்டு பரவசப்படவேண்டுமா, இந்தத் தொகுப்பினுள் அலைந்து திரியுங்கள்.
இன்னும் எத்தனை எத்தனையோ காட்சிகளை இதனுள் காணலாம்.
தான் மறந்து போன தமிழைத் திரும்பக் கற்றுக் கொள்வதற்காக விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி,
சிவகாசி நகருக்குள் அலைந்த கடவுளை, ஆத்திகக் கவிதை எழுதி சாதனை படைக்கும் நாத்திகக்
கவிஞன் ஞானனைத் தேடி ஆசாமிமார் காலனிக்கு ஆற்றுப்படுத்தப்படும் காட்சியைப் படிக்கையில்
ஆஹா, கந்தகப்பூக்கள் ஸ்ரீபதியினுள் ஒரு புதுமைப்பித்தன் எழுந்து நின்று இப்படிக் கூத்தாடுகிறாரே
என அதிசயிக்கத்தோன்றும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல,”கனவுகளின்
கனவு” என்னும் ஒரு கதை. கனவுகளின் கதை இது. விதவிதமான மனிதர்களைப் போல அவர்களுக்கென
அலையும் விதவிதமான கனவுகள். பெயருள்ள உயிருள்ள கனவுகள்.தூங்கும் மனிதர்களுக்கு ஓட்டிக்காட்டுவதற்காக
அக்கனவுகள்.தம் கைகளில் கொண்டு திரியும் விதவிதமான கனவுப்படச்சுருள்கள். தனக்குரிய
மனிதர் எப்போது தூங்குவார், தூக்கத்தின் உச்சத்தில் கனவு காணும் தயார் நிலைக்கு எப்போது
வருவார் என்று காத்திருந்து சலிப்படையும் கனவுகளின் வாழ்க்கை. இரவு ஷிப்டிக்காரத் தொழிலாளி
பகல் தூக்கத்தின்போது, எப்போது கனவுக்கு தயாராவார் எனக் காத்திருக்கும் பகற்கனவுகள், குடிகாரனுக்குச் சரியாகக் கனவுப்படம்
ஓட்ட முடியாமல் தத்தளிக்கும் வேறு சில கனவுகள், நஞ்சு குடித்துச் செத்துப்போக இருக்கிற
கருப்பையாவுக்கு இனி படம் ஓட்டிக்காட்டவே முடியாதே என்ற கவலையில் ஏங்கும் கருப்பையாவின்
கனவு... இப்படியாகக் கனவிலேயே அலையும் கதை, முடியும் போது படிப்பவரை நிசத்தை நோக்கி
உசுப்பிவிடுகிறது.
கனவுகளுக்கிடையே ஒரு குழப்பம். அவை உரையாடுகின்றன.
“ஏய்! என்னப்பா பிரச்சனை?”
“படச்சுருள் இல்லையாம் –பா”
“என்னப்பா சொல்றீங்க?’’
“அவனுங்க என்னதான் செய்வாங்க? எல்லாரும்
ஒரே மாதிரியான படச்சுருளைக் கேட்டால்?’’
“அப்படி என்னப்பா கேட்கிறாங்க எல்லாரும்?’’
“ஒண்ணும் இல்லப்பா... மூணு வேளைச் சோறு,
உடுத்துறதுக்குத் துணிமணி, இருக்கிறதுக்கு ஒரு வீடு, பிள்ளைங்களுக்குப் படிப்பு. வயசானவங்களுக்கு
மருத்துவ வசதி...’’
“அதுதான் –பா எனக்கு வேணும்’’
ஆக, கனவுகளின் கனவு என்ன? இன்னும் நிறைவேறாத
மனிதகுலத்தின் இந்த நெடுங்கனவுதான்!
இன்னும்
எவ்வளவோ இருக்கிறது சொல்ல. அறிவியல் வினோதங்களிலிருந்து. அன்றாட காட்சிகளின் அவலங்கள்
வரை வாழ்வின் குரூரங்களைத் தனக்கே உரிய நையாண்டி மொழியில் இந்தக் கதைகளில் வரைந்து
காட்டியிருக்கிறார் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி. மொழி அவருக்குரியது. காட்சிப்படுத்தும்
முறை அவருக்குரியது. கதைகளின் உள்ளே கேட்கும் குரல் அவருக்கேயுரியது. கவிதைத் தொகுப்புகள்
மூலமும், சிறுகதைத் தொகுப்புகள் மூலமும் ஏற்கனவே தமிழ் இலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகமாகியுள்ள
கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, இந்தத் தொகுப்பின் மூலம் மேலும் ஒரு வலுவான எட்டு எடுத்து வைத்திருக்கிறார். இந்த இளம்படைப்பாளிக்கு வளமான
எதிர்காலம் காத்திருக்கிறது என்பதைச் சொல்லுகிறது இது. கலை இலக்கியப் பெருமன்றக்காரரின்
இந்தத் தொகுப்பையும் மனிதநேய இலக்கிய உலகம் உற்சாகமாக வரவேற்கும், படைப்பாளியை கந்தகப்பூக்கள்
ஸ்ரீபதியை வாழ்த்தும்.
பொன்னீலன்
15/3,மணிகட்டிப் பொட்டல்,
கன்னியாகுமரி
– 629501.
94437-91644
No comments:
Post a Comment