Saturday 9 August, 2008

பூக்களைப் பறிக்காதீர்கள்

நித்தம் சிரிக்கும்
அழகான பூஞ்செடியே...

நாளை சருகாகும்

பூவொன்றைத் தருவாயா?


உன்னைக் கிள்ளுவது

என்தனது எண்ணமல்ல...


ஓரிடத்திலேயே
உனதருமை
உறைந்திடாது இருக்கவே

உனைநான் சூடிக்கொண்டு

உலாவரும் வரம் கேட்கிறேன்!


என்னினும் அழகான
சின்னஞ்சிறு பெண்பூவே...
உடனே சூடிக்கொள்
கிள்ளுவதற்கு கலங்காதே!

அலங்கரிப்பதாய் எண்ணிக்கொண்டு
பெரிய கத்திரியால் புண்ணாக்கும்
மீசைக்காரன் வரும் முன்னே
என்கனவை நிறைவு செய்!!

கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி

98435 77110

Tuesday 5 August, 2008

காதல் விருட்சம்



வெறும் சதை என்று
வியாக்கியானம் பேசித் திரியும் என்னுள்
எப்படி நீ
விதையானாய்?

பாறையாய் இறுகி இருந்த என்னுள்
எப்போது நீ
உன் வேர்களை நுழைத்தாய்?

உத்தரவில்லாமல்
என் கனாக்களில்
பூவாய் சிரித்து
ஏனடி நீ
உலா வருகிறாய்?

ஒற்றுக்களே சரியாகத் தெரியாத என்னுள்
கவிதைக் காய்களை
பழுக்க வைத்தது எவ்வாறு?

என்னைச் சுற்றிலும்
விருட்சமாக வளர்ந்து
சுகமான தனிமைச் சிறையில்
என்று எனை அடைத்தாய்?

உன் நிழல் ஒன்றே
என் வாழ்க்கை என
மாறிப் போனது எந்தத் தருணத்தில்?

எல்லாம் சரிதான்
உனக்கு மட்டும் ஏனடி
மிதி்த்துச் செல்லும்
தரைபடர் புதராகிப் போனேன்
நான்?