(நவம்பர்
18,2012 ஜனசக்தியில் வெளியான நூல் அறிமுகம் பகுதியில்)
இந்நூல் உலகியலை நடப்பியலுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது.
இலங்கையில் போர்களத்தில் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதைத் தெரிவித்துள்ளபோது,பிணங்களை
மட்டுமல்லாது பேய்களையும் பாலியல் வன்முறை
செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. பிணங்களையும் பேய்களையும் விடாத பேய்பயல்கள் மக்களை என்ன
செய்திருப்பார்கள் என்று கற்பனை செய்யத் தோன்றுகிறது.கலிங்கத்துப் பரணியில் காளியும்
கூளியும் பிண்ந்தின்னக் காத்திருக்கும் காட்சிகளைக் கண்முன்னே கொண்டு வந்துள்ளார் கதையாசிரியர்.
சாதிய
ஒடுக்குமுறையை எதிர்த்துப் போரிட்ட ஒரு வீரனின் புதைவிடத்தில் சடங்குகள் நடத்துவதற்குப்
பிராமணப் புரோகிதரின் எதிர் பார்த்திருப்பது
காலத்தின் கோலத்தைக் காட்டுவதாகும். ஒரு காலத்தில் ஆரிய ஆதிக்கம், சமஸ்கிருத மயமாக்கம்
என்றெல்லாம் அபயக்குரல் எழுப்பியதுடன் இந்தி
எதிர்ப்புப் போர் நடத்திய தமிழகத்தில் அமைதியாக சமஸ்கிருத மயமாக்கம் பெயர் சூட்டும்
முறையில் நடந்துகொண்டிருக்கிறது. இப்போது யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நாமாகவே முன்வந்து
வலையில் விழுந்து கொண்டிருக்கிறோம்.
பணம் ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள் என்று அலைந்துகொண்டிருக்கும்
இளைங்கர்களின் வெளிநாட்டு வேலைக்கனவு எவ்வளவு கொடுமையானது என்பதை ஒரு கதை விளக்குகிறது.
காய்ச்சலில் கிடந்தால் வெந்நீர் வெதுப்பித் தருவதற்குக் கூட ஆள் கிடையாது. பணம் மட்டும்
இருந்து எதற்கு என்று வினாத் தொடுக்கிறது ஒரு கதை. நம் நாட்டில் கிடைக்கும் சம்பளத்துடன்
வெளிநாட்டில் கிடைப்பதை ஒப்பிடும்போது அது அதிகமாகத் தெரிகிறது. ஆனால் அந்த நாட்டில்
ஒருவனுக்கு கொடுக்கப்படுவதை ஒப்பிடாமல் இது மிகக் குறைவு என்று தெரியும். அப்படித்
தெரிய வரும்போது மனம் உடைந்துபோகிறது.
காதல், ஆன்மீகம், மாயம், அதிவிரைவான முன்னேற்றம்,
கனவுப் பாட்டுடன் ஒரேநாளில் உச்ச நிலைக்குச் செல்லுதல் இப்படிச் செல்லும் இப்போதைய
தமிழகக் கதைக்களகத்தில் உண்மையையும் நடப்பையும் மக்களறிய எடுத்தியம்பியுள்ளது இந்நூல்.
காதல் கதையிலும் ஒரு மென்மையான கதையைச் சொல்லியிருக்கிறார்
ஆசிரியர். அது மனத்தில் உள்ளதை வெளியில் சொல்லிவிட்டால் உறவு கெட்டுவிடுமோ என்று எண்ணும்
வகையைச் சேர்ந்தது.
வெயிலில் அலையும்போதுதான் நிழலின் அருமை தெரியும்
என்பார்கள். அதுபோல ஒருவருக்கு உணவு கொடுத்து உடை துவைத்து, உடல் நலம் பேணி எப்படியெல்லாம்
அவர் மனைவி பணிவிடையாற்றுகிறாள் என்பது ஒரு கதையில் விளக்கப்பட்டுள்ளது. அவள் இறந்தபோதுதான்
அருமை அவருக்குப் புலப்படுகிறது.
இலக்கிய நடையில் சில கதைகள் மிளிர்கின்றன. வட்டார
நடையில் சில கதைகள் விளங்குகின்றன. எளிய இனிய சொற்களில் இக்காலத்து மக்களுக்கு எடுத்துக்
கூற வேண்டியவற்றை எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர். யார் மனமும் புண்படாதபடி மனிதர்களின்
உணர்வுகளை நிகழ்வுகளாலும் எண்ணங்களாலும் விவரித்துள்ளார்.
- சே. பச்சைமால் கண்ணன்
No comments:
Post a Comment