Saturday, 9 August 2008

பூக்களைப் பறிக்காதீர்கள்

நித்தம் சிரிக்கும்
அழகான பூஞ்செடியே...

நாளை சருகாகும்

பூவொன்றைத் தருவாயா?


உன்னைக் கிள்ளுவது

என்தனது எண்ணமல்ல...


ஓரிடத்திலேயே
உனதருமை
உறைந்திடாது இருக்கவே

உனைநான் சூடிக்கொண்டு

உலாவரும் வரம் கேட்கிறேன்!


என்னினும் அழகான
சின்னஞ்சிறு பெண்பூவே...
உடனே சூடிக்கொள்
கிள்ளுவதற்கு கலங்காதே!

அலங்கரிப்பதாய் எண்ணிக்கொண்டு
பெரிய கத்திரியால் புண்ணாக்கும்
மீசைக்காரன் வரும் முன்னே
என்கனவை நிறைவு செய்!!

கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி

98435 77110

Tuesday, 5 August 2008

காதல் விருட்சம்



வெறும் சதை என்று
வியாக்கியானம் பேசித் திரியும் என்னுள்
எப்படி நீ
விதையானாய்?

பாறையாய் இறுகி இருந்த என்னுள்
எப்போது நீ
உன் வேர்களை நுழைத்தாய்?

உத்தரவில்லாமல்
என் கனாக்களில்
பூவாய் சிரித்து
ஏனடி நீ
உலா வருகிறாய்?

ஒற்றுக்களே சரியாகத் தெரியாத என்னுள்
கவிதைக் காய்களை
பழுக்க வைத்தது எவ்வாறு?

என்னைச் சுற்றிலும்
விருட்சமாக வளர்ந்து
சுகமான தனிமைச் சிறையில்
என்று எனை அடைத்தாய்?

உன் நிழல் ஒன்றே
என் வாழ்க்கை என
மாறிப் போனது எந்தத் தருணத்தில்?

எல்லாம் சரிதான்
உனக்கு மட்டும் ஏனடி
மிதி்த்துச் செல்லும்
தரைபடர் புதராகிப் போனேன்
நான்?

Friday, 25 April 2008

நூல் கைகொண்டு வாழ் - பாண்டூ

மனிதா! எழுந்து வா!

என்னை விரித்து விட்டுத்
தூங்கிவிடாதே...
நான் ஒன்றும்
உன் படுக்கையல்ல!

என்னை மூடிவிட்டு
விழிப்போடு இருப்பதாய்
மமதை கொள்ளாதே...
ஏனென்றால்
நான்தான் உன் இமை!

மனிதா வா!
என்னுள் தொலைந்து போ!
நீ தேடுவது எல்லாம்
என்னுள் புதைந்து கிடக்கிறது...
நீ தொலைத்தது எல்லாம்
என்னுள் நிறைந்து கிடக்கிறது...

ஆம்
அனுபவங்களின் தொகுப்பு நான்!
அறிவின் விரிப்பு நான்!

வா!
உனது பயணத்தில்
என்னைத் துணை கொள்...
அந்தச் சூரியனை விட
பிரகாசமானவன் நான்!
எந்த இருட்டிலும்
பயப்படாதே...
நான் உன்னுடன்
இருக்கிறேன்!

என்னைப் படி...
நான் உனக்கொரு
ஏணிப்படி!

என்னைப் பார்...
உன்னைச் சரிசெய்!
நான் உனக்கொரு
கண்ணாடி!

வா! மனிதா வா!
உனது நண்பன் நான்...
என்னைத் தேர்ந்தெடுப்பதில்
கொஞ்சம் கவனமாய் இரு!

உனது காதலி நான்
என் மேல் ஆசை கொள்!

உனது துணைவி நான்
என் கரம் பற்று!

காகிதப்பூ நான்!
உன் கையில் மலரும்
காகிதப்பூ நான்!

ஆயினும் என்ன...
வா! கையில் ஏந்து!
என்னை வாசி...
என்னை சுவாசி...
என் வாசம்
உன் சுவாசம் வைர நீங்காது!

வா!
என் இதழைத் திற!
தேனைப் பருகு...
நீ சந்திக்கும்
ஒவ்வொரு மனிதனும்
ஒரு புத்தகமே...
அவனுள் என்
மகரந்தந்தைப் பரப்பு!

வா! பக்கம் வா!
என்னை ஒவ்வொரு
பக்கமாய் புரட்டு
முடிவில்
உன்னை நான்
புரட்டிப் போட்டிருப்பேன்!!

- பாண்டூ
சிவகாசி, தமிழ் நாடு, இந்தியா.
செல்லிடப்பேசி: +91 98436 10020

சிவகாசியில் இருநாள் இலக்கியத் திருவிழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டக் கிளையின் சார்பில் முதன் முறையாக இருநாள் இலக்கியத் திருவிழா முஸ்லீம் தொழில் வர்த்தகர் சங்க திருமண மஹாலில் பிப்ரவரி 16 மற்றும் 17 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருதினங்கள் கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் ஞானக்குயில் கவிஞர் செ.ஞானன் தலைமை வகித்தார். மாவட்ட கெளரவத் தலைவர் குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கவிபாரதி பா.முருகேசன் அனைவரையும் வரவேற்றார்.

மாநில பொதுச் செயலாளர் கவிஞர் இரவீந்திரபாரதி அவர்கள் விழாத் தொடக்க உரையாற்றினார். காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் இயக்குனர் திரு. ஏ.எஸ்.பி.ஆறுமுகச் செல்வன் அவர்களும் ஜெயம் ஆப்செட் பிரிண்டர்ஸ் உரிமையாளர் திரு. கே.வி.சங்கர் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

ஞானக்குயில் இசைக்குழுவின் இன்னிசையுடன் விழாத் தொடங்கியது. திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழக தமிழ்த்துறை பேராசிரியர் பா.ஆனந்தக்குமார் அவர்கள் சிறுகதையும் சமூக நோக்கும் என்ற தலைப்பிலும், வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் வரலாற்று உண்மைகள் என்ற தலைப்பிலும் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியம் அவர்கள் நாட்டார் இலக்கியம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.

கந்தகப்பூக்கள் ஸ்ரீபதியின் பறவையாடிப் பழகு என்ற சிறுகதை நூலும், பா.முருகேசன் மற்றும் கொ.மா.கோதண்டம் ஆகியோர் எழுதிய பழமொழிகள் புது உண்மை விளக்கம் என்ற நூலும் விழாவில் வெளியிடப்பட்டன. ஓய்வு பெற்ற பேராசிரியை பொ.நா.கமலா அவர்களின் ரோஜாவுக்கு என்ற கடித இலக்கிய நூலும் இராசை கண்மணிராசாவின் டட்ட டய்ங் என்ற கவிதை நூலும் கவிஞர் யுவபாரதியின் காகிதப்பூ என்ற கவிதை நூலும் பாண்டூவின் வெள்ளை இரவு என்ற கவிதை நூலும் அறிமுகம் செய்யப்பட்டன.

கல்லூரிகளில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்று கவியரங்கில் பங்கேற்ற மாணவிகளுக்கு கே.ஆர்.அன் கோ உரிமையாளர் திரு.டி.கந்தசாமி அவர்கள் பரிசுகள் வழங்கினார். ரித்திகா நாட்டியாலயா. கலைவாணி நடன வித்யாலயா மற்றும் சிவபாதாஞ்சலி நாட்டிய கலாலயம் ஆகிய நடன பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியரின் நாட்டியங்கள் அரங்கேறின. மேலும் நடன அரங்கில் பங்கேற்ற குழந்தைகளுக்கு ஸ்ரீ பாண்டி முனீஸ்வரன் டிரேடர்ஸ் உரிமையாளர் திரு.ஜே.டி.ஆறுமுகச்சாமி அவர்கள் பரிசுகள் வழங்கினார்.

மாவட்டப் பொருளாளர் டாக்டர் ஆர்.எம்.ஆர்.சாந்திலால் அவர்கள் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நடத்தினார். கல்லூரி மாணவர்களின் சிலம்பாட்டம், நீலநிலா கலைக் குழுவினரின் கிராமிய நடனம் சிறப்பாக நடைபெற்றன.
இவ்விழாவில் விருதுநகர் மாவட்ட அனைத்துக் கிளைகளின் செயலாளர்கள். தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவைச் செயலாளர் பேராசிரியர் சு.நயினார், எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் அறம். தமிழ்ச்சுடர் இலக்கியப் பேரவையின் செயலாளர் ராஜா சொர்ண சேகர். மேடைப் பாடகி ராஜேஸ்வரி. கலைச்சுடர்மணி அம்மாபட்டி பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவை விருதுநகர் கிளைச் செயலாளர் ஜெ.செண்பகராஜன் தொகுத்து வழங்கினார். விழா ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எழுத்தாளர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி நன்றி கூற விழா தேசியகீதத்துடன் இனிதே நிறைவுற்றது.

தலையங்கம்

வணக்கம்.

மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறோம். இனி இதுபோல் இடைவெளி இல்லாமல் வெளியிட முயற்சிப்போம் என எப்போதும் போல் இப்போதும் கூறிக் கொள்கிறோம்,

இந்த முறை கவிஞர் பாண்டூ அவர்கள் எங்களோடு கைகோர்த்து இணைந்துள்ளார். இந்த மூவர் கூட்டணி முத்தாய்ப்பாய் பற்பல காரியங்கள் செய்ய வகைசெய்யும் என நம்புகிறோம்.

2001 டிசம்பரில் தொடங்கப்பட்ட கந்தகப்பூக்கள் சிற்றிதழ் விளம்பரங்கள் இன்றி சந்தா இன்றி இயங்கி வந்தது. 2005 செப்டம்பரில் மிகப் பெரிய சிறப்பிதழாக 3000 பிரதிகள் பல வண்ணத்தில் பல பக்கங்களில் அச்சிடப்பட்டு இலவசமாக சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்கியுள்ளது.

சமீபத்தில் ஆசிய பசுபிக் பொருளாதார மற்றும் சமூக சேவைகள் அமைப்பு அதன் 2008 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நீண்ட கால மற்றும் குறுகிய கால அடிப்படையில் இலங்கை வறிய நாடாக மாற்றம் பெற்று வருகின்றது என்றும். இந்தியா. பங்களாதேஷ், ரஷ்யா போன்ற நாடுகளும் வறுமையான நாடுகளாக மாற்றம் பெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது. அஃதென்னவெனில் 60 சதவீத தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் விவசாயத்துறையை புறக்கணித்து வருவதுதான் என்கிறது. இனியாவது அரசு விவசாயத்தை அதிக கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்.

நன்றி. மீண்டும் சந்திப்போம்.

Saturday, 22 March 2008

அய்யனார்கள் மாநாடு

*
கெடா வெட்டி
சாராயம் வைத்து
தங்களை கும்பிட மட்டும் செய்து
குடித்து
தின்றுவிட்டு...

கடன்உடன் வாங்கி
யார்யார் சாமியோத் தேடிப்போய்
முடியையும் படியையும்
அளந்துவரும் பக்தர்களை எண்ணி
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
இவர்கள் அளக்கும் படிகளால்
அங்கே படிகளும்
தங்கமாய் மின்ன...

வெயிலிலும் மழையிலும்
வழியில்லாது நிற்பது குறித்து
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
அரிவாள் இருந்தும்
புண்ணியம் என்ன?
தங்கமும் காசும்
ரெண்டு பொண்டாட்டிகாரனுகளுக்குத்தானே போகுது
என்பதை எண்ணி
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
எல்லாச் சாமியும்
இந்துச் சாமி என்பது
தன் பக்தர்களுக்கு மட்டுந்தானா?

எந்த நாமக்காரனும்
பூணூல்காரனும்
எப்போதும் தன்னை
எட்டிப் பார்த்ததே கிடையாதே...

பக்தர்கள் பறிபோவதை
எண்ணி எண்ணி
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
பக்தர்களை மட்டும் சேர்த்துக் கொண்ட
பகல்வேசக்காரன்கள்
எப்போது தன்னையும் சேர்ப்பார்கள்
எனக் கனவு கண்டு
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
இனியும்
அரிவாளை மட்டும் தீட்டினால்
அனாதையாகி அழிந்து விடுவோம்
என்றஞ்சி
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
தங்களையும் நாயகர்களாக்கி
ஜகதலப் பிரதாபம் புரிந்ததாய்
எந்த பக்தனும் கதை புனையாததை
நினைத்து நினைத்து
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
நரியைப் பரியாக்கி
பரியை நரியாக்கி
கதை எழுதிவிட்டு
உட்கார்ந்து தின்று
கொழுக்கும் கூட்டம்
இன்று
தனது பரியையும் புலியாக்கி
அய்யன் ஆனார் எனப் புதுக்கதை கூறி
அய்யப்பன் ஆக்கிடத் துடிக்கும்
அவலத்தை எண்ணி எண்ணி
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

*
கெடா வெட்டும்
சாராயமும்
குதிரையும்
இன்னும் எத்தனை நாளைக்கோ...
பீதியில்
அய்யனார்கள் கூடி
ஒப்பாரி வைக்கிறார்கள்!

வெண்பனியே

வெண்பனியே
ஆற்றங் கரையோரம் தென்றலில் ஆடும்செந்
நாற்றின் கரையோர வெண்பனியே - நேற்று
விழுந்த கதிரவன் இன்று வருமுன்
எழுந்தென் கவியினுள் வா!