Friday, 25 April 2008

நூல் கைகொண்டு வாழ் - பாண்டூ

மனிதா! எழுந்து வா!

என்னை விரித்து விட்டுத்
தூங்கிவிடாதே...
நான் ஒன்றும்
உன் படுக்கையல்ல!

என்னை மூடிவிட்டு
விழிப்போடு இருப்பதாய்
மமதை கொள்ளாதே...
ஏனென்றால்
நான்தான் உன் இமை!

மனிதா வா!
என்னுள் தொலைந்து போ!
நீ தேடுவது எல்லாம்
என்னுள் புதைந்து கிடக்கிறது...
நீ தொலைத்தது எல்லாம்
என்னுள் நிறைந்து கிடக்கிறது...

ஆம்
அனுபவங்களின் தொகுப்பு நான்!
அறிவின் விரிப்பு நான்!

வா!
உனது பயணத்தில்
என்னைத் துணை கொள்...
அந்தச் சூரியனை விட
பிரகாசமானவன் நான்!
எந்த இருட்டிலும்
பயப்படாதே...
நான் உன்னுடன்
இருக்கிறேன்!

என்னைப் படி...
நான் உனக்கொரு
ஏணிப்படி!

என்னைப் பார்...
உன்னைச் சரிசெய்!
நான் உனக்கொரு
கண்ணாடி!

வா! மனிதா வா!
உனது நண்பன் நான்...
என்னைத் தேர்ந்தெடுப்பதில்
கொஞ்சம் கவனமாய் இரு!

உனது காதலி நான்
என் மேல் ஆசை கொள்!

உனது துணைவி நான்
என் கரம் பற்று!

காகிதப்பூ நான்!
உன் கையில் மலரும்
காகிதப்பூ நான்!

ஆயினும் என்ன...
வா! கையில் ஏந்து!
என்னை வாசி...
என்னை சுவாசி...
என் வாசம்
உன் சுவாசம் வைர நீங்காது!

வா!
என் இதழைத் திற!
தேனைப் பருகு...
நீ சந்திக்கும்
ஒவ்வொரு மனிதனும்
ஒரு புத்தகமே...
அவனுள் என்
மகரந்தந்தைப் பரப்பு!

வா! பக்கம் வா!
என்னை ஒவ்வொரு
பக்கமாய் புரட்டு
முடிவில்
உன்னை நான்
புரட்டிப் போட்டிருப்பேன்!!

- பாண்டூ
சிவகாசி, தமிழ் நாடு, இந்தியா.
செல்லிடப்பேசி: +91 98436 10020

No comments: