Friday 25 April, 2008

சிவகாசியில் இருநாள் இலக்கியத் திருவிழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டக் கிளையின் சார்பில் முதன் முறையாக இருநாள் இலக்கியத் திருவிழா முஸ்லீம் தொழில் வர்த்தகர் சங்க திருமண மஹாலில் பிப்ரவரி 16 மற்றும் 17 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருதினங்கள் கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் ஞானக்குயில் கவிஞர் செ.ஞானன் தலைமை வகித்தார். மாவட்ட கெளரவத் தலைவர் குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கவிபாரதி பா.முருகேசன் அனைவரையும் வரவேற்றார்.

மாநில பொதுச் செயலாளர் கவிஞர் இரவீந்திரபாரதி அவர்கள் விழாத் தொடக்க உரையாற்றினார். காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் இயக்குனர் திரு. ஏ.எஸ்.பி.ஆறுமுகச் செல்வன் அவர்களும் ஜெயம் ஆப்செட் பிரிண்டர்ஸ் உரிமையாளர் திரு. கே.வி.சங்கர் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

ஞானக்குயில் இசைக்குழுவின் இன்னிசையுடன் விழாத் தொடங்கியது. திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழக தமிழ்த்துறை பேராசிரியர் பா.ஆனந்தக்குமார் அவர்கள் சிறுகதையும் சமூக நோக்கும் என்ற தலைப்பிலும், வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் வரலாற்று உண்மைகள் என்ற தலைப்பிலும் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியம் அவர்கள் நாட்டார் இலக்கியம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.

கந்தகப்பூக்கள் ஸ்ரீபதியின் பறவையாடிப் பழகு என்ற சிறுகதை நூலும், பா.முருகேசன் மற்றும் கொ.மா.கோதண்டம் ஆகியோர் எழுதிய பழமொழிகள் புது உண்மை விளக்கம் என்ற நூலும் விழாவில் வெளியிடப்பட்டன. ஓய்வு பெற்ற பேராசிரியை பொ.நா.கமலா அவர்களின் ரோஜாவுக்கு என்ற கடித இலக்கிய நூலும் இராசை கண்மணிராசாவின் டட்ட டய்ங் என்ற கவிதை நூலும் கவிஞர் யுவபாரதியின் காகிதப்பூ என்ற கவிதை நூலும் பாண்டூவின் வெள்ளை இரவு என்ற கவிதை நூலும் அறிமுகம் செய்யப்பட்டன.

கல்லூரிகளில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்று கவியரங்கில் பங்கேற்ற மாணவிகளுக்கு கே.ஆர்.அன் கோ உரிமையாளர் திரு.டி.கந்தசாமி அவர்கள் பரிசுகள் வழங்கினார். ரித்திகா நாட்டியாலயா. கலைவாணி நடன வித்யாலயா மற்றும் சிவபாதாஞ்சலி நாட்டிய கலாலயம் ஆகிய நடன பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியரின் நாட்டியங்கள் அரங்கேறின. மேலும் நடன அரங்கில் பங்கேற்ற குழந்தைகளுக்கு ஸ்ரீ பாண்டி முனீஸ்வரன் டிரேடர்ஸ் உரிமையாளர் திரு.ஜே.டி.ஆறுமுகச்சாமி அவர்கள் பரிசுகள் வழங்கினார்.

மாவட்டப் பொருளாளர் டாக்டர் ஆர்.எம்.ஆர்.சாந்திலால் அவர்கள் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நடத்தினார். கல்லூரி மாணவர்களின் சிலம்பாட்டம், நீலநிலா கலைக் குழுவினரின் கிராமிய நடனம் சிறப்பாக நடைபெற்றன.
இவ்விழாவில் விருதுநகர் மாவட்ட அனைத்துக் கிளைகளின் செயலாளர்கள். தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவைச் செயலாளர் பேராசிரியர் சு.நயினார், எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் அறம். தமிழ்ச்சுடர் இலக்கியப் பேரவையின் செயலாளர் ராஜா சொர்ண சேகர். மேடைப் பாடகி ராஜேஸ்வரி. கலைச்சுடர்மணி அம்மாபட்டி பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவை விருதுநகர் கிளைச் செயலாளர் ஜெ.செண்பகராஜன் தொகுத்து வழங்கினார். விழா ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எழுத்தாளர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி நன்றி கூற விழா தேசியகீதத்துடன் இனிதே நிறைவுற்றது.

No comments: