Friday, 26 October 2012

தேனியில் பிசாசுத் துகள்

து முழுமையான அறிவியல் கட்டுரை அல்ல. தேனி மாவட்டத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வு மையம் எத்தகையது... அதை அந்த மாவட்ட மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை விவரிக்கும் கட்டுரை மட்டுமே!
 அது என்ன 'நியூட்ரினோ’? ஒரு பொருளையோ, தனிமத்தையோ உடைத்துக்கொண்டே செல்லும்போது, இறுதியில் இதற்கு மேல் உடைக்கவே முடியாது என்கிற நிலையில் ஒரு பொருள் மிஞ்சும் அல்லவா? அதைத்தான் அணு என்றார்கள் விஞ்ஞானி கள். பிறகான விஞ்ஞான வளர்ச்சியில் அணுவைப் பிளந்தால் உள்ளே எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்று மூன்று வகை துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதாவது எதிர் மின் சுமைகொண்டவை எலெக்ட்ரான்கள். நேர் மின் சுமைகொண்டவை புரோட்டான்கள். எந்த மின் சுமையும் இல்லாமல் நடுநிலை வகிப்பவை நியூட்ரான்கள்.
பிரபஞ்ச ரகசியம்
அறிவியல் ஆராய்ச்சிக்குத்தான் ஒரு முடிவே கிடையாதே? 1930-ல் அணுவுக்குள் எலெக்ட்ரான், நியூட்ரான், புரோட்டானைத் தவிர மேலும் சில துகள்களும் இருக்கின்றன என்று யூகித்தார் உல்ஃப்கேங் பாலி என்ற விஞ்ஞானி. அதற்கு அவர் வைத்த பெயர்தான் நியூட்ரினோ. மிகச் சிறிய, அதே நேரத்தில் நடுநிலையான (மின் சுமையற்ற) அடிப்படைத் துகள் என்பதுதான் 'நியூட்ரினோ’வுக்கான விளக்கம். அதன் பிறகு, 26 வருடங்கள் கழித்து ''ஆமாம். உண்மையிலேயே நியூட்ரினோ என்று ஒன்று இருக்கிறது. அது பிசாசுபோலத் திரிந்துகொண்டு இருக்கிறது'' என்று ஆமோதித்தார்கள் அப்போதைய விஞ்ஞானிகள். அணு உலையில் நியூட்ரினோவைக் கண்டறிந்ததற்காக ரைனஸ், கோவான் ஆகிய விஞ்ஞானிகளுக்கு 1995-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
இதனால் தூண்டப்பட்ட விஞ்ஞானிகள் நியூட்ரினோவைப் பற்றி மேலும் தோண்டித் துருவ ஆரம்பித்தார்கள். 'அணுவுக்குள் மட்டும் நியூட்ரினோ இல்லை. சூரியன், நட்சத்திரத்தில் இருந்தும் கோடானுகோடி நியூட்ரினோக்கள் மழைபோல கொட்டிக்கொண்டு இருக்கின்றன’ என்றவர்கள் நியூட்ரினோவில் 3 வகைகளும் 3 எதிர் வகைகளும் (ஆன்ட்டி-நியூட்ரினோ) இருப்பதையும் கண்டுபிடித்தார்கள். இதுதான் இந்தத் துறையில் மிக சமீபத்தியக் கண்டுபிடிப்பு. நியூட்ரினோ ஆய்வின் மூலம் சூரியனின் சூட்சுமத்தையும் பிரபஞ்சத்தின் பிறப்பு ரகசியத்தையும் கண்டுபிடிக்கலாம் என்பது உலக விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
பிசாசு அணுத் துகள்!
இந்தியாவும் 11-ம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டு நியூட்ரினோ ஆய்வுப் பணியில் ஈடுபட்டது. இந்தியாவில் நடத்தப்படும் நியூட்ரினோ ஆய்வு ஐ.என்.ஓ. (India-based Neutrino Observatory) என்று குறிக்கப்படுகிறது. நியூட்ரினோ துகளின் முக்கியமான, அதிசயமான பண்பு என்னவென்றால், அது எந்தப் பொருளையும் ஊடுருவி மறுபுறம் வெளியேறிச் சென்றுவிடுமாம். அது கத்திப்பாரா பாலமாக இருந்தாலும் சரி... ஆவின் வெண்ணெயாக இருந்தாலும் சரி. இப்படி ஒவ்வொரு கணமும் பில்லியன்கணக்கான நியூட்ரினோக்கள் பூமியையே ஊடுருவிக் கடந்துகொண்டு இருக்கின்றனவாம்.

சூரியனில் இருந்தும் விண்மீன்களில் இருந்தும் கோடி கோடியாகக் கொட்டிக்கொண்டு இருக்கும் இந்த நுண் துகள்களைப் பிடிப்பது சாதாரண வேலை கிடையாது. அதனாலேயே நியூட்ரினோவை 'பிசாசு அணுத் துகள்’ (The Ghost Particle) என்று வேடிக்கையாகக் குறிப்பிடத் தொடங்கினார்கள். காஸ்மிக் கதிரோடு சேர்ந்து வரும் இந்தத் துகளைப் பிடிப்பது 'வண்ணத்துப்பூச்சி வலையால் பிசாசைப் பிடிப்பது’ போன்றது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இமயமலை டு பொட்டிபுரம்!
ஆக, நியூட்ரினோ ஆய்வகத்தை மலையைக் குடைந்து சுமார் 1 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைக்க வேண்டிய சூழ்நிலை. ஏன்? மலை வடிகட்டியாகச் செயல்பட்டு நியூட்ரினோ சிறைபிடிப்புக்குப் பெருமளவு உதவும் என்பதாலேயே! இதற்கென முதலில் தேர்வுசெய்யப்பட்ட இடம் இமயமலை. அங்குள்ள தட்பவெப்பம் சரிவராது என்று, அஸ்ஸாமில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றுக்குச் சென்றார்கள். அங்கு எதிர்ப்பு வலுக்கவே, கேரளத்தைக் குறிவைத்தார்கள். கடவுளின் தேசம், பிசாசுத் துகளை அனுமதிக்குமா? நைச்சியமாக தமிழ்நாட்டுப் பக்கம் தள்ளிவிட்டது. இங்கு நீலகிரி மாவட்டம், சிங்கார் பகுதியைக் கட்டம் கட்ட, அங்கே விலங்குகள் சரணாலயம் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, இயற்கை ஆர்வலர்களும் வனத் துறையும் எதிர்ப்பு தெரிவிக்க... தெற்கே சுருளி மலைக்கு நகர்ந்து, வனச் சரணாலய வரையறை காரணமாக இறுதியில் மொட்டைக் கரடாகக் காட்சி தரும் பொட்டிபுரத்தில் நிலைகொண்டுவிட்டது திட்டம்!
பொட்டியில் என்ன நடக்கும்?
தேனி மாவட்டம், பொட்டிபுரம் ஊராட்சி, புதுக்கோட்டை கிராமத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பொட்டிதட்டி மலைத் தொடர். உள்ளூர் மக்கள் இதனை 'ஐம்பது ஊர் அப்பர் கரடு மலை’ என்கிறார்கள். அதில் சிவலிங்கம்போல் உயர்ந்த முகட்டைக்கொண்டு இருக்கும் மலைதான் இப்போது 'ஐ.என்.ஓ’-வின் பரிசோதனை எலி. ஒரே கல்லால் ஆன இந்த மலையைக் குடைந்து அதன் மத்தியில் ஆய்வு மையத்தை அமைக்கப்போகிறார்கள்.

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டு வரும் எழுத்தாளர் தன்ராசு ஆவேசத்துடன் பேசத் துவங்கினார். ''மலை உச்சியில் இருந்து சுமார் 1.3 கி.மீ. ஆழத்தில் 400 அடி நீளம், 80 அடி அகலம்கொண்ட ஒரு குகையைக் குடையவிருக்கிறார்கள். அருகிலேயே 170 அடி நீளம், 38 அடி அகலம், 15 அடி உயரம்கொண்ட துணைக் குகையும் அமைக்கப்படுமாம். 15 அடி விட்டத்தில், 60 அடி ஆழத்துக்கு ஒரு கிணறு வெட்டினாலே, குன்றுபோலக் கற்கள் குவிந்துவிடும். அப்படி இருக்கும்போது, சுமார் 2,24,281 கன சதுர மீட்டர் அளவுக்குக் குகை ஏற்படுத்தப்பட்டால், குவியும் கற்களை என்ன செய்வது? எங்கோ ஒரு கல் குவாரியில் வெடி வைத்தாலே வீடுகள் குலுங்கும் சூழலில், தொடர்ந்து நாலைந்து ஆண்டுகள் வெடி வெடித்துக்கொண்டே இருந்தால் அந்தப் பிரதேசம் என்ன ஆகும்? மலையைத் துளைக்கும் கனரக வாகனங்களும் ராட்சத இயந்திரங்களும் ஊருக்குள் வர சாலை அமைக்கவும் கழிவுகளைக் கொட்டவும் விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவார் கள். தேனி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் அடியோடு கெட்டு, விநோதமான நோய்களால் மக்கள் மடிய வேண்டியதுதானா?
அணு உலைபோல நியூட்ரினோ ஆய்வில் கதிரியக்க ஆபத்து இல்லை என்ற அளவில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். ஆனால், விவசாய பூமியான தேவாரம் பகுதியில் ஏன் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க வேண்டும் என்பதே எங்கள் கேள்வி. அணுகுண்டு சோதனை நடத்திய பொக்ரான் பாலைவனப் பகுதிபோல, மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைக்க வேண்டியதுதானே?'' என்று கேள்வியுடனேயே முடிக் கிறார் தன்ராசு.
அடக்கிய தேசிய பாதுகாப்புச் சட்டம்!

''2009-ம் ஆண்டில் இருந்தே இந்தத் திட்டத்துக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடிவருகிறோம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் விளக்கக் கூட்டம் நடந்தபோது, 'இந்தத் திட்டத்துக்குத் தேவையான தண்ணீரையும் மின்சாரத்தையும் எங்கிருந்து கொண்டுவருவீர்கள்?’ என்று கேட்டோம். தண்ணீரை முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்தும், மின்சாரத்தை ராசிங்கபுரம் மின் நிலையத்தில் இருந்தும் எடுப்போம் என்று கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் சொன்னார்கள். 'இருக்கிற தண்ணீரையும் மின்சாரத்தையும் நீங்களே எடுத்துக்கொண் டால் நாங்கள் எப்படிப் பிழைத்துக்கிடப்பது?’ என்ற
கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு, சமாதான முயற்சிகள் பலன் அளிக்காது என்று தெரிந்ததும், இப்போது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவிப் போராட்டத்தை அடக்குகிறார்கள்!'' என்றார் அந்தப் பகுதியில் வசிக்கும் விவசாயி பொன்னுச்சாமி.

தொடங்கிவிட்டது பணி!
நிலவரத்தை அறிய பொட்டிதட்டி மலைக்கு நேரில் சென்றோம். சர்வே பணிகள் முடிந்து நில ஆர்ஜிதமும் முடிந்துவிட்டது. பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இதற்கே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது மலையில் குகையைக் குடையும் பணிக்காக 'ஆட்கள் தேவை’ என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது ஐ.என்.ஓ.
அங்கிருந்தபோது நாம் உணர்ந்த விஷயம் ஒன்றுதான்... நியூட்ரினோ ஆய்வகம் தொடர்பாக மக்களிடம் தெளிவு ஏற்படுத்தினால், பொட்டிதட்டி மலையின் சர்வதேச அங்கீகாரத்துக்கு அவர்களின் ஆதரவையும் அள்ளிக்கொள்ள முடியும்.


''உலக வரைபடத்தில் பொட்டிதட்டி இடம்பெறும்!''
நியூட்ரினோ ஆய்வுப் பணியில், சென்னை ஐ.ஐ.டி., சென்னை கணித அறிவியல் மையம், டெல்லி, கோழிக்கோடு, கொல்கத்தா, ஸ்ரீநகர் பல்கலைக்கழகங்கள், மதுரை அமெரிக்கன் கல்லூரி உட்பட இந்தியாவின் 26 கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் பங்கு பெற உள்ளன. ஆனால், இந்தப் பட்டியலில், மும்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு சக்தி ஆராய்ச்சி மையம் போன்றவை யும் இடம்பெற்றிருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.
சென்னையின் 'தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேத்தமேட்டிகல் சயின்ஸ்’ அமைப்பில் மூத்த பேராசிரியராக இருக்கும் ராஜசேகரன்தான் நியூட்ரினோ திட்டத்தின் மூத்த விஞ்ஞானி. தேனி மாவட்டத்தில் நடந்த நியூட்ரினோ விளக்கக் கூட்டங்களில், விஞ்ஞானிகளே மேடை ஏறப் பயந்தபோது பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் துணிச் சலாகப் பதில் அளித்து சமாளித்த இவரைச் சந்தித்து தேனி மாவட்ட மக்களின் சந்தேகங்களைக் கேட்டோம்.

''அணுவைப் பிளந்துதான் நியூட்ரினோவைப் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்மைச் சுற்றியே நியூட்ரினோக்கள் இயற்கையாக உலவிக்கொண்டு இருக்கின்றன. நியூட்ரினோ என்னும் கடலுக்குள் மூழ்கியபடியேதான் நாம் ஒவ்வொரு இயக்கத்தையும் மேற்கொள்கிறோம். நம்முடைய உடல்கூட, நொடிக்குப் பல லட்சம் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்கிறது. அணு என்றால் அணு குண்டு என்றும், நியூட்ரினோ என்றால் நியூட்ரான் குண்டு என்றும் எண்ணுபவர்கள்தான் இப்படியான பீதியைக் கிளப்புகிறார்கள்!''
''நியூட்ரினோக்கள் மக்களுக்குத் தீங்கு விளைவிக்காது என்றால் எதற்காக மலையைக் குடைகிறீர்கள்?''
''சூரியனில் இருந்தும், நட்சத்திரங்களில் இருந்தும் இயற்கையாகவே உருவாகும் நியூட் ரினோ துகள்களோடு, காஸ்மிக் துகள்களும் பயணித்துக்கொண்டு இருக்கின்றன. அந்த காஸ்மிக் துகள்களில் இருந்து நியூட்ரினோவை மட்டும் பிரித்துத் தனிமைப்படுத்த வேண்டும் என்றால், நான்கு திசைகளிலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவுக்குப் பாறையால் சூழப்பட்ட மையம் தேவை. எனவே, மலைப் பாறைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஆய்வுக்கூடத்தை நிறுவினால், மற்ற கதிர்கள் வடிகட்டப்பட்டு நியூட்ரினோ மட்டும் பாறையை ஊடுருவிக்கொண்டு ஆய்வு மையத்தை வந்தடையும்!''
''ஏன் பல மாநிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட திட்டத்தைப் பசுமையான தேனி மாவட்டத்தில் அமைக்கிறீர்கள்?''
''இந்த ஆராய்ச்சிக்கான பாறையை இயற் பியல் மற்றும் மண்ணியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையிலேயே தேர்வு செய்திருக்கிறார்கள். இடுக்குகளும் மடிப்புகளும் இல்லாத ஒற்றைக் கல் மலை வேண்டும். அதுவும், மிகக் கடினமான 'சார்னோகைட்’ வகை பாறையாக இருக்க வேண்டும். மண்ணியில்ரீதியாக இந்தப் பாறை அமைந்திருக்கும் பகுதி நிலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் அனைத்தையும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்தான் பூர்த்திசெய்கிறது!''
''கைவிடப்பட்ட சுரங்கங்களை இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தினால் என்ன?''
''ஆரம்பக் காலகட்டங்களில், கைவிடப்பட்ட சுரங்கங்களில்தான் இந்த ஆய்வு நடந்தது. கோலார் தங்க வயலில்கூட ஆய்வு நடந்தது. ஆனால், துல்லியமான முடிவுகள் வேண்டும் என்றால், இத்தகைய கட்டமைப்பு அவசியம். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளிலேயே மிகப் பெரியது இதுதான். 900 கோடி ரூபாய் திட்டம். இந்த மையம் மட்டும் 1970-களிலேயே இந்தியாவில் நிறுவப்பட்டு இருந்தால், கடவுள் துகள் ஆராய்ச்சி யைவிடப் பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் இங்கே நிகழ்ந்திருக்கும்.''
''இந்தத் திட்டத்தால் தேனி மக்களுக்கு என்ன லாபம்?''  
''இது ஒரு தொழிற்சாலையோ, லாபம் தரும் நிறுவனமோ அல்ல. ஆராய்ச்சித் தகுதி இருந்தால், பணி கிடைக்கும். மற்றவர்களுக்கு ஆராய்ச்சி அல்லாத அலுவலகப் பணி, கள உதவிப் பணி, துப்புரவு, ஓட்டுநர் பணிகள் கிடைக்கும். இந்த மையம் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சிக்கூடம் என்பதால், உலகப் புகழ் பெற்ற, நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகள்கூட அடிக்கடி இங்கு வந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பகுதி உலக வரைபடத்தில் முக்கிய அடையாளமாக இடம் பிடிக்கும். எனவேதான், அப்துல் கலாம்கூட, நியூட்ரினோ மையத்தால் தேனி மாவட்டம் புகழ்பெறும் என்று கூறியிருக்கிறார்!''
                                                                       
''மலையை உடைப்பதாலும், இந்த ஆய்வாலும் எந்தப் பாதிப்புமே இல்லை என்கிறீர்களா?''
''மலையை உடைத்து குகை அமைக்கும்போது பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க முயற்சிப்போம். ஆய்வுக்கூடம் மற்றும் குகை அணுகுப் பாதை அகழ்ந்தெடுக்கப்படும்போது, சுமார் 2.25 லட்சம் கன மீட்டர் பாறை மற்றும் பாறைச் சிதறல்கள் கிடைக்கும். அவற்றைத் தண்ணீரில் நனைத்து, குகைக்கு வெளியே லாரிகள் முலம் கொண்டுவரப்பட்டு, சேமிப்புக் கிடங்குகளில் மிகப் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும். எனவே, பாறைகளோ, தூசிகளோ சிதறிப் பறக்காது. ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். இயற்கையை நாம் சீரழிக்கக் கூடாதுதான். அதற்காக இயற்கைக்கு அநாவசியப் புனிதத்தன்மை அளித்து, வளர்ச்சித் திட்டங்களை முடக்கக் கூடாது. அப்படி யோசித்தால், மனிதனால் ஒரு வேளை உணவைக்கூடச் சாப்பிட முடியாது!''

-கே.கே.மகேஷ், சண்.சரவணக்குமார்
படங்கள் : வீ.சக்தி அருணகிரி, பா.காளிமுத்து
நன்றி: ஆனந்த விகடன், 15-08-12

No comments: