1. கேரளத்தின் எல்லையிலிருந்து 26 கிலோ மீட்டரிலும் நமது தலைநகரத்திலிருந்து வெறும் 79 வான் மைல் தூரத்திலும் உள்ள கூடங்குளத்தில் ஓர் அணுமின் நிலையம் செயல்படப்போகிறது. மின் உற்பத்தித் துறையில் அணு ஆற்றல் நமக்கு அவசியமா? அணுமின் நிலையங்களின் செயல்பாடு சுற்றுப்புறவாசிகளுக்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதா? அணுமின் நிலையம் அமைக்கக் கூடங்குளம் பொருத்தமானதா? அங்குக் கட்டப்பட்டுள்ள மின் நிலையம் பாதுகாப்பானதா? இவற்றையெல்லாம் பரிசீலிக்க வேண்டியது அவசரத் தேவையாகி இருக்கிறது.
2. உலகம் முழுவதும் அணுசக்திக்கு மாறும்போது இந்தியா மட்டும் ஒதுங்கி இருக்க முடியாது என்னும் வாதம் எதார்த்த நிலைக்கு முரணானது. இன்று உலகத்திலுள்ள 205 நாடுகளில் 31 நாடுகள் மட்டுமே மின் தேவைக்கு அணுமின் நிலையங்களைச் சார்ந்துள்ளன. உலகில் கிடைக்கும் யுரேனியத்தில் 23% ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆனால் அங்கு இதுவரை அணுமின் நிலையங்கள் தொடங்கப்படவில்லை. உலகத்தின் மின்தேவையில் வெறும் 7% மட்டுமே அணுசக்தி வழியாக உற்பத்தி செய்யப்படுகிறது. அணுமின் நிலையங்களைத் தவிர்க்க முடியாது என்னும் வாதம் அடிப்படையற்றது. மிகவும் சிக்கனமான மின்உற்பத்திக்கான வழிமுறை அணுமின் நிலையங்கள்தாம் என்பதும் சரியல்ல. விபத்திற்கான வாய்ப்புகள் மிக அதிகமுள்ளதும் அதிகப்படியான கட்டுமானச் செலவுகளை ஏற்படுத்துவதுமான அணுமின் நிலையங்களுக்குக் கடன் அளிப்பதில்லை என்று 2007இல் அமெரிக்காவின் முக்கிய ஆறு வங்கிகள் அமெரிக்க எரிசக்தித் துறைக்குத் தெரிவித்துள்ளன.
3. இது மிகவும் லாபகரமான மின் ஆற்றல் என்பது பன்னாட்டு அணு நிறுவனங்களுக்கு உதவிபுரிவதற்காகச் சொல்லப்படும் பொய்ப் பிரசாரம். கர்நாடக மாநிலம் கைகாவில் 230 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரு ரியாக்டர்கள் செயல்படுகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் அரசு அளித்த ஹெவிவாட்டர் மான்யம் மட்டும் 1450 கோடி ரூபாய் என்றாலும் மின்கட்டணம் யூனிட்டிற்கு 2. 90 ரூபாயாக உள்ளது. எந்தத் திட்டத்திற்கும் அதைத் தொடங்கும்போதுள்ள கட்டுமானச் செலவு, அவசியமான எரிபொருள் கிடைக்கும் வாய்ப்பு, அதன் விலை, திட்டம் செயல்படும்போது ஜீவராசிகளுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் உண்டாகும் பிரச்சினைகள், விபத்திற்கான சாத்தியங்கள், விபத்து நிவாரணம், அணுக் கழிவு மேலாண்மை என்பவற்றைக் கணக்கிலெடுக்க வேண்டும். இவை ஒவ்வொன்றையும் பரிசீலித்தால் ஒன்றில்கூட அணுமின் நிலையங்களுக்கு பாஸ் மார்க் கிடைக்காது.
4. அன்றாடச் செயல்பாடுகளைப் பரிசீலிக்கும்போது, நிலையத்தின் செயல்பாட்டிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகள் வெளியேற்ற முடியாத ஒன்று. மற்ற கழிவுகளைப் போல அல்ல அணுக் கழிவு. அவற்றை அழிக்க ஆக்கபூர்வமான முறைகள் எவையும் நடைமுறையில் இல்லை. அமெரிக்காவிலும் பிரான்சிலும் மின் உற்பத்தி முடிந்த நிலையிலும் பல அணுமின் நிலையங்கள் இன்றும் குளிர்விப்பதற்காக வேண்டிச் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கழிவுகளை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாததே இதற்குக் காரணம்.
5. அணுமின் நிலையம் செயல்படும் இடங்களில் எல்லாம் ரத்தப் புற்று நோய், தைராய்டு, கேன்சர் முதலிய கொடிய நோய்கள் பரவுவதாகப் பல்வேறு ஆய்வுகள் தெளிவாக்குகின்றன. இந்த ஆய்வுகளை இல்லாமற் செய்யும் முயற்சிகள் அணுமின் நிலைய அதிகாரிகளின் தரப்பிலிருந்து செய்யப்படுகின்றன. பன்னாட்டு அணு சக்தி நிறுவனம் உலக சுகாதார நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி ஐ. ஏ. இ. ஏ-இன் அனுமதியின்றி அணுக்கதிர் வீச்சு ஏற்படுத்தும் சுகாதாரப் பிரச்சினைகள் பற்றிய தகவல்களை வெளியிடக் கூடாது. இப்படி ஓர் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? புகுஷிமா அணு விபத்திற்குப் பிறகு பன்னாட்டு கார்பொரேட் ஊடகங்கள் கடைப்பிடிக்கும் மௌனத்தையும் இத்துடன் சேர்த்து வாசிக்க வேண்டும். மூன்றாம் உலக நாடுகளையும் கார்பொரேட் ஊடகங்களையும் உலக சுகாதார நிறுவனத்தையும் இந்த அணு நிறுவனங்கள் விலைக்கு வாங்கியுள்ளன என்னும் குற்றச்சாட்டு உறுதியானது. இந்த மௌனத்தை நற்சான்றாக மாற்றும் மக்கள் விரோத விஞ்ஞானிகள் சிலரும் இணையும்போது பேரபாயங்கள் மீண்டும் தொடர்கின்றன.
உயிர்ச்சூழலுக்கு ஆபத்து
6. அணுமின் நிலையங்கள் செயல்பட மிக அதிகமான தண்ணீர் அவசியம். கூடங்குளத்தின் 1000 மெகாவாட் ரியாக்டருக்குத் தினமும் 51 இலட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆறு ரியாக்டர்கள் செயல்படத் தொடங்கினால் தினமும் 2.02 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இவ்வளவு அதிகமான தண்ணீரை அதிக ஆற்றலுடன் உறிஞ்சும்போது கடலில் மீன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் இல்லாமல் போகும். மீன்கள் அணு உலைக்குள் செல்லாமல் இருக்கச் சல்லடைகள் வைக்கப்படும் என வாதம் செய்கின்றனர். இது போன்ற சல்லடைகளில் வேகமாக மோதும் பெரிய மீன்கள்கூடச் செத்துப்போகின்றன என்பதுதான் இதுவரையுள்ள அனுபவங்கள். அணுமின் நிலையத்தின் பயன்பாட்டிற்குப் பிறகு அணுக் கழிவுகளை உட்கொண்ட வெப்ப நீர் அன்றாடம் கடலில் திறந்துவிடப்படுகிறது. 140 டிகிரிக்கு நெருக்கமான கடலின் வெப்பநிலை கிட்டதட்ட 13 டிகிரி அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது கடலின் உயிர்ச்சுழற்சியைப் பாழாக்குகிறது. பின்பு மீன் பிடிப்புத் தொழிலைக் காலப்போக்கில் அழிக்கிறது. அணுமின் நிலையங்களில் உபயோகிக்கப்படும் எரிபொருளை மறுசுழற்சி முறையில் உபயோகிப்பதால் அணுக் கழிவுகள் குறைவாகவே வரும் என்பது கண்களை மூடிக்கொண்டு இருட்டு என்பதற்கு ஒப்பாகும். மறுசுழற்சி செய்வது வெறும் 1 விழுக்காடு மட்டுமே. 1000 மெகாவாட் திறனுள்ள ஓர் அணுமின் நிலையம் ஒரு வருடம் குறைந்தது 30 டன் அணுக் கழிவை வெளியேற்றும். இது கேன்சரையும் மரபுரீதியான பிறவிக் குறைபாடுகளையும் ஏற்படுத்தும். இந்தத் தீய பூதத்தைதான் கடலில் தள்ளுகின்றனர்.
7. அணுமின் நிலையங்களின் விபத்திற்கான வாய்ப்புத்தான் மிகப் பயங்கரமானது. கையாள்பவரின் கவனக்குறைவு, இயந்திரக் கோளாறு, இயற்கைச் சீற்றம் முதலியவற்றால்தான் பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. இன்றைய காலகட்டத்துத் தாக்குதல் அச்சுறுத்தல்களையும் கணக்கிலெடுக்க வேண்டும். பிற விபத்துகள் வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு என்றால் அணுமின் நிலைய விபத்துகள் தொடர்ச்சியானவை. அவற்றைப் பின்வரும் நமது தலைமுறைகள் அனுபவிக்க வேண்டி நேர்கிறது. 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று செர்நோபில் அணு உலை விபத்து நிகழ்ந்தது. இதன் காரணமாக 1986 முதல் 2004 வரை 9,85,000 மரணங்கள் நிகழ்ந்ததாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மனிதனுக்கும் கால்நடைகளுக்கும் காளான்களுக்கும் நோய்க் கிருமிகளுக்கும் ஜீன்களில் மாற்றத்தை ஏற்படுத்திய அவலம் அது. செர்நோபில் மற்றும் அதற்கு முன் ஏற்பட்ட அயர்லாந்தின் த்ரீமைல் ஐலேண்ட் ஆகியவற்றிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டுள்ளதால் அதன் பின்னர் கட்டப்படும் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதுதான் பின்னாட்களில் நடைபெற்றுவரும் பிரச்சாரம். ஆனால் 2011 மார்ச் 11 அன்று உலகத்தை நடுங்க வைத்த ஜப்பான் புக்குஷிமாவில் விபத்து ஏற்பட்டது. பூகம்பமும் சுனாமியும் ஒன்றிணைந்து அங்குள்ள 3 ரியாக்டர்களும் உபயோகித்த அணுக் கழிவைப் பாதுகாத்து வைத்திருந்த 4 தொட்டிகளும் விபத்திற்குள்ளாகின. இந்த விபத்தின் தீவிரத்தை இனிமேல் தான் உலகம் அறியப்போகிறது. காற்றுக் கடலை நோக்கி வீசியதால் 80% அணுப்பொருட்களும் பசிபிக் கடலில் கலந்ததின் காரணமாக ஜப்பான் நாட்டின் மிச்சமீதி இன்று இருக்கிறது. ஆனால் அணு உலையைக் குளிரூட்ட உபயோகித்த கடல் நீரில் 12,000 டன் நீர் புகுஷிமா நிலையத்தின் அஸ்திவாரத்தில் தேங்கி நிற்கிறது. இதில் 6 விழுக்காடு புளூட்டேனியம் அடங்கிய மோக்ஸ் எனப் படும் அணுப்பொருட்களாகும். ஹிரோஷிமாவில் விழுந்த அணுகுண்டைவிடப் பத்து மடங்கு அபாயமானது இந்தத் தேங்கி நிற்கும் நீர், இதைக் கடலில் கலக்கும்போது இதன் விளைவுகளை வரும் தலை முறைகளும் அனுபவிக்க நேரும்.
8. மே மாதம் 2012இல் ஜப்பான் தனது 54 அணுமின் நிலையங்களையும் ஜெர்மனி தனது 17 அணுமின் நிலையங்களையும் இழுத்து மூடிவிட்டன. இத்தாலி அணுமின் நிலையங்களே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டது. விபத்துகளிலிருந்து இவர்கள் பாடம் கற்றுக்கொண்டபோது, இந்தியா அணுமின் திட்டத்தை நோக்கி நகருகிறது. அமெரிக்காவின் நலன்களுக்கு அடிபணிந்து அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மன்மோகன்சிங் அரசு புக்குஷிமாவுக்குப் பிறகும் கூடங்குளம் திட்டத்துடன் முன்னேறுகிறது. இந்தத் திட்டத்தில் விபத்து நேரிட்டால், தமிழகத்தின் தென் பகுதியும், கர்நாடகத்தின் தென் பகுதியும் கேரளமும் இலங்கையும் கிட்டத்தட்ட முழுமையாக அபாயகரமான எல்லைக்குள் வரும். அதனால்தான் கூடங்குளம் என்னும் இடம் இந்தத் திட்டத்திற்கு எவ்வளவு தூரம் பொருத்தமானது என்பதைப் பரிசீலிக்க வேண்டியது நம்மைப் பொறுத்தவரை தவிர்க்க முடியாததாகிறது.
9. புகுஷிமாவில் ஏற்பட்ட விபத்து பூகம்பத்தாலும் சுனாமியாலும் ஏற்பட்டதே தவிர, தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதல்ல என்று அணுமின் நிலையங்களை ஆதரிப்பவர்களே வாதாடுகின்றனர். உண்மையில் பூகம்பம் உண்டானதால் ஏற்பட்ட மின்சாரப் பிரச்சினை தான் இந்தப் பேரழிவின் தொடக்கம். கூடங்குளத்தில் மின்சாரப் பிரச்சினை ஏற்படப் பூகம்பம்தான் உண்டாக வேண்டுமென்பதில்லை. இந்திய அரசு வெளியிடும் ‘வல்னரபிலிட்டி அட்லஸ்’படி கூடங்குளம், பிரதேசம்-3 பூகம்பத்திற்கான சாத்தியமுள்ள பகுதி. அபூர்வமான எரிமலைகள் உள்ள இடம். கூடங்குளத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் மன்னார் கடலில் பாதுகாப்பற்ற நிலையில் எரிமலைகள் உள்ளன. கூடன்குளம் அணுமின் நிலையத்தின் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் 1998இலும் 2008இலும் பூமிக்கடியில் பாறைகள் உருகி வழிந்த சம்பவங்கள் நடந்துள்ளன. 2004இல் சுனாமியால் சின்னாபின்னமாக்கப்பட்ட கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளுக்கு அருகேதான் கூடங்குளம் உள்ளது. 1986இல் அணு சக்தித் துறை வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியக் கடலோரங்களில் சுனாமிக்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் புயலை மட்டும் கணக்கில் கொண்டால் போதும் என்று சொல்கிறது. 2001இல் கூடங்குளம் அணுமின் நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2004இல் சுனாமித் தாக்குதலைக் கணக்கிலெடுத்து அரசு தன்னுடைய திட்டத்தை மாற்றியிருக்க வேண்டும். சுனாமித் தாக்குதலையும் கவனத்தில் கொண்டிருந்த போதும் அணுமின் நிலையம் பாதுகாப்பானதே என்று மத்திய அரசு இப்போது சொல்கிறது. இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது மக்களுக்கல்ல அணு ஆயுத நிறுவனங்களுக்குத்தான் என்பதற்கு இதைவிடப் பெரிய சான்று எதுவும் தேவையா?
10. கடந்த மூன்று வருடங்களில் அணுமின் நிலையத்தின் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் மூன்று இடங்களில் மழைநீர் பூமியைப் பிளந்து கிணறு வடிவத்தில் பூமிக்கடியில் போன நிகழ்வும் நடந்துள்ளது. சுருக்கமாகக் கூடங்குளம் பிரதேசம் எந்தக் காரணத்தைக் கொண்டும் அணுமின் நிலையத்திற்குப் பொருத்தமானதல்ல. இங்கு தான் 600 மெகாவாட் சக்தியுள்ள ஆறு ரியாக்டர்கள் தொடங்க உத்தேசித்துள்ளனர். 2001இல் கட்டத் தொடங்கிய இரண்டு ரியாக்டர்களும் அணு ஆயுத ஒப்பந்தத்திற்குப் பிறகு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட நான்கு ரியாக்டர்களும் இதில் உட்படும். இப்போது கட்டுமானம் முடிந்த அணுமின் உலைகள் சுற்றுப்புறச் சூழல் ஆய்வு எதுவும் மேற்கொள்ளாமல் கட்டப்பட்டவையாகும். ஜெய்தாபூரில் இப்படி ஒரு சுற்றுப்புறச் சூழல் ஆய்வை இந்த நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இதற்கு எதிராக இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமருக்கு புகார் அளித்திருந்தனர். அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பு நிலையத்தை நடத்தும் என்.பி.சி.எல்லுக்குத்தான் என்று சொன்ன பிரதமர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு விபத்து உண்டானால் யார் பொறுப்பு என்பதில் சந்தேகத்தைக் கிளப்புகிறார். அணுமின் நிலையங்களை ஆதரித்தவர்களுக்கெல்லாம் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சலுகைகளை வழங்கிய அணு சக்தி ஒப்பந்தத்தில் பதினேழாம் பிரிவில் முழுப் பொறுப்பும் அணுமின் நிலையத்தின் இந்திய ஏஜென்சிகளுக்குத்தான் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
11. கூடங்குளத்தில் உபயோகிக்கப்படும் வி. வி. இ. ஆர்-100 என்னும் மாடல் உலைக்குப் பல தொழில்நுட்பக் குறைபாடுகளும் உள்ளதாக அறிக்கையில் உள்ளது. ஆனால் கூடங்குளத்திலுள்ள அணுமின் நிலையத்தின் பிரச்சினை இதிலும் அபூர்வமானது. முக்கியமான பாகங்களில் வெல்டிங் செய்யக் கூடாது என்பது ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்து. ஆனால் 6 வெல்டிங்குகள் உள்ள ரியாக்டர்கள் செயல்படவிருக்கின்றன.
கூடன்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று யார் சொன்னாலும் இந்தத் தலைமுறையால் கண்முன் கண்ட பேரழிவுகளை மறக்க முடியாது. பாதுகாப்பு விஷயங்களில் இப்போதுள்ள பொறுப்பின்மையை இந்த அணு நிறுவனங்கள் தொடர்ந்தால் செர்நோபிலும் புகுஷிமாவும் இங்கே நடக்குமென்று சி. ஏ. ஜீ. தனது செயல்பாட்டுத் தணிக்கை அறிக்கையில் முன்னெச்சரிக்கை கொடுக்கிறார். அதனால் இந்த அணுஆயுத வெடிகுண்டு நமக்கு வேண்டாம். நிலையத்தின் செயல்பாடுகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கேரளமும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய இந்தப் பெரும் அபாயத்தைப் புரிந்துகொண்டு கேரள அரசும் விழிப்புடன் செயல்பட வேண்டும். அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து எரிபொருள் நிரப்பும் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். ஜப்பான் போன்ற தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகள்கூட விபத்து நேர்ந்த பிறகு 54 அணுமின் நிலையங்களை அடைத்துப் பூட்டிவிட்டனர். மற்றவர்களின் தவறில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அணுமின் நிலையங்களுக்குக் கொடுக்கும் மானியத்தைச் சூரியசக்தி மின்சாரத்திற்கு கொடுத்திருந்தால் நாட்டின் மின் பற்றாக்குறைக்குத் தீர்வு காண அது போதுமானது. நம்மை அது நாசமாக்கும் என்னும் பீதியும் எழவாய்ப்பில்லை.
நன்றி: மாத்ருபூமி
மலையாள நாளிதழ் 10.09.2012
தமிழாக்கம்: டி.வி.பாலசுப்ரமணியம்
நன்றி: காலச்சுவடு, அக்டோபர், 2012
No comments:
Post a Comment