1.அம்மாஞ்சி
‘சீ... நானா இப்படி நடந்தேன்?‘ என்மீது எனக்கே வெறுப்பாக
இருந்தது. எனக்கும் இவ்வளவு கோபம் வரும் என்பது முப்பதாண்டுகளாக எனக்கேத்
தெரியாது.
“உன் சிரிப்புத்தாண்டா அழகு“ என்பது அம்மா, அப்பா தொடங்கி
சொந்தபந்தம் நண்பர்கள் என அனைவரும் நேரடியாகவே எப்போதும் சொல்லும் வசனம்.
எவ்வளவு கோபமாக வருபவர்களும்கூட எனது சாந்தமான சிரித்த
முகத்தைப் பார்த்தால் தங்களது கோபத்தின் மீது தாங்களே வருத்தப்பட்டுக்
கொள்வார்கள். அந்த அளவிற்கு சாந்த சொரூபி நான்.
எந்தப் பிரச்சனையானாலும் அலட்டிக் கொள்ளமல் அதை எட்ட வைத்துப்
பார்த்து ‘அடுத்தது என்ன?‘ என்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டு வருபவன் நான்.
ஆகையால் எதுவுமே எனக்குப் பிரச்சனையாகத் தெரியாது.
எல்லாரிடமும் உள்ளார்ந்த அன்போடு உண்மையாக பழகுவதால் எனக்கு
ஏதாவது ஒரு தேவை என்றால் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு உதவ
முன்வருவார்கள்.
“நீ கொடுத்து வச்சவன்டா. எப்பப் பாரு மூஞ்சில சிரிப்போட...
எந்தப் பிரச்சனையும் இல்லாம... ம்...“ என்று பெருமூச்சி எறிபவர்களுக்கும், “நாம
என்ன ஆயிரம் வருசமா வாழப் போறோம். வாழப் போறது கொஞ்ச காலம். அதுக்குள்ள எதுக்கு
பிரச்சனை பண்ணிகிட்டு வருத்தப்பட்டுக்கிட்டு, இருக்கிற ஒத்த வாழ்க்கையை
ரணமாக்கிக்கிடணும்?“ என்று கூறி வழக்கமான சிரிப்பை பரிசாகக் கொடுப்பேன்.
இப்படி ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த
என்னிடமிருந்து கடந்த ஐந்தாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பு விலகிவிட்டது.
சீதேவி போன இடத்தை மூதேவிதானே நிறைப்பாள். கோபம் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள்
குடியேறத் தொடங்கி இன்று உச்சகட்டம் சென்று உத்தரதாண்டவம் ஆடிவிட்டது.
என் மனைவியை காட்டுமிராண்டித்தனமாக ஓங்கி அடித்துவிட்டேன்.
இப்படியெல்லாம் என் வாழ்க்கை திசைதிரும்பும், இவ்வளவு கர்ணகொடூரமாக நான் நடப்பேன்
என கனவிலும் நினைத்ததில்லை.
“உன்னோட நல்ல குணத்திற்கு வரப்போறவ கொடுத்து வச்சவ. எவளுக்கு
அதிர்ஷ்டம் கெடைக்குதோ?“ என முறைப்பெண்களும் கல்லூரித் தோழிகளும் சிலாகிப்பார்கள்.
“வேத்தாளுகளையே கைக்குள்ள வச்சி பொத்திப் பொத்திப் பாக்குற நீ
பொண்டாட்டிய தலமேல வச்சி கூத்தாட மாட்ட?“ ஒருதலையாக என்னைக் காதலித்த கௌரி ஒருமுறை
கூறினாள்.
எனது கல்யாண விசயத்தில் அப்பா அம்மா முடிவுப்படி நடப்பது என
தீர்மானத்துடன் இருந்ததால் யார் மீதும் காதல் வசப்படவில்லை நான். ரத்தத்தால் ‘ஐ
லவ் யூ‘ என எழுதி கௌரி குடுத்தபோதுகூட நான் அசையவில்லை. “ஏண்டா என்னைப் பிடிக்கல“
என்று நேருக்கு நேராக கேட்டவளிடம் “உன்கிட்ட ஒண்ணும் குறை கிடையாது. காதலிக்கப்
பிடிக்கல“ என்று சிரித்தேன். என் பதிலுக்கு எப்படி நடப்பது எனத் தெரியாமல்
குழப்பத்துடன் சென்று விட்டாள்.
இப்படியாகச் சேர்த்த காதலை எல்லாம் என் மனைவிக்கு
அர்ப்பணிக்கக் காத்திருந்தேன். எத்தனையோ ஜாதகங்களில் அவள் ஜாதகம்தான் சேர்ந்ததென
அப்பா கூறினார். அவள் கொஞ்சம் தூரத்து உறவுதான். அதனால் அவர்கள் குடும்ப சூழல்
அம்மாவுக்குத் தெரியும். “அவங்க சின்னதா ஒரு மளிகை கடைதான் வச்சிருக்காங்க.
முந்தியே பத்து பவுனுதான் ‘போடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நாமளே தாலிக்கொடி
பதினோரு பவுனு போடுறோம். அந்த பிள்ளை பத்தோ பன்னெண்டோதான் படிச்சிருக்கு. ஆளும்
வத்தலும் தொத்தலுமாத்தான் இருக்கு. நெறங்கூட புதுநிறத்துக்கும் கம்மிதான். வேற
நல்ல இடம் பார்போமே...“ என்று அம்மா இழுத்ததால் அப்பாவும் ஒன்றும் சொல்லவில்லை.
மீண்டும் பெண்பார்க்கும் படலம் தொடர்ந்தது. ஆறுமாதம்
தாண்டியும் ஒன்றும் பொருந்தவில்லை. “வேற ஒரு ஜாதகமும் அமைய மாட்டேங்கிது. இன்னும்
மூன்று மாசம் போச்சின்னா அவனுக்கு 27 முடிஞ்சிறும். அப்புறம் 29ல்தான்
பார்க்கணும். என்ன சொல்ற?“ என்ற அப்பாவின்பேச்சால் அரைகுறை மனசுடன் ஒத்துக்
கொண்டார்கள் அம்மா.
‘எப்படிப்பட்ட பொண்ணுனாலும் நான் அவளுக்குத்தக்கன என்னைய
மாத்திக்கிவேன்‘ எனும் என் மீதுள்ள நம்பிக்கையில் “எதுனாலும் எனக்கு ஒண்ணும்
பிரச்சனை இல்லைம்மா“ என்று ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தேன்.
கல்யாணத்திற்கு குழந்தைகளுடன் வந்த கௌரியின் பார்வையில் ஆயிரம்
ஏளனம் தெரிந்ததை நான் கண்டுகொள்ளவில்லை.
எனது எண்ணப்படி மொத்த காதலையும் கொட்டி தேவதைபோல் பார்த்துக்
கொண்டேன். முதல் பெண் குழந்தை பிறந்து.
படக்படக்கென எடுத்தெறிந்து பேசுவாள் எதற்கும். சரி அது அவள்
சுவாவம் என்று வளைந்தேன். எந்த பெண்ணிடமும் (அது ஐந்தோ, பதினைந்தோ, இருபத்தைந்தோ,
ஐம்பத்தைந்தோ) பேசினாலும் வள்ளென பிடுங்குவாள். பெண்களை நிராகரித்து விட்டேன்.
யாரைப் பார்த்தும் இப்போதெல்லாம் புன்னகைப்பதுகூட கிடையாது.
உள்ளூரில் வேலை பார்த்த கம்பெனியை திடீரென மூடிவிட்டார்கள்.
செய்வதறியாது விழித்தபோது எதிர்வீட்டு ராமு அண்ணாச்சி தனது சொந்தக்கார பையன் மூலம்
பெங்களூரில் நல்ல வேலை வாங்கித் தந்தார். இன்று கார், குவார்டர்ஸ், கை நிறைய
சம்பளம்.
சொந்த பந்தம் நண்பர்கள் எல்லோரையும் விட்டு முதன் முறையாக
பிரிகிறேன். தனிக்குடுத்தனம் போக வேண்டும் என்ற அவளது போரும் இதன் மூலம் ஒரு
எல்லைக்கு வந்தது. இனி என் உலகம் மனைவியும் மகளும் மட்டுமே என சுருங்கத்
தொடங்கியது எனக்குள் வருத்தத்தை உருவாக்கியது.
திருமணம் வரை பள்ளிக்கூடம் தவிர்த்து வேறு எங்கும் அவள்
சென்றது கிடையாது. அவளது அப்பா கோவில், குளம், நல்லது, கெட்டது, சொந்த பந்த
வீடுகள் என எங்கும் அவளை கூட்டிச் சென்றது கிடையாது. கல்யாணம் வரை வீட்டு வாசப்படி
தாண்டியது கிடையாது.
வருடத்துக்கு ரெண்டு தடவை அவங்க அப்பா எடுத்துத் தர்ற
துணிமணிகளைத்தான் உடுத்த வேண்டும். அவளுக்கென்ற ஆசைகளை கேட்பதற்கோ அதை
நிறைவேற்றுவதற்கோ வசதி கிடையாது. மீறி ஏதாவது கேட்டால் அடி உதைதான். இவ்வளவு ஏன்
அவள் பஸ்ஸில்கூட ஏறியது கிடையாது. இப்படிப்பட்டவள் பெங்களூரில் கைப்பிள்ளையை
வைத்துக் கொண்டு ஒத்தையில் எப்படி சமாளிப்பாள் என்பதுதான் என் கவலை.
தேவை மனிதனுக்கு எதையும் செய்யும் தைரியம் தரும் என்பதுபோல
அவள் எல்லாவற்றிற்கும் பழகிவிட்டாள். இரண்டாவது பையனை பெங்களூரிலேயே பெற்றுக்
கொண்டாள். பிள்ளை பிறந்த ஒரு வாரத்திலேயே என் அம்மாவையும் அவள் அம்மாவையும்
ஊருக்குப் போகச் சொல்லிவிட்டாள். இரண்டு பிள்ளைகளையும் ஒத்தையில் சமாளிக்கவும்
செய்தாள்.
ஆனால் பிள்ளை பெற்ற அந்த ஒரு வாரத்திற்குள் என் அம்மாவுடனும்
அவள் அம்மாவுடனும் ஆயிரம் முறை மோதியிருப்பாள். அவர்கள் எதைச் செய்தாலும் நொட்டை
சொன்னாள். எரிந்து எரிந்து விழுந்தாள். அவர்களை உதவிக்கு வந்தவர்களாக நினைக்காமல்
உபத்திரவத்திற்கு வந்தவர்கள் போல் நடத்தினாள். என்னதான் பச்சஉடம்புக்காரி என்ற
பரிவு அவர்களுக்குள் எழுந்தாலும் சகிக்க முடியவில்லை. அவர்களே எப்படா கிளம்புவோம்
என்று எண்ணும் அளவிற்கு நடந்து கொண்டாள்.
என் அம்மாவிடம் இப்படி நடந்து கொண்டால் அவளுக்கு மாமியாரைப்
பிடிக்கவில்லை என கருத முடியும். அவளது அம்மாவிடமும் ஏன் இப்படி நடக்கிறாள் என்பது
விளங்கவில்லை.
எதிர் வீட்டு இராமு அண்ணாச்சி ஒருமுறை தனது மகனின் கல்லூரி
பீஸிற்காக ஐந்தாயிரம் கைமாத்தாகக் கேட்டார். அடுத்த மாதம் கொடுத்துவிடுவதாகவும்
வாக்குறுதி அளித்தார். அவர் திரும்பக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. பணம்
அனுப்புவது என முடிவு எடுத்து அவளிடம் கூறினேன். சண்டை சண்டை சரியான சண்டை.
அவரு மட்டும் உதவி செய்யலைனா இப்படி ஒரு வேலை எனக்குக்
கிடைக்குமா? அவரு ஒண்ணும் ஓசியாக் கேக்கல. கைமாத்தாதான் கேக்குறார். காலத்துல
உதவலைன்னா பணம் எதுக்கு இப்படி நாசுக்காக பலவிதத்திலும் எடுத்துச் சொல்லியும் அவ
பேய் பிடிச்ச மாதிரி கத்திக் கத்தி ரகளை பண்ணினா. கடைசியா அவரோட போனுக்கே போட்டு
குண்டக்க மண்டக்க பேசிட்டா. அன்னைக்கே எனக்கு மண்டை காஞ்சி போச்சி. இப்படியே
எனக்குள்ள கோபத்தை கொஞ்சம் கொஞ்சமா வேகமா வளத்தா.
எப்ப கோபப்படுவா? எதுக்கு ஆடுவா? ஏன் ரகளை பண்றானு என்னால
கண்டே பிடிக்க முடியல. வீட்டுக்கு போகத்துல எல்லாம் சண்டை வந்துருமோன்னுதான்
மனசுக்குள்ள பயம் ஓடும்.
இத்தனைக்கும் அவ என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்துருவேன்.
அப்படியும் அவ வாயை அடைக்க முடியல. அவ என்ன சொன்னாலும் மறுத்துப் பேசமாட்டேன்.
மாசாமாசம் துணிக்கடையில போயி துட்டைக் கொட்டுவா. நானும் கண்டுக்க மாட்டேன். கண்ணுல
பட்டதையெல்லாம் கண்டது கழுதைய வாங்கிப் போடுவா. அது தேவையா இல்லையானு யோசிக்க
மாட்டா. ஆனா எங்கம்மாவுக்கு ஒரு ஆயிரம் ரூபா அனுப்புறேன்னு சொன்னா மூணு நாளைக்கு
மூஞ்சைத் தூக்கி வச்சிக்கிட்டு மல்லுக்கு நிப்பா.
ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இப்பவெல்லாம் பலதடவ
நெனைக்கத் தோணுது.
நாளைக்கு என் பிரண்டோட கல்யாணம். உயிருக்கு உயிரா வாழ்ந்தவன்.
என் கல்யாணத்துல மாப்பிள்ளைத் தோழனா நின்னவன். ஊருக்குப் போவோம்னு சொன்னப்ப மண்டைய
மண்டைய ஆட்டினா. ரயிலுக்கு டிக்கட் போட்டு ஒரு மாசம் ஆச்சி. கிளம்பலாம்னு நெனக்கிறப்ப
போக வேண்டாம்னு அடம் பிடிக்கிறா. காரணம் கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறா. நானும்
எவ்வளவோ பேசிப் பாத்துட்டேன். ராங்கி மாதிரி ஆடுறா. எனக்கு வௌம் வந்திருச்சி.
ஓங்கி அடிச்சுட்டேன்.
ராமு அண்ணாச்சிக்கு அப்பா மூலம் பணம் அனுப்புன மாதிரி இவன்
கல்யாணத்துக்கும் பணம் அனுப்பி ஏதாவது செய்ய சொல்லணும் என எனக்குள் முடிவெடுத்துக்
கொண்டேன்.
என்னதான் பரிசு செஞ்சாலும் நேர்ல போனமாதிரி அந்த சந்தோசத்த
பங்கு போட்ட மாதிரி வருமா? எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. இந்த ஆளொண்டாப் பிறவிய
வச்சிக்கிட்டு. என்னையும் அறியாமல் கண்கள் கலங்குது.
2.ஆளொண்டாப் பிறவி
சீ... இந்த ஆம்பளைகளே இப்படித்தான். கைய நீட்டி அடிச்சிட்டா
எல்லாம் முடிஞ்சி போயிருமா? இந்த ஐஞ்சு வருசத்துல இன்னைக்கித்தான அவரோட சுயரூபந்
தெரியுது. எது எப்படியோ நான் நினைச்ச மாதிரி ஊருக்குப் பேறத தடுத்தாச்சி. அதுவே
பெரிய வெற்றி.
எப்பப்பாரு பல்லப் பல்லக் காட்டிக்கிட்டு அசடு மாதிரி. நல்லாவா
இருக்கு? ஒருத்தி ஒரு விசயஞ் சொல்றான்னா அதுக்குள்ள அர்த்தம் இருக்கும்னு
தெரிஞ்சிக்க வேண்டாம். சும்மா நோண்டி நோண்டி ஏன் எதுக்குன்னு தொளச்சிக்கிட்டு.
கொஞ்சம்கூட சூதுவாதோட பொழைக்கத் தெரியலையே... என்ன மனுசன் இவரு. ஒண்ணு சொய புத்தி
வேணும். இல்லாட்டி சொல்புத்தி வேணும். ரெண்டும் இல்லைன்னா ஈசியா எல்லாவனும்
மொளகாய் அரச்சிட மாட்டாய்ங்க.
பாக்குற எல்லாரையும் நல்லவங்கன்னு நம்பி நம்பி இவரமாதிரி
இருந்துதான வாழ்க்கையில அடிபட்டாரு எங்கப்பா. இருக்குற வரைக்கும் அண்ணன் தம்பி
அக்கா தங்கச்சி அப்பா அம்மான்னு உறிஞ்சிட்டு கடன தலையில கட்டி அனுப்பிச்சிட்டாங்க.
கடைசியில அதுல அவதிப்பட்டது யாரு? அவரும் அவர் பொண்டாட்டியும் புள்ளைகளும்தான்.
இந்தக் காலத்துல கஷ்டம்னு போனா யாரு உதவிக்கு வருவா?
நாமளாத்தான் கர்ணம் பாயணும். இருக்குறத எல்லாம் அள்ளி விட்டா நாளைக்கு
புள்ளைக்குன்னு என்ன இருக்கும்? ஒரு வீடு வாசல்னு கட்டி மேல ஏறி வரணும்னு ஏதாவது
நெனைக்கிறாரா மனுசன்?
நாம என்ன ஆயிரம் வருசமா வாழப் போறோம்? இருக்கிற கொஞ்ச
காலத்துக்குள்ள புள்ளைகளுக்குன்னு ஏதாவது சேத்தாத்தான் உண்டு. அதப்பத்தி எப்பவாவது
யோசிக்கிறாரா இந்த மனுசன்.
நாம ஆசைப்பட்டு எதெல்லாம் கிடைக்கலையோ அதுக்கெல்லாம் நம்ம
புள்ளைகளும் ஏங்காம இருக்கிறமாதிரி வாழ்றதுல்ல வாழ்க்கை. நாம மங்குனியா இருந்தா
நம்ம புள்ளைகளும் கஷ்டப்படும்ல.
வாழ்க்கைன்னு இருந்தா எல்லாருக்கும் கஷ்டம் நஷ்டம் எல்லாந்தான்
வரும். அதஅத அவகஅவகளே சமாளிக்கணும். நமக்கு செஞ்சானேன்னு இன்னைக்கு அஞ்சு ரூபா உதவுனா
அதுவே அம்பது நூறு ஆயிரம்னு வளரத்தான செய்யும். அதெல்லாம் மொளையிலேயே கிள்ளிட்டா
அப்புறம் யாரு கேப்பா?
பெரிய பிரண்டாம் பிரண்டு. நாம போகலைன்னா கல்யாணந்தான் நின்னுறுமா?
அவந்தான் தாலி கட்டாம விட்டுடுவானா? இங்கிருந்து போயிட்டு வர்றதுனா எம்புட்டுச்
செலவு? காசு என்ன மரத்துலயா காய்க்கிது? பத்திரிகை வச்ச அன்னைக்கே இதச் சொன்னா
அன்னையில இருந்தே பொலம்பிக்கிட்டே இருப்பாருன்னுதான் சரின்னு பொய் சொன்னேன். இந்தா
இப்ப என்ன ஆகிப் போச்சி... ஒத்த அடி அடிச்சிப்புட்டாரு. ஆனா கிளம்பியிருந்தா
கொறைஞ்சது ஐயாயிரமாவது ஆகியிருக்காது.
இதெல்லாம் அவருக்கு எப்படிப் புரிய வைக்கிறதுன்னே தெரியமாட்டேங்கிது.
எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.
(2012 ஜூலை முதல்நாள் அருப்புக்கோட்டையில்
நடைபெற்ற தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற சிறுகதை)
- கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி
No comments:
Post a Comment