Friday, 26 October 2012

தேனியில் பிசாசுத் துகள்

து முழுமையான அறிவியல் கட்டுரை அல்ல. தேனி மாவட்டத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வு மையம் எத்தகையது... அதை அந்த மாவட்ட மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை விவரிக்கும் கட்டுரை மட்டுமே!
 அது என்ன 'நியூட்ரினோ’? ஒரு பொருளையோ, தனிமத்தையோ உடைத்துக்கொண்டே செல்லும்போது, இறுதியில் இதற்கு மேல் உடைக்கவே முடியாது என்கிற நிலையில் ஒரு பொருள் மிஞ்சும் அல்லவா? அதைத்தான் அணு என்றார்கள் விஞ்ஞானி கள். பிறகான விஞ்ஞான வளர்ச்சியில் அணுவைப் பிளந்தால் உள்ளே எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்று மூன்று வகை துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதாவது எதிர் மின் சுமைகொண்டவை எலெக்ட்ரான்கள். நேர் மின் சுமைகொண்டவை புரோட்டான்கள். எந்த மின் சுமையும் இல்லாமல் நடுநிலை வகிப்பவை நியூட்ரான்கள்.
பிரபஞ்ச ரகசியம்
அறிவியல் ஆராய்ச்சிக்குத்தான் ஒரு முடிவே கிடையாதே? 1930-ல் அணுவுக்குள் எலெக்ட்ரான், நியூட்ரான், புரோட்டானைத் தவிர மேலும் சில துகள்களும் இருக்கின்றன என்று யூகித்தார் உல்ஃப்கேங் பாலி என்ற விஞ்ஞானி. அதற்கு அவர் வைத்த பெயர்தான் நியூட்ரினோ. மிகச் சிறிய, அதே நேரத்தில் நடுநிலையான (மின் சுமையற்ற) அடிப்படைத் துகள் என்பதுதான் 'நியூட்ரினோ’வுக்கான விளக்கம். அதன் பிறகு, 26 வருடங்கள் கழித்து ''ஆமாம். உண்மையிலேயே நியூட்ரினோ என்று ஒன்று இருக்கிறது. அது பிசாசுபோலத் திரிந்துகொண்டு இருக்கிறது'' என்று ஆமோதித்தார்கள் அப்போதைய விஞ்ஞானிகள். அணு உலையில் நியூட்ரினோவைக் கண்டறிந்ததற்காக ரைனஸ், கோவான் ஆகிய விஞ்ஞானிகளுக்கு 1995-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
இதனால் தூண்டப்பட்ட விஞ்ஞானிகள் நியூட்ரினோவைப் பற்றி மேலும் தோண்டித் துருவ ஆரம்பித்தார்கள். 'அணுவுக்குள் மட்டும் நியூட்ரினோ இல்லை. சூரியன், நட்சத்திரத்தில் இருந்தும் கோடானுகோடி நியூட்ரினோக்கள் மழைபோல கொட்டிக்கொண்டு இருக்கின்றன’ என்றவர்கள் நியூட்ரினோவில் 3 வகைகளும் 3 எதிர் வகைகளும் (ஆன்ட்டி-நியூட்ரினோ) இருப்பதையும் கண்டுபிடித்தார்கள். இதுதான் இந்தத் துறையில் மிக சமீபத்தியக் கண்டுபிடிப்பு. நியூட்ரினோ ஆய்வின் மூலம் சூரியனின் சூட்சுமத்தையும் பிரபஞ்சத்தின் பிறப்பு ரகசியத்தையும் கண்டுபிடிக்கலாம் என்பது உலக விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
பிசாசு அணுத் துகள்!
இந்தியாவும் 11-ம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டு நியூட்ரினோ ஆய்வுப் பணியில் ஈடுபட்டது. இந்தியாவில் நடத்தப்படும் நியூட்ரினோ ஆய்வு ஐ.என்.ஓ. (India-based Neutrino Observatory) என்று குறிக்கப்படுகிறது. நியூட்ரினோ துகளின் முக்கியமான, அதிசயமான பண்பு என்னவென்றால், அது எந்தப் பொருளையும் ஊடுருவி மறுபுறம் வெளியேறிச் சென்றுவிடுமாம். அது கத்திப்பாரா பாலமாக இருந்தாலும் சரி... ஆவின் வெண்ணெயாக இருந்தாலும் சரி. இப்படி ஒவ்வொரு கணமும் பில்லியன்கணக்கான நியூட்ரினோக்கள் பூமியையே ஊடுருவிக் கடந்துகொண்டு இருக்கின்றனவாம்.

சூரியனில் இருந்தும் விண்மீன்களில் இருந்தும் கோடி கோடியாகக் கொட்டிக்கொண்டு இருக்கும் இந்த நுண் துகள்களைப் பிடிப்பது சாதாரண வேலை கிடையாது. அதனாலேயே நியூட்ரினோவை 'பிசாசு அணுத் துகள்’ (The Ghost Particle) என்று வேடிக்கையாகக் குறிப்பிடத் தொடங்கினார்கள். காஸ்மிக் கதிரோடு சேர்ந்து வரும் இந்தத் துகளைப் பிடிப்பது 'வண்ணத்துப்பூச்சி வலையால் பிசாசைப் பிடிப்பது’ போன்றது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இமயமலை டு பொட்டிபுரம்!
ஆக, நியூட்ரினோ ஆய்வகத்தை மலையைக் குடைந்து சுமார் 1 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைக்க வேண்டிய சூழ்நிலை. ஏன்? மலை வடிகட்டியாகச் செயல்பட்டு நியூட்ரினோ சிறைபிடிப்புக்குப் பெருமளவு உதவும் என்பதாலேயே! இதற்கென முதலில் தேர்வுசெய்யப்பட்ட இடம் இமயமலை. அங்குள்ள தட்பவெப்பம் சரிவராது என்று, அஸ்ஸாமில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றுக்குச் சென்றார்கள். அங்கு எதிர்ப்பு வலுக்கவே, கேரளத்தைக் குறிவைத்தார்கள். கடவுளின் தேசம், பிசாசுத் துகளை அனுமதிக்குமா? நைச்சியமாக தமிழ்நாட்டுப் பக்கம் தள்ளிவிட்டது. இங்கு நீலகிரி மாவட்டம், சிங்கார் பகுதியைக் கட்டம் கட்ட, அங்கே விலங்குகள் சரணாலயம் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, இயற்கை ஆர்வலர்களும் வனத் துறையும் எதிர்ப்பு தெரிவிக்க... தெற்கே சுருளி மலைக்கு நகர்ந்து, வனச் சரணாலய வரையறை காரணமாக இறுதியில் மொட்டைக் கரடாகக் காட்சி தரும் பொட்டிபுரத்தில் நிலைகொண்டுவிட்டது திட்டம்!
பொட்டியில் என்ன நடக்கும்?
தேனி மாவட்டம், பொட்டிபுரம் ஊராட்சி, புதுக்கோட்டை கிராமத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பொட்டிதட்டி மலைத் தொடர். உள்ளூர் மக்கள் இதனை 'ஐம்பது ஊர் அப்பர் கரடு மலை’ என்கிறார்கள். அதில் சிவலிங்கம்போல் உயர்ந்த முகட்டைக்கொண்டு இருக்கும் மலைதான் இப்போது 'ஐ.என்.ஓ’-வின் பரிசோதனை எலி. ஒரே கல்லால் ஆன இந்த மலையைக் குடைந்து அதன் மத்தியில் ஆய்வு மையத்தை அமைக்கப்போகிறார்கள்.

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டு வரும் எழுத்தாளர் தன்ராசு ஆவேசத்துடன் பேசத் துவங்கினார். ''மலை உச்சியில் இருந்து சுமார் 1.3 கி.மீ. ஆழத்தில் 400 அடி நீளம், 80 அடி அகலம்கொண்ட ஒரு குகையைக் குடையவிருக்கிறார்கள். அருகிலேயே 170 அடி நீளம், 38 அடி அகலம், 15 அடி உயரம்கொண்ட துணைக் குகையும் அமைக்கப்படுமாம். 15 அடி விட்டத்தில், 60 அடி ஆழத்துக்கு ஒரு கிணறு வெட்டினாலே, குன்றுபோலக் கற்கள் குவிந்துவிடும். அப்படி இருக்கும்போது, சுமார் 2,24,281 கன சதுர மீட்டர் அளவுக்குக் குகை ஏற்படுத்தப்பட்டால், குவியும் கற்களை என்ன செய்வது? எங்கோ ஒரு கல் குவாரியில் வெடி வைத்தாலே வீடுகள் குலுங்கும் சூழலில், தொடர்ந்து நாலைந்து ஆண்டுகள் வெடி வெடித்துக்கொண்டே இருந்தால் அந்தப் பிரதேசம் என்ன ஆகும்? மலையைத் துளைக்கும் கனரக வாகனங்களும் ராட்சத இயந்திரங்களும் ஊருக்குள் வர சாலை அமைக்கவும் கழிவுகளைக் கொட்டவும் விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவார் கள். தேனி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் அடியோடு கெட்டு, விநோதமான நோய்களால் மக்கள் மடிய வேண்டியதுதானா?
அணு உலைபோல நியூட்ரினோ ஆய்வில் கதிரியக்க ஆபத்து இல்லை என்ற அளவில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். ஆனால், விவசாய பூமியான தேவாரம் பகுதியில் ஏன் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க வேண்டும் என்பதே எங்கள் கேள்வி. அணுகுண்டு சோதனை நடத்திய பொக்ரான் பாலைவனப் பகுதிபோல, மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைக்க வேண்டியதுதானே?'' என்று கேள்வியுடனேயே முடிக் கிறார் தன்ராசு.
அடக்கிய தேசிய பாதுகாப்புச் சட்டம்!

''2009-ம் ஆண்டில் இருந்தே இந்தத் திட்டத்துக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடிவருகிறோம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் விளக்கக் கூட்டம் நடந்தபோது, 'இந்தத் திட்டத்துக்குத் தேவையான தண்ணீரையும் மின்சாரத்தையும் எங்கிருந்து கொண்டுவருவீர்கள்?’ என்று கேட்டோம். தண்ணீரை முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்தும், மின்சாரத்தை ராசிங்கபுரம் மின் நிலையத்தில் இருந்தும் எடுப்போம் என்று கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் சொன்னார்கள். 'இருக்கிற தண்ணீரையும் மின்சாரத்தையும் நீங்களே எடுத்துக்கொண் டால் நாங்கள் எப்படிப் பிழைத்துக்கிடப்பது?’ என்ற
கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு, சமாதான முயற்சிகள் பலன் அளிக்காது என்று தெரிந்ததும், இப்போது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவிப் போராட்டத்தை அடக்குகிறார்கள்!'' என்றார் அந்தப் பகுதியில் வசிக்கும் விவசாயி பொன்னுச்சாமி.

தொடங்கிவிட்டது பணி!
நிலவரத்தை அறிய பொட்டிதட்டி மலைக்கு நேரில் சென்றோம். சர்வே பணிகள் முடிந்து நில ஆர்ஜிதமும் முடிந்துவிட்டது. பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இதற்கே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது மலையில் குகையைக் குடையும் பணிக்காக 'ஆட்கள் தேவை’ என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது ஐ.என்.ஓ.
அங்கிருந்தபோது நாம் உணர்ந்த விஷயம் ஒன்றுதான்... நியூட்ரினோ ஆய்வகம் தொடர்பாக மக்களிடம் தெளிவு ஏற்படுத்தினால், பொட்டிதட்டி மலையின் சர்வதேச அங்கீகாரத்துக்கு அவர்களின் ஆதரவையும் அள்ளிக்கொள்ள முடியும்.


''உலக வரைபடத்தில் பொட்டிதட்டி இடம்பெறும்!''
நியூட்ரினோ ஆய்வுப் பணியில், சென்னை ஐ.ஐ.டி., சென்னை கணித அறிவியல் மையம், டெல்லி, கோழிக்கோடு, கொல்கத்தா, ஸ்ரீநகர் பல்கலைக்கழகங்கள், மதுரை அமெரிக்கன் கல்லூரி உட்பட இந்தியாவின் 26 கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் பங்கு பெற உள்ளன. ஆனால், இந்தப் பட்டியலில், மும்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு சக்தி ஆராய்ச்சி மையம் போன்றவை யும் இடம்பெற்றிருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.
சென்னையின் 'தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேத்தமேட்டிகல் சயின்ஸ்’ அமைப்பில் மூத்த பேராசிரியராக இருக்கும் ராஜசேகரன்தான் நியூட்ரினோ திட்டத்தின் மூத்த விஞ்ஞானி. தேனி மாவட்டத்தில் நடந்த நியூட்ரினோ விளக்கக் கூட்டங்களில், விஞ்ஞானிகளே மேடை ஏறப் பயந்தபோது பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் துணிச் சலாகப் பதில் அளித்து சமாளித்த இவரைச் சந்தித்து தேனி மாவட்ட மக்களின் சந்தேகங்களைக் கேட்டோம்.

''அணுவைப் பிளந்துதான் நியூட்ரினோவைப் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்மைச் சுற்றியே நியூட்ரினோக்கள் இயற்கையாக உலவிக்கொண்டு இருக்கின்றன. நியூட்ரினோ என்னும் கடலுக்குள் மூழ்கியபடியேதான் நாம் ஒவ்வொரு இயக்கத்தையும் மேற்கொள்கிறோம். நம்முடைய உடல்கூட, நொடிக்குப் பல லட்சம் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்கிறது. அணு என்றால் அணு குண்டு என்றும், நியூட்ரினோ என்றால் நியூட்ரான் குண்டு என்றும் எண்ணுபவர்கள்தான் இப்படியான பீதியைக் கிளப்புகிறார்கள்!''
''நியூட்ரினோக்கள் மக்களுக்குத் தீங்கு விளைவிக்காது என்றால் எதற்காக மலையைக் குடைகிறீர்கள்?''
''சூரியனில் இருந்தும், நட்சத்திரங்களில் இருந்தும் இயற்கையாகவே உருவாகும் நியூட் ரினோ துகள்களோடு, காஸ்மிக் துகள்களும் பயணித்துக்கொண்டு இருக்கின்றன. அந்த காஸ்மிக் துகள்களில் இருந்து நியூட்ரினோவை மட்டும் பிரித்துத் தனிமைப்படுத்த வேண்டும் என்றால், நான்கு திசைகளிலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவுக்குப் பாறையால் சூழப்பட்ட மையம் தேவை. எனவே, மலைப் பாறைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஆய்வுக்கூடத்தை நிறுவினால், மற்ற கதிர்கள் வடிகட்டப்பட்டு நியூட்ரினோ மட்டும் பாறையை ஊடுருவிக்கொண்டு ஆய்வு மையத்தை வந்தடையும்!''
''ஏன் பல மாநிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட திட்டத்தைப் பசுமையான தேனி மாவட்டத்தில் அமைக்கிறீர்கள்?''
''இந்த ஆராய்ச்சிக்கான பாறையை இயற் பியல் மற்றும் மண்ணியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையிலேயே தேர்வு செய்திருக்கிறார்கள். இடுக்குகளும் மடிப்புகளும் இல்லாத ஒற்றைக் கல் மலை வேண்டும். அதுவும், மிகக் கடினமான 'சார்னோகைட்’ வகை பாறையாக இருக்க வேண்டும். மண்ணியில்ரீதியாக இந்தப் பாறை அமைந்திருக்கும் பகுதி நிலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் அனைத்தையும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்தான் பூர்த்திசெய்கிறது!''
''கைவிடப்பட்ட சுரங்கங்களை இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தினால் என்ன?''
''ஆரம்பக் காலகட்டங்களில், கைவிடப்பட்ட சுரங்கங்களில்தான் இந்த ஆய்வு நடந்தது. கோலார் தங்க வயலில்கூட ஆய்வு நடந்தது. ஆனால், துல்லியமான முடிவுகள் வேண்டும் என்றால், இத்தகைய கட்டமைப்பு அவசியம். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளிலேயே மிகப் பெரியது இதுதான். 900 கோடி ரூபாய் திட்டம். இந்த மையம் மட்டும் 1970-களிலேயே இந்தியாவில் நிறுவப்பட்டு இருந்தால், கடவுள் துகள் ஆராய்ச்சி யைவிடப் பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் இங்கே நிகழ்ந்திருக்கும்.''
''இந்தத் திட்டத்தால் தேனி மக்களுக்கு என்ன லாபம்?''  
''இது ஒரு தொழிற்சாலையோ, லாபம் தரும் நிறுவனமோ அல்ல. ஆராய்ச்சித் தகுதி இருந்தால், பணி கிடைக்கும். மற்றவர்களுக்கு ஆராய்ச்சி அல்லாத அலுவலகப் பணி, கள உதவிப் பணி, துப்புரவு, ஓட்டுநர் பணிகள் கிடைக்கும். இந்த மையம் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சிக்கூடம் என்பதால், உலகப் புகழ் பெற்ற, நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகள்கூட அடிக்கடி இங்கு வந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பகுதி உலக வரைபடத்தில் முக்கிய அடையாளமாக இடம் பிடிக்கும். எனவேதான், அப்துல் கலாம்கூட, நியூட்ரினோ மையத்தால் தேனி மாவட்டம் புகழ்பெறும் என்று கூறியிருக்கிறார்!''
                                                                       
''மலையை உடைப்பதாலும், இந்த ஆய்வாலும் எந்தப் பாதிப்புமே இல்லை என்கிறீர்களா?''
''மலையை உடைத்து குகை அமைக்கும்போது பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க முயற்சிப்போம். ஆய்வுக்கூடம் மற்றும் குகை அணுகுப் பாதை அகழ்ந்தெடுக்கப்படும்போது, சுமார் 2.25 லட்சம் கன மீட்டர் பாறை மற்றும் பாறைச் சிதறல்கள் கிடைக்கும். அவற்றைத் தண்ணீரில் நனைத்து, குகைக்கு வெளியே லாரிகள் முலம் கொண்டுவரப்பட்டு, சேமிப்புக் கிடங்குகளில் மிகப் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும். எனவே, பாறைகளோ, தூசிகளோ சிதறிப் பறக்காது. ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். இயற்கையை நாம் சீரழிக்கக் கூடாதுதான். அதற்காக இயற்கைக்கு அநாவசியப் புனிதத்தன்மை அளித்து, வளர்ச்சித் திட்டங்களை முடக்கக் கூடாது. அப்படி யோசித்தால், மனிதனால் ஒரு வேளை உணவைக்கூடச் சாப்பிட முடியாது!''

-கே.கே.மகேஷ், சண்.சரவணக்குமார்
படங்கள் : வீ.சக்தி அருணகிரி, பா.காளிமுத்து
நன்றி: ஆனந்த விகடன், 15-08-12

கூடங்குளம் எழுப்பும் பிரச்சினைகள் -வி. எஸ். அச்சுதானந்தன்



1. கேரளத்தின் எல்லையிலிருந்து 26 கிலோ மீட்டரிலும் நமது தலைநகரத்திலிருந்து வெறும் 79 வான் மைல் தூரத்திலும் உள்ள கூடங்குளத்தில் ஓர் அணுமின் நிலையம் செயல்படப்போகிறது. மின் உற்பத்தித் துறையில் அணு ஆற்றல் நமக்கு அவசியமா? அணுமின் நிலையங்களின் செயல்பாடு சுற்றுப்புறவாசிகளுக்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதா? அணுமின் நிலையம் அமைக்கக் கூடங்குளம் பொருத்தமானதா? அங்குக் கட்டப்பட்டுள்ள மின் நிலையம் பாதுகாப்பானதா? இவற்றையெல்லாம் பரிசீலிக்க வேண்டியது அவசரத் தேவையாகி இருக்கிறது.

2. உலகம் முழுவதும் அணுசக்திக்கு மாறும்போது இந்தியா மட்டும் ஒதுங்கி இருக்க முடியாது என்னும் வாதம் எதார்த்த நிலைக்கு முரணானது. இன்று உலகத்திலுள்ள 205 நாடுகளில் 31 நாடுகள் மட்டுமே மின் தேவைக்கு அணுமின் நிலையங்களைச் சார்ந்துள்ளன. உலகில் கிடைக்கும் யுரேனியத்தில் 23% ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆனால் அங்கு இதுவரை அணுமின் நிலையங்கள் தொடங்கப்படவில்லை. உலகத்தின் மின்தேவையில் வெறும் 7% மட்டுமே அணுசக்தி வழியாக உற்பத்தி செய்யப்படுகிறது. அணுமின் நிலையங்களைத் தவிர்க்க முடியாது என்னும் வாதம் அடிப்படையற்றது. மிகவும் சிக்கனமான மின்உற்பத்திக்கான வழிமுறை அணுமின் நிலையங்கள்தாம் என்பதும் சரியல்ல. விபத்திற்கான வாய்ப்புகள் மிக அதிகமுள்ளதும் அதிகப்படியான கட்டுமானச் செலவுகளை ஏற்படுத்துவதுமான அணுமின் நிலையங்களுக்குக் கடன் அளிப்பதில்லை என்று 2007இல் அமெரிக்காவின் முக்கிய ஆறு வங்கிகள் அமெரிக்க எரிசக்தித் துறைக்குத் தெரிவித்துள்ளன.

3. இது மிகவும் லாபகரமான மின் ஆற்றல் என்பது பன்னாட்டு அணு நிறுவனங்களுக்கு உதவிபுரிவதற்காகச் சொல்லப்படும் பொய்ப் பிரசாரம். கர்நாடக மாநிலம் கைகாவில் 230 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரு ரியாக்டர்கள் செயல்படுகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் அரசு அளித்த ஹெவிவாட்டர் மான்யம் மட்டும் 1450 கோடி ரூபாய் என்றாலும் மின்கட்டணம் யூனிட்டிற்கு 2. 90 ரூபாயாக உள்ளது. எந்தத் திட்டத்திற்கும் அதைத் தொடங்கும்போதுள்ள கட்டுமானச் செலவு, அவசியமான எரிபொருள் கிடைக்கும் வாய்ப்பு, அதன் விலை, திட்டம் செயல்படும்போது ஜீவராசிகளுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் உண்டாகும் பிரச்சினைகள், விபத்திற்கான சாத்தியங்கள், விபத்து நிவாரணம், அணுக் கழிவு மேலாண்மை என்பவற்றைக் கணக்கிலெடுக்க வேண்டும். இவை ஒவ்வொன்றையும் பரிசீலித்தால் ஒன்றில்கூட அணுமின் நிலையங்களுக்கு பாஸ் மார்க் கிடைக்காது.

4. அன்றாடச் செயல்பாடுகளைப் பரிசீலிக்கும்போது, நிலையத்தின் செயல்பாட்டிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகள் வெளியேற்ற முடியாத ஒன்று. மற்ற கழிவுகளைப் போல அல்ல அணுக் கழிவு. அவற்றை அழிக்க ஆக்கபூர்வமான முறைகள் எவையும் நடைமுறையில் இல்லை. அமெரிக்காவிலும் பிரான்சிலும் மின் உற்பத்தி முடிந்த நிலையிலும் பல அணுமின் நிலையங்கள் இன்றும் குளிர்விப்பதற்காக வேண்டிச் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கழிவுகளை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாததே இதற்குக் காரணம்.

5. அணுமின் நிலையம் செயல்படும் இடங்களில் எல்லாம் ரத்தப் புற்று நோய், தைராய்டு, கேன்சர் முதலிய கொடிய நோய்கள் பரவுவதாகப் பல்வேறு ஆய்வுகள் தெளிவாக்குகின்றன. இந்த ஆய்வுகளை இல்லாமற் செய்யும் முயற்சிகள் அணுமின் நிலைய அதிகாரிகளின் தரப்பிலிருந்து செய்யப்படுகின்றன. பன்னாட்டு அணு சக்தி நிறுவனம் உலக சுகாதார நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி ஐ. ஏ. இ. ஏ-இன் அனுமதியின்றி அணுக்கதிர் வீச்சு ஏற்படுத்தும் சுகாதாரப் பிரச்சினைகள் பற்றிய தகவல்களை வெளியிடக் கூடாது. இப்படி ஓர் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? புகுஷிமா அணு விபத்திற்குப் பிறகு பன்னாட்டு கார்பொரேட் ஊடகங்கள் கடைப்பிடிக்கும் மௌனத்தையும் இத்துடன் சேர்த்து வாசிக்க வேண்டும். மூன்றாம் உலக நாடுகளையும் கார்பொரேட் ஊடகங்களையும் உலக சுகாதார நிறுவனத்தையும் இந்த அணு நிறுவனங்கள் விலைக்கு வாங்கியுள்ளன என்னும் குற்றச்சாட்டு உறுதியானது. இந்த மௌனத்தை நற்சான்றாக மாற்றும் மக்கள் விரோத விஞ்ஞானிகள் சிலரும் இணையும்போது பேரபாயங்கள் மீண்டும் தொடர்கின்றன.

உயிர்ச்சூழலுக்கு ஆபத்து
6. அணுமின் நிலையங்கள் செயல்பட மிக அதிகமான தண்ணீர் அவசியம். கூடங்குளத்தின் 1000 மெகாவாட் ரியாக்டருக்குத் தினமும் 51 இலட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆறு ரியாக்டர்கள் செயல்படத் தொடங்கினால் தினமும் 2.02 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இவ்வளவு அதிகமான தண்ணீரை அதிக ஆற்றலுடன் உறிஞ்சும்போது கடலில் மீன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் இல்லாமல் போகும். மீன்கள் அணு உலைக்குள் செல்லாமல் இருக்கச் சல்லடைகள் வைக்கப்படும் என வாதம் செய்கின்றனர். இது போன்ற சல்லடைகளில் வேகமாக மோதும் பெரிய மீன்கள்கூடச் செத்துப்போகின்றன என்பதுதான் இதுவரையுள்ள அனுபவங்கள். அணுமின் நிலையத்தின் பயன்பாட்டிற்குப் பிறகு அணுக் கழிவுகளை உட்கொண்ட வெப்ப நீர் அன்றாடம் கடலில் திறந்துவிடப்படுகிறது. 140 டிகிரிக்கு நெருக்கமான கடலின் வெப்பநிலை கிட்டதட்ட 13 டிகிரி அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது கடலின் உயிர்ச்சுழற்சியைப் பாழாக்குகிறது. பின்பு மீன் பிடிப்புத் தொழிலைக் காலப்போக்கில் அழிக்கிறது. அணுமின் நிலையங்களில் உபயோகிக்கப்படும் எரிபொருளை மறுசுழற்சி முறையில் உபயோகிப்பதால் அணுக் கழிவுகள் குறைவாகவே வரும் என்பது கண்களை மூடிக்கொண்டு இருட்டு என்பதற்கு ஒப்பாகும். மறுசுழற்சி செய்வது வெறும் 1 விழுக்காடு மட்டுமே. 1000 மெகாவாட் திறனுள்ள ஓர் அணுமின் நிலையம் ஒரு வருடம் குறைந்தது 30 டன் அணுக் கழிவை வெளியேற்றும். இது கேன்சரையும் மரபுரீதியான பிறவிக் குறைபாடுகளையும் ஏற்படுத்தும். இந்தத் தீய பூதத்தைதான் கடலில் தள்ளுகின்றனர்.

7. அணுமின் நிலையங்களின் விபத்திற்கான வாய்ப்புத்தான் மிகப் பயங்கரமானது. கையாள்பவரின் கவனக்குறைவு, இயந்திரக் கோளாறு, இயற்கைச் சீற்றம் முதலியவற்றால்தான் பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. இன்றைய காலகட்டத்துத் தாக்குதல் அச்சுறுத்தல்களையும் கணக்கிலெடுக்க வேண்டும். பிற விபத்துகள் வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு என்றால் அணுமின் நிலைய விபத்துகள் தொடர்ச்சியானவை. அவற்றைப் பின்வரும் நமது தலைமுறைகள் அனுபவிக்க வேண்டி நேர்கிறது. 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று செர்நோபில் அணு உலை விபத்து நிகழ்ந்தது. இதன் காரணமாக 1986 முதல் 2004 வரை 9,85,000 மரணங்கள் நிகழ்ந்ததாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மனிதனுக்கும் கால்நடைகளுக்கும் காளான்களுக்கும் நோய்க் கிருமிகளுக்கும் ஜீன்களில் மாற்றத்தை ஏற்படுத்திய அவலம் அது. செர்நோபில் மற்றும் அதற்கு முன் ஏற்பட்ட அயர்லாந்தின் த்ரீமைல் ஐலேண்ட் ஆகியவற்றிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டுள்ளதால் அதன் பின்னர் கட்டப்படும் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதுதான் பின்னாட்களில் நடைபெற்றுவரும் பிரச்சாரம். ஆனால் 2011 மார்ச் 11 அன்று உலகத்தை நடுங்க வைத்த ஜப்பான் புக்குஷிமாவில் விபத்து ஏற்பட்டது. பூகம்பமும் சுனாமியும் ஒன்றிணைந்து அங்குள்ள 3 ரியாக்டர்களும் உபயோகித்த அணுக் கழிவைப் பாதுகாத்து வைத்திருந்த 4 தொட்டிகளும் விபத்திற்குள்ளாகின. இந்த விபத்தின் தீவிரத்தை இனிமேல் தான் உலகம் அறியப்போகிறது. காற்றுக் கடலை நோக்கி வீசியதால் 80% அணுப்பொருட்களும் பசிபிக் கடலில் கலந்ததின் காரணமாக ஜப்பான் நாட்டின் மிச்சமீதி இன்று இருக்கிறது. ஆனால் அணு உலையைக் குளிரூட்ட உபயோகித்த கடல் நீரில் 12,000 டன் நீர் புகுஷிமா நிலையத்தின் அஸ்திவாரத்தில் தேங்கி நிற்கிறது. இதில் 6 விழுக்காடு புளூட்டேனியம் அடங்கிய மோக்ஸ் எனப் படும் அணுப்பொருட்களாகும். ஹிரோஷிமாவில் விழுந்த அணுகுண்டைவிடப் பத்து மடங்கு அபாயமானது இந்தத் தேங்கி நிற்கும் நீர், இதைக் கடலில் கலக்கும்போது இதன் விளைவுகளை வரும் தலை முறைகளும் அனுபவிக்க நேரும்.

8. மே மாதம் 2012இல் ஜப்பான் தனது 54 அணுமின் நிலையங்களையும் ஜெர்மனி தனது 17 அணுமின் நிலையங்களையும் இழுத்து மூடிவிட்டன. இத்தாலி அணுமின் நிலையங்களே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டது. விபத்துகளிலிருந்து இவர்கள் பாடம் கற்றுக்கொண்டபோது, இந்தியா அணுமின் திட்டத்தை நோக்கி நகருகிறது. அமெரிக்காவின் நலன்களுக்கு அடிபணிந்து அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மன்மோகன்சிங் அரசு புக்குஷிமாவுக்குப் பிறகும் கூடங்குளம் திட்டத்துடன் முன்னேறுகிறது. இந்தத் திட்டத்தில் விபத்து நேரிட்டால், தமிழகத்தின் தென் பகுதியும், கர்நாடகத்தின் தென் பகுதியும் கேரளமும் இலங்கையும் கிட்டத்தட்ட முழுமையாக அபாயகரமான எல்லைக்குள் வரும். அதனால்தான் கூடங்குளம் என்னும் இடம் இந்தத் திட்டத்திற்கு எவ்வளவு தூரம் பொருத்தமானது என்பதைப் பரிசீலிக்க வேண்டியது நம்மைப் பொறுத்தவரை தவிர்க்க முடியாததாகிறது.

9. புகுஷிமாவில் ஏற்பட்ட விபத்து பூகம்பத்தாலும் சுனாமியாலும் ஏற்பட்டதே தவிர, தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதல்ல என்று அணுமின் நிலையங்களை ஆதரிப்பவர்களே வாதாடுகின்றனர். உண்மையில் பூகம்பம் உண்டானதால் ஏற்பட்ட மின்சாரப் பிரச்சினை தான் இந்தப் பேரழிவின் தொடக்கம். கூடங்குளத்தில் மின்சாரப் பிரச்சினை ஏற்படப் பூகம்பம்தான் உண்டாக வேண்டுமென்பதில்லை. இந்திய அரசு வெளியிடும் ‘வல்னரபிலிட்டி அட்லஸ்’படி கூடங்குளம், பிரதேசம்-3 பூகம்பத்திற்கான சாத்தியமுள்ள பகுதி. அபூர்வமான எரிமலைகள் உள்ள இடம். கூடங்குளத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் மன்னார் கடலில் பாதுகாப்பற்ற நிலையில் எரிமலைகள் உள்ளன. கூடன்குளம் அணுமின் நிலையத்தின் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் 1998இலும் 2008இலும் பூமிக்கடியில் பாறைகள் உருகி வழிந்த சம்பவங்கள் நடந்துள்ளன. 2004இல் சுனாமியால் சின்னாபின்னமாக்கப்பட்ட கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளுக்கு அருகேதான் கூடங்குளம் உள்ளது. 1986இல் அணு சக்தித் துறை வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியக் கடலோரங்களில் சுனாமிக்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் புயலை மட்டும் கணக்கில் கொண்டால் போதும் என்று சொல்கிறது. 2001இல் கூடங்குளம் அணுமின் நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2004இல் சுனாமித் தாக்குதலைக் கணக்கிலெடுத்து அரசு தன்னுடைய திட்டத்தை மாற்றியிருக்க வேண்டும். சுனாமித் தாக்குதலையும் கவனத்தில் கொண்டிருந்த போதும் அணுமின் நிலையம் பாதுகாப்பானதே என்று மத்திய அரசு இப்போது சொல்கிறது. இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது மக்களுக்கல்ல அணு ஆயுத நிறுவனங்களுக்குத்தான் என்பதற்கு இதைவிடப் பெரிய சான்று எதுவும் தேவையா?

10. கடந்த மூன்று வருடங்களில் அணுமின் நிலையத்தின் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் மூன்று இடங்களில் மழைநீர் பூமியைப் பிளந்து கிணறு வடிவத்தில் பூமிக்கடியில் போன நிகழ்வும் நடந்துள்ளது. சுருக்கமாகக் கூடங்குளம் பிரதேசம் எந்தக் காரணத்தைக் கொண்டும் அணுமின் நிலையத்திற்குப் பொருத்தமானதல்ல. இங்கு தான் 600 மெகாவாட் சக்தியுள்ள ஆறு ரியாக்டர்கள் தொடங்க உத்தேசித்துள்ளனர். 2001இல் கட்டத் தொடங்கிய இரண்டு ரியாக்டர்களும் அணு ஆயுத ஒப்பந்தத்திற்குப் பிறகு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட நான்கு ரியாக்டர்களும் இதில் உட்படும். இப்போது கட்டுமானம் முடிந்த அணுமின் உலைகள் சுற்றுப்புறச் சூழல் ஆய்வு எதுவும் மேற்கொள்ளாமல் கட்டப்பட்டவையாகும். ஜெய்தாபூரில் இப்படி ஒரு சுற்றுப்புறச் சூழல் ஆய்வை இந்த நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இதற்கு எதிராக இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமருக்கு புகார் அளித்திருந்தனர். அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பு நிலையத்தை நடத்தும் என்.பி.சி.எல்லுக்குத்தான் என்று சொன்ன பிரதமர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு விபத்து உண்டானால் யார் பொறுப்பு என்பதில் சந்தேகத்தைக் கிளப்புகிறார். அணுமின் நிலையங்களை ஆதரித்தவர்களுக்கெல்லாம் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சலுகைகளை வழங்கிய அணு சக்தி ஒப்பந்தத்தில் பதினேழாம் பிரிவில் முழுப் பொறுப்பும் அணுமின் நிலையத்தின் இந்திய ஏஜென்சிகளுக்குத்தான் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

11. கூடங்குளத்தில் உபயோகிக்கப்படும் வி. வி. இ. ஆர்-100 என்னும் மாடல் உலைக்குப் பல தொழில்நுட்பக் குறைபாடுகளும் உள்ளதாக அறிக்கையில் உள்ளது. ஆனால் கூடங்குளத்திலுள்ள அணுமின் நிலையத்தின் பிரச்சினை இதிலும் அபூர்வமானது. முக்கியமான பாகங்களில் வெல்டிங் செய்யக் கூடாது என்பது ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்து. ஆனால் 6 வெல்டிங்குகள் உள்ள ரியாக்டர்கள் செயல்படவிருக்கின்றன.

கூடன்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று யார் சொன்னாலும் இந்தத் தலைமுறையால் கண்முன் கண்ட பேரழிவுகளை மறக்க முடியாது. பாதுகாப்பு விஷயங்களில் இப்போதுள்ள பொறுப்பின்மையை இந்த அணு நிறுவனங்கள் தொடர்ந்தால் செர்நோபிலும் புகுஷிமாவும் இங்கே நடக்குமென்று சி. ஏ. ஜீ. தனது செயல்பாட்டுத் தணிக்கை அறிக்கையில் முன்னெச்சரிக்கை கொடுக்கிறார். அதனால் இந்த அணுஆயுத வெடிகுண்டு நமக்கு வேண்டாம். நிலையத்தின் செயல்பாடுகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கேரளமும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய இந்தப் பெரும் அபாயத்தைப் புரிந்துகொண்டு கேரள அரசும் விழிப்புடன் செயல்பட வேண்டும். அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து எரிபொருள் நிரப்பும் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். ஜப்பான் போன்ற தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகள்கூட விபத்து நேர்ந்த பிறகு 54 அணுமின் நிலையங்களை அடைத்துப் பூட்டிவிட்டனர். மற்றவர்களின் தவறில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அணுமின் நிலையங்களுக்குக் கொடுக்கும் மானியத்தைச் சூரியசக்தி மின்சாரத்திற்கு கொடுத்திருந்தால் நாட்டின் மின் பற்றாக்குறைக்குத் தீர்வு காண அது போதுமானது. நம்மை அது நாசமாக்கும் என்னும் பீதியும் எழவாய்ப்பில்லை.

நன்றி: மாத்ருபூமி 
மலையாள நாளிதழ் 10.09.2012
(வி. எஸ். அச்சுதானந்தன், கேரள முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தலைவர்களில் ஒருவர்.)

தமிழாக்கம்: டி.வி.பாலசுப்ரமணியம்

நன்றி: காலச்சுவடு, அக்டோபர், 2012

அணுக்கழிவு

யூனியன் கார்பைடு நிறுவனத்தில் உள்ள 350 டன் சயனைடு கழிவுகளை வான்வழியாக ஜெர்மனிக்குக் கொண்டு செல்லும் திட்டத்தைச் செயல்படுத்த இயலாது என்று ஏற்கெனவே இதற்கு ஒப்புக்கொண்ட ஜெர்மானிய நிறுவனம் தனது ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டுவிட்டது.
இந்த சயனைடு கழிவுகள் குறித்து ஜெர்மன் ஊடகங்கள் ஏற்படுத்திய பரபரப்புச்  செய்திகளும் மக்கள் எதிர்ப்பும்தான் இந்த முடிவுக்குக் காரணம். இந்திய-ஜெர்மானிய உறவு கெட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அந்த நிறுவனம், மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.                                                               
யூனியன் கார்பைடு நிறுவனம் விட்டுச்சென்ற சயனைடு கழிவுகள் போபால் நகரத்தின் நிலத்தடி நீரை மாசுபடுத்தி வருகிறது என்பது உறுதியான பிறகு, அந்தக் கழிவுகளை 6 மாதத்தில் அகற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தக் கழிவுகளை அகற்ற மத்திய அமைச்சரவை ரூ.25 கோடியை அனுமதித்திருந்தது. இக்கழிவுகளை அகற்ற ஒப்புக்கொண்ட நிறுவனம் தற்போது பின்வாங்கிவிட்ட நிலையில், இந்திய அரசு மீண்டும் சிக்கலான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
சயனைடு கழிவுக்கு இந்த நிலை என்றால், கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவுகளை என்ன செய்யப் போகிறது இந்திய அரசு என்பதுதான் தற்போது கூடங்குளம் அணுஉலை கூடத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அமைப்புகள் எழுப்பும் கேள்வி.
இந்தக் கேள்விக்கு அணுசக்தித் துறை சார்பில் சில மாதங்களுக்கு முன்பாகவே நீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது. "இந்தியா-ரஷ்யா இடையே 1998-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில், அணுஉலைக் கழிவுகளை மீண்டும் ரஷியாவுக்குத் திருப்பி அனுப்ப அல்லது ஒப்படைக்க கையெழுத்தாகியிருந்தாலும், அதற்கடுத்த துணை ஒப்பந்தங்களில் இந்த ஷரத்து நீக்கப்பட்டு, அணுஉலைக் கழிவுகளை இந்தியா தானே வைத்துக்கொள்ளவும், மறுபயன்பாட்டுக்கு உட்படுத்தவும் உரிமையைப் பெற்றுள்ளது', என்பதுதான் அந்த விளக்கம்.
இந்திய அணுசக்தித் துறை, அணுஉலைக் கழிவுகளை ஆய்வுக்கூடத்தில் வைத்து புளூட்டோனியத்தை மட்டும் தனியே எடுத்து மறுபடியும் அதனை அணுஉலைக்கான எரிசக்தியாக உபயோகிப்பது என்றும், ஏனைய அறிவியல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக்கொள்வது என்றும் தீர்மானித்திருக்கிறது. ஆனால், இதற்கான ஆய்வுக்கூடங்கள் இந்தியாவில் இருக்கின்றனவா? இவ்வாறு ரீ-பிராஸஸிங் மூலம் கிடைக்கும் பலன் என்ன? இதைப் பிரித்தெடுக்கும் செலவுக்கும் பயன்பாட்டினால் கிடைக்கும் ஆதாயத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? இதுபோன்ற நிறைய கேள்விகளுக்குச் சரியான பதில் தரப்படவில்லை.
இந்தியாவில் தற்போதைய நடைமுறைப்படி, பூமிக்கு கீழே, ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் மிகஉறுதியான கான்கிரீட் தொட்டிகள் கட்டி, அதற்குள் அணு உலைக் கழிவுகளைப் போட்டு வைப்பதுதான் திட்டம். இது பாதுகாப்பான நடைமுறை என்று சொல்லப்படுகிறது. இருப்பினும்கூட, இந்தக் கழிவுகளை ரஷியாவுக்கே திருப்பிக் கொடுத்துவிடாமல், நாமே வைத்துக்கொள்ளும் முடிவு ஏன் மேற்கொள்ளப்பட்டது? இதனால் ஆதாயம் காணப்போவது இந்தியாவா, ரஷியாவா? போன்ற கேள்விகள் எழாமல் இல்லை.
புகுஷிமாவில் ஏற்பட்டதைப் போன்று, பேரிடர் ஏதாகிலும் கூடங்குளத்தில் நேரிட்டாலும்கூட, அதைத் தாங்கி நிற்கும் வகையில் கூடங்குளம் அணுஉலை அமைக்கப்பட்டுள்ளது என்று தேசிய அணுசக்திக் கழகம் நீதிமன்றத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த மனுவில் தெரிவித்துள்ளது. மீண்டும் இக்கருத்தை உறுதிப்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அணுஉலைக் கூடம் பாதுகாப்பானது என்பதை ஏற்கெனவே பலரும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், அணுஉலைக் கழிவு குறித்து இந்த நேரத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. சயனைடு கழிவுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் நிலை ஏற்படும் என்றால் அணுஉலைக் கழிவுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?
அணுமின்சாரத்தை 2030-க்குள் இந்திய மின்தேவையில் 25% ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ள இந்திய அரசு எவ்வாறு அணுஉலைக் கழிவைக் கையாளப்போகிறது? புளூட்டோனியத்தைப் பிரித்துப் பயன்படுத்த முடியுமானால் அதற்கான ஆய்வுக்கூடங்களை அமைத்திருக்கிறோமா? அமைக்கும் முயற்சியைத் தொடங்கி இருக்கிறோமா?
சுவீடன் நாட்டில் 10 அணுஉலைக் கூடங்கள் உள்ளன. அவர்கள் அணுஉலைக் கழிவை கடலில் மிக ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள 63,000 கனமீட்டர் அளவுக்கான பாதுகாப்பு பெட்டகத்துக்குக் கொண்டுபோய் சேர்க்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் 31,000 கனமீட்டர் நிரம்பியுள்ளது என்றும், இதுவரை அணுஉலைக் கழிவுகளால் கதிரியக்க வெளிப்பாடு ஏற்பட்டதில்லை என்றும் அந்நாட்டின் அணுஉலைக் கழிவுகளை அகற்றும் துறை உறுதியாகச் சொல்கிறது.
சுவீடன் நாட்டைப்போல உறுதிபடச் சொல்வதற்கு ஏதாவது திட்டம் இருந்தால் அதை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கவேண்டிய பொறுப்பு இந்திய அணுசக்தித் துறைக்கு இருக்கிறது. அணுஉலைக் கழிவுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், "இது கழிவுப்பொருள் அல்ல; ஆதாயப் பொருள், பயன்படு பொருள்' என்கிறது இந்திய அணுசக்தித் துறை. அப்படியானால், அணுஉலைக் கழிவுகளைக் கையாளவும், அதனை மறுசுழற்சிக்கும் புளூட்டோனியத்தைப் பிரிப்பதற்கும் நம்மிடம் ஆய்வுக்கூடங்கள் தயாராக இருக்கின்றன என்பதைச் சொல்ல வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியையும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதையும் உறுதிசெய்ய வேண்டியது ஓர் அரசின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லைதான். ஆனால், அதைவிட முக்கியம், எந்தக் காரணத்தாலும் அந்த வளர்ச்சியை எட்டுவதற்காகத் தனியொரு குடிமகனுக்கு அநீதி இழைக்கப்பட்டு விடக்கூடாது என்பதும், தேசத்தின் வளர்ச்சி வருங்கால சந்ததியரின் நல்வாழ்வையோ, உரிமைகளையோ பாதித்து விடக்கூடாது என்பதும்தான்.
அணு உலைகளை இயக்குவதன் மூலம் மின்சாரம்பெற்று இன்றைய தலைமுறையின் நல்வாழ்வை உறுதிசெய்துவிட்டு, அதன் பின்விளைவுகளை வருங்கால சந்ததியினர் அனுபவித்துக் கொள்ளட்டுமே என்கிற குறுகிய கண்ணோட்டம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. நமது முன்னோர்கள் நமக்கு நல்லதொரு பூமியை அளித்து, ஆரோக்கியமாக வாழ வழி வகுத்ததுபோல, நாமும் தூய்மையான, ஆபத்தில்லாத பூமியை நமது சந்ததியினருக்கு விட்டுச்செல்லக் கடமைப்பட்டவர்கள்.
 கண்களை விற்றா சித்திரம் வாங்குவது?
-ஆசிரியர், தினமணி
நன்றி:: தினமணி, 28-09-12

பியூஸ் மானுஷ்

பியூஸ்... ஓர் உற்சாகமான இளைஞர். எதைப் பற்றியும் அவரிடம் பேசலாம். ''எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆனா, நல்லாத் தமிழ் பேசுவேன். தமிழ்நாட்டின் வரலாறு தெரியும். குறிப்பா, இந்த சேலம் நகரத்தைப் பத்தி முழுக்கத் தெரியும். நான் பொறந்து, வளர்ந்த மண் இதுதான். அதனால் நீங்களாவது, 'எங்கேயோ பிறந்து, இங்கு வந்து’னு எழுதிடாதீங்க...'' - அன்பாகச் சிரிக்கிறார் பியூஸ் மானுஷ். இரு தலைமுறைகளுக்கு முன்பு துணி வியாபாரம் செய்ய ராஜஸ்தானில் இருந்து சேலத் துக்கு வந்த குடும்பத்தின் வாரிசு. பியூஸ் சேத்தியா இவரது உண்மைப் பெயர். சேத்தியா என்ற சொல் சாதியைக் குறிப்பதால் தன் பெயரை 'பியூஸ் மானுஷ்’ என்று மாற்றிக்கொண்டார்.  
கடந்த சில ஆண்டுகளில் சேலம் நகரத்தின் சுற்றுச்சூழல் பிரச்னைகள் பலவற்றில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. 'சேலம் மக்கள் குழு’, 'சேலமே குரல் கொடு’ போன்ற அமைப்புகளின் கீழ் பல்வேறு பிரச்னைகளுக்காக அரசாங்கத்துடன் மல்லுக்கட்டிவரும் இவர், சேலத்தில் ஒரு பிரமாண்ட பறவைகள் சரணாலயத்தையே உருவாக்கி இருக்கிறார். கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் இருந்து சில பன்னாட்டு நிறுவனங்களைப் பின்வாங்க வைத்திருக்கிறார். 150 ஏக்கரில் ஒரு கூட்டுறவுப் பண்ணையை உருவாக்கி இருக்கிறார். ஒரு லட்சத்துக்கும் மேலான மரங்களை சேலம் மலைப் பகுதி களில் உருவாக்கி இருக்கிறார்.
''சேலம் ஹோலிகிராஸ் பள்ளியில் படித்தேன். எங்கள் வகுப்பறையில் இருந்து பார்த்தால் மலைகள் தெரியும். ஒருநாள் ஆசிரியர் எங்களை மலைகளை வரையச் சொன்னார். நான் மட்டும் பிரவுன் நிறத்தில் வரைந்தேன். 'ஏன் பச்சையா வரையலை?’ என்று அவர் கேட்க... 'எந்த மலையும் பச்சையா இல்லையே சார்?’ என்று நான் சொன்னதைக் கேட்டு அவருக்கு அதிர்ச்சி. உடனே, எல்லோரையும் பிரவுன் நிறத்திலேயே வரையச் சொன்னார். 'நம் வார்த்தை ஒரு வகுப்பறை அளவில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது எனில், இன்னும் பெரிதாக ஏதாவது செய்ய முடியும்’ என்ற நம்பிக்கை என் மனதில் ஆழமாகப் பதிந்தது.
பிறகு, சேலத்தில் ஒரு தனியார் கல்லூரியில் படித்தேன். பெரும்பாலான தனியார் கல்லூரி களில் என்னவெல்லாம் அட்டூழியங்கள் நடக்குமோ, அனைத்தும் அங்கும் உண்டு. முந்தைய ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்தவர்களுக்குச் சொற்ப சம்பளம் கொடுத்து ஆசிரியர்களாக நியமிப்பார்கள். கல்வியில் கொஞ்சமும் தரம் இருக்காது. இவற்றை எதிர்த்துக் கேட்கலாம் என்றால், மாணவர் சங்கத்துக்கு அனுமதி இல்லை. ஆகவே, நான் மாணவர்களைத் திரட்டி, தரமான கல்விக்காகப் போராட்டம் நடத்தினேன். கோரிக்கை நியாயமானது என்பதால், அரசாங்கம் எங்கள் பக்கம் நிற்கும் என்று நினைத்தேன். ஆனால், என் மீது பொய்யாகக் கொலை முயற்சி வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்கள். முதன்முறையாக இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தை மிக நெருக்கத்தில் பார்த்தேன்.  
கல்லூரி முடிந்து வெளியே வந்ததும் சேலத்தைச் சுற்றி இருக்கும் மலைப் பகுதிகளில் மரங்கள் நட ஆரம்பித்தேன். அப்படி ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் நட்டிருப்பேன். பிறகு, மேட்டூர் பகுதியில் நீர் வளத்தையும் நில வளத்தையும் நஞ்சாக்கிவரும் 'கெம்பிளாஸ்ட் சன்மார்’ என்ற தொழிற்சாலைக்கு எதிராகப் போராடியவர் களுடன் நட்பு ஏற்பட்டது. அதன் பிறகுதான் உண்மையிலேயே 'ஆக்டிவிஸம்’ என்றால் என்ன, மக்களுடன் இணைந்து வேலை பார்ப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன். மேட்டூரில் அந்தத் தொழிற்சாலை வெளியேற்றிய நச்சுக் கழிவுகளினால் பல நூறு ஏக்கர் விவசாய நிலம் நிரந்தரமாக நஞ்சாகிவிட்டது. இப்போதும் முழுமையாகப் பிரச்னை தீரவில்லை என்றாலும், போராட்டங்கள் மூலமாக ஓரளவு மக்களுக்கு நீதி கிடைத்தது.  
அதன் பிறகு, பன்னாட்டு நிறுவனச் சூறையாடல்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மக்களைத் திரட்டிப் போராடத் துவங்கினோம். 2008-ல் 'ஜிண்டால் குழுமம்’ கஞ்ச மலையில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்காக ஒரு திட்ட வரைவைக் கொடுத்தது. அதன்படி அவர்கள் திறந்தவெளிச் சுரங்கத்தில் வெடி வைத்து மலையை உடைப்பார்கள். இத்தனைக்கும் நகரத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கிறது அந்த மலை. மூன்று லட்சம் மக்கள் அங்கு வசிக்கின்றனர். சேலத்துக்குத் தேவையான கணிச மான காய்கறிகள் அந்தப் பகுதியில் இருந்துதான் வருகின்றன. 40 ஆயிரத்துக்கும் அதிகமான கால் நடைகள் அங்கு இருக்கின்றன. அந்தச் சுரங்கம் மட்டும் வந்துவிட்டால் இவை அத்தனையும் காலி. ஆனால், இவ்வளவும் தெரிந்து, அரசு அனுமதி கொடுத்தது. அதற்கு எதிராக  மக்களைத் திரட்டித் தீவிரமாகப் போராடினோம். இறுதியில், அந்த நிறுவனம் திட்டத்தில் இருந்து பின்வாங்கிக் கொண்டது.
அடுத்து, வேதாந்தா குழுமத்தின் ஓர் அங்கமான 'மால்கோ’ நிறுவனம் 1996-ம் ஆண்டில் இருந்து ஏற்காடு மற்றும் கொல்லிமலையில் இருந்து பாக்ஸைட் தாதுவை வெட்டி எடுத்துக்கொண்டு இருந்தது. கொல்லிமலையில் இருந்து தினசரி 400 லாரி லோடு மண்ணும் ஏற்காட்டில் இருந்து தினமும் 40 லாரி லோடு மண்ணும் கீழே இறங்கியது. இவை எவற்றுக்கும் எந்த அனுமதியும் இல்லை. காட்டில் சுள்ளி பொறுக்கப்போகும் ஏழை மக்களை விரட்டி அடிக்கும் வனத் துறை, 2008-ம் ஆண்டு வரை இயற்கை வளத்தைச் சூறையாடிய இந்த நிறுவனங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் நீதிமன்றத்துக்குச் சென்று, தடுத்து நிறுத்தினோம். ஆனால், பாக்ஸைட் எடுத்தது போக மீதம் உள்ள 80 சதவிகித ரசாயனக் கழிவுகள் கலந்த மண்ணை காவிரி ஓரத்தில்தான் கொட்டினார்கள். வருடக்கணக்கில் கொட்டிய அந்த ஆபத்தான கழிவுகள், இப்போதும் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. இன்று அந்த விஷத்துக்கும் ஒரு மதிப்பு வந்துவிட்ட தால் எடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், அதை முழுவதும் அள்ளவே குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும்.
இப்படி சேலத்தின் கனிம வளங்களைச் சட்டத் துக்குப் புறம்பாக வெட்டி எடுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான எங்களின் போராட்டம் இப்போதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், இந்த அரசு ஓய்வு கொடுப்பதே இல்லை. ஒன்று முடிந்தால் அடுத்தது, அது முடிந்தால் இன் னொன்று என வரிசையாகப் பிரச்னைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது!'' என்று ஒரு தேர்ந்த தொழிற்சங்கவாதிபோலப் பேசும் பியூஸ், ஈழப் பிரச்னை உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களிலும் முன் நிற்கிறார். சேலம் நகரத்தின் குறுக்காக ஓடும் திருமணிமுத்தாறு, ஒரு சாக்கடையாக மாற்றப்பட்டதையும் உலக வங்கி நிதி உதவியுடன் அதில் சிமென்ட் தரை அமைக்கப்பட்டதையும் எதிர்த்து சட்டப் போராட்டமும் நடத்திவருகிறார்.
பியூஸின் முக்கியமான பங்களிப்பு, கன்னங்குறிச்சியில் இருக்கும் மூக்கனேரி பறவைகள் சரணாலயம். இந்தப் பிரமாண்டமான ஏரியை இரண்டே வருடங்களில் ஒரு சரணாலயமாக மாற்றி இருக்கிறார். ''2009-10 வருடத்தில் சேலத்தில் கடுமையான வறட்சி. அப்போதுதான் குறைந்தபட்சம் ஏரியைத் தூர் வாருவோம் என நினைத்து இதைச் செய்தோம். தூர் வாரிய மண்ணைக்கொண்டு ஏரிக்குள்ளேயே சிறு மணல் திட்டுக்களை உருவாக்கினோம். அவற்றில் புங்கன், கருவேலம், அரச மரம், ஆல மரம், மூங்கில், சீத்தாபழம், சிங்கப்பூர் செர்ரி, கோணப் புளியங்காய் என விதவிதமான மரக்கன்றுகளை நட்டோம். மணல் திட்டு கரை யாமல் இருக்க பக்கவாட்டில் அருகம்புல்,வெட்டி வேர், மூங்கில் ஆகியவற்றை வைத்தோம். எல்லா வேலைகளும் ஒரே நேரத்தில் நடந்தன. மக்கள் பணம் 17 லட்ச ரூபாயைக்கொண்டு திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தினோம். அடுத்த சில மாதங்களில் நல்ல மழை. தூர் வாரியதால் ஏழு கிலோ மீட்டருக்கு நிலத்தடி நீர் ஊறியது. நட்ட மரங்கள் செழித்து வளர்ந்தன. ஒவ்வொரு மணல் திட்டும் ஒரு தீவுபோல மாறியது. படிப் படியாகப் பறவைகள் வந்து சேர்ந்தன. இப்போது இங்கே 41 வகையான பறவைகள் இருக்கின்றன. நிறையப் பறவைகள் இங்கேயே கூடு கட்டிக் குஞ்சு பொரித்து... இது ஒரு பறவைகள் சரணாலயமாகவே உருவாகிவிட்டது. இதை ஒரு சிறந்த முன்மாதிரியாகத் தேர்வுசெய்திருக்கும் தமிழக அரசு, மாநிலம் முழுக்க உள்ள 500 ஏரி களில் இதேபோல செய்யப்போகிறது!'' என்கிறார்.
இந்த ஏரிக்குள் இப்போது 45 மணல் திட்டுக்களும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களும்-இருக்கின்றன. கடந்த விநாயகர் சதுர்த்தி விழா வின்போது, 'மூக்கனேரியில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸில் செய்த விநாயகர் சிலைகளைக் கரைக் கக் கூடாது’ என்று சேலம் நகர போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார் பியூஸ். ஆனாலும், கரைக்கப்பட்டன. உடனே, 'மக்களிடம் பணம் வசூலித்துதான் இந்த ஏரி தூர் வாரப்பட்டது. அதில் சிலைகள் கரைக்கப்பட்டபோது தடுத்திருக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. ஆனால், என்னால் முடியவில்லை. என்னைக் கைது செய்யுங்கள்’ என்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இந்த விஷயம் பரவலான கவனத்தைப் பெற்றது.
''என்னைச் சிலர் 'வட நாட்டு ஆள்’ என்பார்கள். சிலர் 'பச்சைத் தமிழன் இல்லை’ என்பார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவது இல்லை. நான் பச்சைத் தமிழனோ, சிவப்புத் தமிழனோ... சாதாரண மக்களை அரசாங்கம் வஞ்சிக்கும்போதும், நிறுவனங்கள் சுரண்டும்போதும் அதை மௌனமாகப் பார்த்துக்கொண்டு இருக்க என்னால் முடியாது. திராவிடம், தமிழ்த் தேசியம், கம்யூனிஸம் என நான் எந்த அரசியல் கொள்கையும் பயின்றது இல்லை. நான் மக்களோடு இருக்கிறேன். அவர்களோடு போராடுகிறேன். தவறுகள் வந்தால் திருத்திக்கொள்வேன்!'' - மூக்கனேரி பறவைகள் சரணாலயத் தில் பரிசலில் துடுப்பு போட்டபடியே பேசுகிறார் பியூஸ். மேலே பறந்து செல்லும் பறவைகள் சிறகுஅசைத்து ஆமோதிக்கின்றன!
-பாரதி தம்பி
படங்கள் : எம்.விஜயகுமார்
நன்றி: ஆனந்தவிகடன், 31-10-2012

Thursday, 25 October 2012

உங்களுக்கு நாங்கள்
வளர்ப்பு மிருகங்கள்!
எங்களுக்கு நீங்கள்
வதைக்கும் மிருகங்கள்!!

கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி
+919843577110.

Monday, 1 October 2012

அம்மாஞ்சியும் ஆளொண்டாப் பிறவியும்

1.அம்மாஞ்சி
‘சீ... நானா இப்படி நடந்தேன்?‘ என்மீது எனக்கே வெறுப்பாக இருந்தது. எனக்கும் இவ்வளவு கோபம் வரும் என்பது முப்பதாண்டுகளாக எனக்கேத் தெரியாது.
“உன் சிரிப்புத்தாண்டா அழகு“ என்பது அம்மா, அப்பா தொடங்கி சொந்தபந்தம் நண்பர்கள் என அனைவரும் நேரடியாகவே எப்போதும் சொல்லும் வசனம்.
எவ்வளவு கோபமாக வருபவர்களும்கூட எனது சாந்தமான சிரித்த முகத்தைப் பார்த்தால் தங்களது கோபத்தின் மீது தாங்களே வருத்தப்பட்டுக் கொள்வார்கள். அந்த அளவிற்கு சாந்த சொரூபி நான்.
எந்தப் பிரச்சனையானாலும் அலட்டிக் கொள்ளமல் அதை எட்ட வைத்துப் பார்த்து ‘அடுத்தது என்ன?‘ என்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டு வருபவன் நான். ஆகையால் எதுவுமே எனக்குப் பிரச்சனையாகத் தெரியாது.
எல்லாரிடமும் உள்ளார்ந்த அன்போடு உண்மையாக பழகுவதால் எனக்கு ஏதாவது ஒரு தேவை என்றால் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு உதவ முன்வருவார்கள்.
“நீ கொடுத்து வச்சவன்டா. எப்பப் பாரு மூஞ்சில சிரிப்போட... எந்தப் பிரச்சனையும் இல்லாம... ம்...“ என்று பெருமூச்சி எறிபவர்களுக்கும், “நாம என்ன ஆயிரம் வருசமா வாழப் போறோம். வாழப் போறது கொஞ்ச காலம். அதுக்குள்ள எதுக்கு பிரச்சனை பண்ணிகிட்டு வருத்தப்பட்டுக்கிட்டு, இருக்கிற ஒத்த வாழ்க்கையை ரணமாக்கிக்கிடணும்?“ என்று கூறி வழக்கமான சிரிப்பை பரிசாகக் கொடுப்பேன்.
இப்படி ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த என்னிடமிருந்து கடந்த ஐந்தாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பு விலகிவிட்டது. சீதேவி போன இடத்தை மூதேவிதானே நிறைப்பாள். கோபம் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் குடியேறத் தொடங்கி இன்று உச்சகட்டம் சென்று உத்தரதாண்டவம் ஆடிவிட்டது.
என் மனைவியை காட்டுமிராண்டித்தனமாக ஓங்கி அடித்துவிட்டேன். இப்படியெல்லாம் என் வாழ்க்கை திசைதிரும்பும், இவ்வளவு கர்ணகொடூரமாக நான் நடப்பேன் என கனவிலும் நினைத்ததில்லை.
“உன்னோட நல்ல குணத்திற்கு வரப்போறவ கொடுத்து வச்சவ. எவளுக்கு அதிர்ஷ்டம் கெடைக்குதோ?“ என முறைப்பெண்களும் கல்லூரித் தோழிகளும் சிலாகிப்பார்கள்.
“வேத்தாளுகளையே கைக்குள்ள வச்சி பொத்திப் பொத்திப் பாக்குற நீ பொண்டாட்டிய தலமேல வச்சி கூத்தாட மாட்ட?“ ஒருதலையாக என்னைக் காதலித்த கௌரி ஒருமுறை கூறினாள்.
எனது கல்யாண விசயத்தில் அப்பா அம்மா முடிவுப்படி நடப்பது என தீர்மானத்துடன் இருந்ததால் யார் மீதும் காதல் வசப்படவில்லை நான். ரத்தத்தால் ‘ஐ லவ் யூ‘ என எழுதி கௌரி குடுத்தபோதுகூட நான் அசையவில்லை. “ஏண்டா என்னைப் பிடிக்கல“ என்று நேருக்கு நேராக கேட்டவளிடம் “உன்கிட்ட ஒண்ணும் குறை கிடையாது. காதலிக்கப் பிடிக்கல“ என்று சிரித்தேன். என் பதிலுக்கு எப்படி நடப்பது எனத் தெரியாமல் குழப்பத்துடன் சென்று விட்டாள்.
இப்படியாகச் சேர்த்த காதலை எல்லாம் என் மனைவிக்கு அர்ப்பணிக்கக் காத்திருந்தேன். எத்தனையோ ஜாதகங்களில் அவள் ஜாதகம்தான் சேர்ந்ததென அப்பா கூறினார். அவள் கொஞ்சம் தூரத்து உறவுதான். அதனால் அவர்கள் குடும்ப சூழல் அம்மாவுக்குத் தெரியும். “அவங்க சின்னதா ஒரு மளிகை கடைதான் வச்சிருக்காங்க. முந்தியே பத்து பவுனுதான் ‘போடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நாமளே தாலிக்கொடி பதினோரு பவுனு போடுறோம். அந்த பிள்ளை பத்தோ பன்னெண்டோதான் படிச்சிருக்கு. ஆளும் வத்தலும் தொத்தலுமாத்தான் இருக்கு. நெறங்கூட புதுநிறத்துக்கும் கம்மிதான். வேற நல்ல இடம் பார்போமே...“ என்று அம்மா இழுத்ததால் அப்பாவும் ஒன்றும் சொல்லவில்லை.
மீண்டும் பெண்பார்க்கும் படலம் தொடர்ந்தது. ஆறுமாதம் தாண்டியும் ஒன்றும் பொருந்தவில்லை. “வேற ஒரு ஜாதகமும் அமைய மாட்டேங்கிது. இன்னும் மூன்று மாசம் போச்சின்னா அவனுக்கு 27 முடிஞ்சிறும். அப்புறம் 29ல்தான் பார்க்கணும். என்ன சொல்ற?“ என்ற அப்பாவின்பேச்சால் அரைகுறை மனசுடன் ஒத்துக் கொண்டார்கள் அம்மா.
‘எப்படிப்பட்ட பொண்ணுனாலும் நான் அவளுக்குத்தக்கன என்னைய மாத்திக்கிவேன்‘ எனும் என் மீதுள்ள நம்பிக்கையில் “எதுனாலும் எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லைம்மா“ என்று ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தேன்.
கல்யாணத்திற்கு குழந்தைகளுடன் வந்த கௌரியின் பார்வையில் ஆயிரம் ஏளனம் தெரிந்ததை நான் கண்டுகொள்ளவில்லை.
எனது எண்ணப்படி மொத்த காதலையும் கொட்டி தேவதைபோல் பார்த்துக் கொண்டேன். முதல் பெண் குழந்தை பிறந்து.
படக்படக்கென எடுத்தெறிந்து பேசுவாள் எதற்கும். சரி அது அவள் சுவாவம் என்று வளைந்தேன். எந்த பெண்ணிடமும் (அது ஐந்தோ, பதினைந்தோ, இருபத்தைந்தோ, ஐம்பத்தைந்தோ) பேசினாலும் வள்ளென பிடுங்குவாள். பெண்களை நிராகரித்து விட்டேன். யாரைப் பார்த்தும் இப்போதெல்லாம் புன்னகைப்பதுகூட கிடையாது.
உள்ளூரில் வேலை பார்த்த கம்பெனியை திடீரென மூடிவிட்டார்கள். செய்வதறியாது விழித்தபோது எதிர்வீட்டு ராமு அண்ணாச்சி தனது சொந்தக்கார பையன் மூலம் பெங்களூரில் நல்ல வேலை வாங்கித் தந்தார். இன்று கார், குவார்டர்ஸ், கை நிறைய சம்பளம்.
சொந்த பந்தம் நண்பர்கள் எல்லோரையும் விட்டு முதன் முறையாக பிரிகிறேன். தனிக்குடுத்தனம் போக வேண்டும் என்ற அவளது போரும் இதன் மூலம் ஒரு எல்லைக்கு வந்தது. இனி என் உலகம் மனைவியும் மகளும் மட்டுமே என சுருங்கத் தொடங்கியது எனக்குள் வருத்தத்தை உருவாக்கியது.
திருமணம் வரை பள்ளிக்கூடம் தவிர்த்து வேறு எங்கும் அவள் சென்றது கிடையாது. அவளது அப்பா கோவில், குளம், நல்லது, கெட்டது, சொந்த பந்த வீடுகள் என எங்கும் அவளை கூட்டிச் சென்றது கிடையாது. கல்யாணம் வரை வீட்டு வாசப்படி தாண்டியது கிடையாது.
வருடத்துக்கு ரெண்டு தடவை அவங்க அப்பா எடுத்துத் தர்ற துணிமணிகளைத்தான் உடுத்த வேண்டும். அவளுக்கென்ற ஆசைகளை கேட்பதற்கோ அதை நிறைவேற்றுவதற்கோ வசதி கிடையாது. மீறி ஏதாவது கேட்டால் அடி உதைதான். இவ்வளவு ஏன் அவள் பஸ்ஸில்கூட ஏறியது கிடையாது. இப்படிப்பட்டவள் பெங்களூரில் கைப்பிள்ளையை வைத்துக் கொண்டு ஒத்தையில் எப்படி சமாளிப்பாள் என்பதுதான் என் கவலை.
தேவை மனிதனுக்கு எதையும் செய்யும் தைரியம் தரும் என்பதுபோல அவள் எல்லாவற்றிற்கும் பழகிவிட்டாள். இரண்டாவது பையனை பெங்களூரிலேயே பெற்றுக் கொண்டாள். பிள்ளை பிறந்த ஒரு வாரத்திலேயே என் அம்மாவையும் அவள் அம்மாவையும் ஊருக்குப் போகச் சொல்லிவிட்டாள். இரண்டு பிள்ளைகளையும் ஒத்தையில் சமாளிக்கவும் செய்தாள்.
ஆனால் பிள்ளை பெற்ற அந்த ஒரு வாரத்திற்குள் என் அம்மாவுடனும் அவள் அம்மாவுடனும் ஆயிரம் முறை மோதியிருப்பாள். அவர்கள் எதைச் செய்தாலும் நொட்டை சொன்னாள். எரிந்து எரிந்து விழுந்தாள். அவர்களை உதவிக்கு வந்தவர்களாக நினைக்காமல் உபத்திரவத்திற்கு வந்தவர்கள் போல் நடத்தினாள். என்னதான் பச்சஉடம்புக்காரி என்ற பரிவு அவர்களுக்குள் எழுந்தாலும் சகிக்க முடியவில்லை. அவர்களே எப்படா கிளம்புவோம் என்று எண்ணும் அளவிற்கு நடந்து கொண்டாள்.
என் அம்மாவிடம் இப்படி நடந்து கொண்டால் அவளுக்கு மாமியாரைப் பிடிக்கவில்லை என கருத முடியும். அவளது அம்மாவிடமும் ஏன் இப்படி நடக்கிறாள் என்பது விளங்கவில்லை.
எதிர் வீட்டு இராமு அண்ணாச்சி ஒருமுறை தனது மகனின் கல்லூரி பீஸிற்காக ஐந்தாயிரம் கைமாத்தாகக் கேட்டார். அடுத்த மாதம் கொடுத்துவிடுவதாகவும் வாக்குறுதி அளித்தார். அவர் திரும்பக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. பணம் அனுப்புவது என முடிவு எடுத்து அவளிடம் கூறினேன். சண்டை சண்டை சரியான சண்டை.
அவரு மட்டும் உதவி செய்யலைனா இப்படி ஒரு வேலை எனக்குக் கிடைக்குமா? அவரு ஒண்ணும் ஓசியாக் கேக்கல. கைமாத்தாதான் கேக்குறார். காலத்துல உதவலைன்னா பணம் எதுக்கு இப்படி நாசுக்காக பலவிதத்திலும் எடுத்துச் சொல்லியும் அவ பேய் பிடிச்ச மாதிரி கத்திக் கத்தி ரகளை பண்ணினா. கடைசியா அவரோட போனுக்கே போட்டு குண்டக்க மண்டக்க பேசிட்டா. அன்னைக்கே எனக்கு மண்டை காஞ்சி போச்சி. இப்படியே எனக்குள்ள கோபத்தை கொஞ்சம் கொஞ்சமா வேகமா வளத்தா.
எப்ப கோபப்படுவா? எதுக்கு ஆடுவா? ஏன் ரகளை பண்றானு என்னால கண்டே பிடிக்க முடியல. வீட்டுக்கு போகத்துல எல்லாம் சண்டை வந்துருமோன்னுதான் மனசுக்குள்ள பயம் ஓடும்.
இத்தனைக்கும் அவ என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்துருவேன். அப்படியும் அவ வாயை அடைக்க முடியல. அவ என்ன சொன்னாலும் மறுத்துப் பேசமாட்டேன். மாசாமாசம் துணிக்கடையில போயி துட்டைக் கொட்டுவா. நானும் கண்டுக்க மாட்டேன். கண்ணுல பட்டதையெல்லாம் கண்டது கழுதைய வாங்கிப் போடுவா. அது தேவையா இல்லையானு யோசிக்க மாட்டா. ஆனா எங்கம்மாவுக்கு ஒரு ஆயிரம் ரூபா அனுப்புறேன்னு சொன்னா மூணு நாளைக்கு மூஞ்சைத் தூக்கி வச்சிக்கிட்டு மல்லுக்கு நிப்பா.
ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இப்பவெல்லாம் பலதடவ நெனைக்கத் தோணுது.
நாளைக்கு என் பிரண்டோட கல்யாணம். உயிருக்கு உயிரா வாழ்ந்தவன். என் கல்யாணத்துல மாப்பிள்ளைத் தோழனா நின்னவன். ஊருக்குப் போவோம்னு சொன்னப்ப மண்டைய மண்டைய ஆட்டினா. ரயிலுக்கு டிக்கட் போட்டு ஒரு மாசம் ஆச்சி. கிளம்பலாம்னு நெனக்கிறப்ப போக வேண்டாம்னு அடம் பிடிக்கிறா. காரணம் கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறா. நானும் எவ்வளவோ பேசிப் பாத்துட்டேன். ராங்கி மாதிரி ஆடுறா. எனக்கு வௌம் வந்திருச்சி. ஓங்கி அடிச்சுட்டேன்.
ராமு அண்ணாச்சிக்கு அப்பா மூலம் பணம் அனுப்புன மாதிரி இவன் கல்யாணத்துக்கும் பணம் அனுப்பி ஏதாவது செய்ய சொல்லணும் என எனக்குள் முடிவெடுத்துக் கொண்டேன்.
என்னதான் பரிசு செஞ்சாலும் நேர்ல போனமாதிரி அந்த சந்தோசத்த பங்கு போட்ட மாதிரி வருமா? எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. இந்த ஆளொண்டாப் பிறவிய வச்சிக்கிட்டு. என்னையும் அறியாமல் கண்கள் கலங்குது.
2.ஆளொண்டாப் பிறவி
சீ... இந்த ஆம்பளைகளே இப்படித்தான். கைய நீட்டி அடிச்சிட்டா எல்லாம் முடிஞ்சி போயிருமா? இந்த ஐஞ்சு வருசத்துல இன்னைக்கித்தான அவரோட சுயரூபந் தெரியுது. எது எப்படியோ நான் நினைச்ச மாதிரி ஊருக்குப் பேறத தடுத்தாச்சி. அதுவே பெரிய வெற்றி.
எப்பப்பாரு பல்லப் பல்லக் காட்டிக்கிட்டு அசடு மாதிரி. நல்லாவா இருக்கு? ஒருத்தி ஒரு விசயஞ் சொல்றான்னா அதுக்குள்ள அர்த்தம் இருக்கும்னு தெரிஞ்சிக்க வேண்டாம். சும்மா நோண்டி நோண்டி ஏன் எதுக்குன்னு தொளச்சிக்கிட்டு. கொஞ்சம்கூட சூதுவாதோட பொழைக்கத் தெரியலையே... என்ன மனுசன் இவரு. ஒண்ணு சொய புத்தி வேணும். இல்லாட்டி சொல்புத்தி வேணும். ரெண்டும் இல்லைன்னா ஈசியா எல்லாவனும் மொளகாய் அரச்சிட மாட்டாய்ங்க.
பாக்குற எல்லாரையும் நல்லவங்கன்னு நம்பி நம்பி இவரமாதிரி இருந்துதான வாழ்க்கையில அடிபட்டாரு எங்கப்பா. இருக்குற வரைக்கும் அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி அப்பா அம்மான்னு உறிஞ்சிட்டு கடன தலையில கட்டி அனுப்பிச்சிட்டாங்க. கடைசியில அதுல அவதிப்பட்டது யாரு? அவரும் அவர் பொண்டாட்டியும் புள்ளைகளும்தான்.
இந்தக் காலத்துல கஷ்டம்னு போனா யாரு உதவிக்கு வருவா? நாமளாத்தான் கர்ணம் பாயணும். இருக்குறத எல்லாம் அள்ளி விட்டா நாளைக்கு புள்ளைக்குன்னு என்ன இருக்கும்? ஒரு வீடு வாசல்னு கட்டி மேல ஏறி வரணும்னு ஏதாவது நெனைக்கிறாரா மனுசன்?
நாம என்ன ஆயிரம் வருசமா வாழப் போறோம்? இருக்கிற கொஞ்ச காலத்துக்குள்ள புள்ளைகளுக்குன்னு ஏதாவது சேத்தாத்தான் உண்டு. அதப்பத்தி எப்பவாவது யோசிக்கிறாரா இந்த மனுசன்.
நாம ஆசைப்பட்டு எதெல்லாம் கிடைக்கலையோ அதுக்கெல்லாம் நம்ம புள்ளைகளும் ஏங்காம இருக்கிறமாதிரி வாழ்றதுல்ல வாழ்க்கை. நாம மங்குனியா இருந்தா நம்ம புள்ளைகளும் கஷ்டப்படும்ல.
வாழ்க்கைன்னு இருந்தா எல்லாருக்கும் கஷ்டம் நஷ்டம் எல்லாந்தான் வரும். அதஅத அவகஅவகளே சமாளிக்கணும். நமக்கு செஞ்சானேன்னு இன்னைக்கு அஞ்சு ரூபா உதவுனா அதுவே அம்பது நூறு ஆயிரம்னு வளரத்தான செய்யும். அதெல்லாம் மொளையிலேயே கிள்ளிட்டா அப்புறம் யாரு கேப்பா?
பெரிய பிரண்டாம் பிரண்டு. நாம போகலைன்னா கல்யாணந்தான் நின்னுறுமா? அவந்தான் தாலி கட்டாம விட்டுடுவானா? இங்கிருந்து போயிட்டு வர்றதுனா எம்புட்டுச் செலவு? காசு என்ன மரத்துலயா காய்க்கிது? பத்திரிகை வச்ச அன்னைக்கே இதச் சொன்னா அன்னையில இருந்தே பொலம்பிக்கிட்டே இருப்பாருன்னுதான் சரின்னு பொய் சொன்னேன். இந்தா இப்ப என்ன ஆகிப் போச்சி... ஒத்த அடி அடிச்சிப்புட்டாரு. ஆனா கிளம்பியிருந்தா கொறைஞ்சது ஐயாயிரமாவது ஆகியிருக்காது.
இதெல்லாம் அவருக்கு எப்படிப் புரிய வைக்கிறதுன்னே தெரியமாட்டேங்கிது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.
 (2012 ஜூலை முதல்நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற சிறுகதை)
 
- கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி