Thursday, 22 November 2012

ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல – விஜி



         ‘ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல...‘ கவிதைத் தொகுப்பின் தலைப்பே நமக்குள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தொகுப்பிற்குள் செல்ல நம்மைத் தூண்டுகிறது. கவிதை, ஹைக்கூ, மரபுக்கவிதை, பாடல்கள் என பல்வேறு வடிவங்களில் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. கவிதைகளின் பாடுபொருள் பல்வேறு தளங்களில் கலவையாக பயணிக்கிறது.

‘அழைப்பிதழ்கள் வரவேற்பதில்லை‘ என்ற முதல் கவிதையே தொகுப்பிற்குள் நம்மை வரவேற்கிறது. மொய் கலாச்சாரத்தையும், அதன் அதீத உச்சத்தையும்
‘வாழ்த்துக்களை விட
பற்று வரவு நேர் செய்யும்
நாளைச் சொல்லி வரும்
அழைப்பிதழ்கள் வரவேற்பதில்லை’ என்ற வரிகள் உணர்த்துகின்றன. இன்றைய சமூக யதார்த்தப் போக்கை ஸ்ரீபதியின் கவிதைகள் ஆதங்கத்தோடும், விமர்சனப் பார்வையோடும் முன்வைக்கின்றன.
‘ஒரு வழியாக
காலம் திருப்தியுற்றது
ஒரு கவிஞனை
காலாவதியாக்கியதற்காக‘ என்ற வரிகள் இன்றைய வாழ்க்கை சூழலின் நிலையையும் அதன் நெருக்கடியையும் மிக எளிதாக உணர்த்தி விடுகின்றன.
அதனை இன்னமும் அழுத்தமாக உணர்த்துகின்றன
‘தங்கபுஷ்பம் பூத்தால் மட்டுமே
தலையில் வைத்தாடும் உலகே...‘ என்ற வரிகள். பொருளைத் தேடி ஓடும் இன்றைய உலகமயமாக்கல் சூழலில், அதன் பாதிப்புகள் மனித மனங்களிலும், வாழ்விலும் எப்படியுள்ளன என்பதைக் கவிதைகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனையும் சகித்துக் கொண்டு வாழ்வை ஓட்டும் நிலைக்கு மனிதர்கள் பக்குவப்பட்டு போனதை
‘சகித்துக் கொள்ள
பழக்கப்பட்ட பின்
ஜனநாயகம் என்பது
சுயநலமாய்
சுருங்கிக் கொள்வதுதானோ?‘ என்ற வரிகள் அம்பலப்படுத்துகின்றன.
பிற மனிதனைப் பற்றிய கவலையே இல்லாத தனியார்மய, தாராளமய வாழ்வுப் போக்கில், அவற்றால் சுரண்டப்படும் இயற்கை வளங்கள், நாம் இழந்துவரும் இயற்கைச் சூழல் பற்றி ஞாபகப்படுத்திச் செல்கின்றன சில கவிதைகள்.
சமூக ஒடுக்கு முறைகளை அடையாளம் காட்டி, அதன் வலியையும், கொடூரத் தனத்தையும் விளக்கி அதற்கெதிரான மனநிலைக்கு நம்மை கிளர்ந்தெழச் செய்கின்றன ஸ்ரீபதியின் கவிதைகள். மத, ஜாதிய ஏற்றத்தாழ்வுகளையும், கட்டமைப்புகளையும் கேள்வி கேட்கச் செய்கின்றன பல கவிதைகள். ‘அய்யனார்கள் மாநாடு’ என்ற கவிதை ஆரிய பிழைப்புவாதத்தை தெளிவாக தோலுரித்துக் காட்டுகிறது. இந்துமத படிநிலை அமைப்பு, மனிதர்களுக்கிடையே மட்டுமல்ல அவர்களுக்கான கடவுள்களுக்கிடையேயும் இருப்பதை ‘அய்யனார்களின் ஒப்பாரி’ முகத்திலறைந்து கூறுகிறது. காலங்காலமாகத் தொடரும் தீண்டாமை முதலிய மதவெறிக் கோட்பாடுகளாலும், செயல்பாடுகளாலும் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புக் குரலை, எழுச்சியை
‘எங்களின் எலும்புகளின் மீது
உங்கள் கோட்டைகள் எழும்பியது
உணரப்பட்ட பின்...
உங்கள் ராஜா வேசத்திற்கு
எப்படி எங்கள் சாமரங்களை
இன்னும் எதிர்பார்க்கிறீர்கள்?‘
‘உங்களுக்கான சொர்க்கங்களை
நீங்கள் புவியில் அனுபவிக்கும்போது
எங்களை மட்டும் ஏன்
வானத்தின் வாசல் திறப்பதற்காக
காத்திருக்கச் சொல்கிறீர்கள்?‘ போன்ற வரிகள் நமக்கு எடுத்துரைப்பதுடன் ஒரே மதம், ஒரே கடவுள் என்ற மாயவலையை அறுத்து எறிகின்றன, உண்மை நிலையை உணர்த்தி. மதக் கட்டுப்பாடுகளுக்குள் மட்டும் அடங்காத பாலின ஒடுக்குமுறையையும், அதனை எதிர்க்கும் பெண்ணின் கலகக் குரலையும் சில கவிதைகள் மிக அழுத்தமாகப் பதிவு செய்கின்றன.
‘அர்த்தநாரியின் இடப்பாகமும்
ஆதாம் எலும்பும்
கருப்பு அங்கியும்
ஆதிக்கத்தின் சின்னங்கள்‘
‘காமத்துப் பாலோடு
பொருட்பால் கொடுத்தாலும்
உன்னால் மறுக்கப்படுகிறதே அறத்துப்பால்‘
‘கல்பாட்டு உடைந்த பின்னும்
உன்னையே பிரதிபலிக்க
கண்ணாடி அல்ல நான்‘
‘உடைபடப் போவதில்லை நான்
உடைக்கப் போகிறேன்
ஒதுங்கிக்கொள்‘ போன்ற கவிதை வரிகள் ஆணாதிக்கத்தின் பெண்ணடிமைத்தன செயல்பாடுகளையும், அடையாளங்களையும் சமூகத்திற்கு எடுத்துணர்த்தி அவற்றை மீறவும், தேவைப்பட்டால் தூக்கி எறியவும்கூட பெண்கள் சிந்தித்து தயாராக உள்ள நிலையை மிக வீரியமாக சுட்டிக் காட்டி எச்சரிக்கின்றன. பெண்களை எழச் செய்கின்றன.
அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் அடிப்படையான அரசியல் பொருளாதார ஒடுக்குமுறையின் இன்றைய நிலையினை கவிஞர் கோபத்தோடு கண்டிக்கும் அதே வேளையில் அவற்றை தடுக்கும் மாற்று வழிகளையும் தனது கவிதைகள்வழி இனம்காட்டுகிறார். ‘நவீன ராமாயணம்’ என்ற கவிதை இன்றைய நமது இந்திய ஆட்சியாளர்களை மிகச்சரியாக, பகிரங்கமாக அடையாளப்படுத்துகிறது. ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாய், ஏவல் நாயால் நமது அரசுகள் மாறிப்போன அவலத்தை
‘முதலில் எங்கள் ரத்தத்தை
அடுத்து மூளையை
இப்போது உயிரை
விலைபேசுகின்றன உங்கள் ஒப்பந்தங்கள்‘ என்ற வரிகள் தோலுரித்துக் காட்டுகின்றன. மக்கள்நல அரசு என்ற போர்வையில் மக்கள் விரோதச் செயல்பாடுகள், ஜனநாயகத்தின் பெயரால் சகிக்க முடியாத அளவு அதிகரிப்பதை
‘உங்கள் வல்லரசுக் கனவில்
எங்கள் உறக்கம் தொலைந்து போனது‘ என்ற வரிகள் வேதனையுடன் முன்வைக்கின்றன.
‘வெள்ளை மாளிகையின்
ஜனநாயகக் கொலுவில்
உலகெங்கும் பொம்மைகள்
ராஜவேசத்தில்‘ என்ற வரிகள் அடையாளப்படுத்துகின்றன, உலகையே சுருட்ட நினைக்கும் சூத்ரதாரியான அமெரிக்க ஏகாதிபத்திய முகத்தை. ஏகாதிபத்தியத்திற்கெதிரான போரில் மக்களுக்கான சக்தி எதுவென்பதையும் கவிதைகள் மக்களுக்கு காட்டிச் செல்கின்றன.
பாவம் இந்த ஜடாயுக்கள்
சீதையைக் காத்திட எண்ணி
பரிதவித்துப் படபடக்கின்றன
தனது செஞ்சிறகுகளைஎன்ற வரிகளும், ‘சிவப்பு சூரியன்என்ற கவிதையும் நமக்கு உணர்த்திச் செல்கின்றன உழைக்கும் மக்களுக்கான விடியலின் நிறம் சிவப்புதான் என்று.
சிறகுகள்
இம்மண்ணைக் காயப்படுத்தியதாய்
சரித்திரம் கிடையாதுஎன்ற வரிகள் செஞ்சிறகுகளின் (கம்யூனிஸத்தின்) கீழ் உலகமே பாதுகாப்பாய் வாழலாம் என வரலாற்றுப் பூர்வமாய் பதிலுரைக்கின்றன. எல்லா ஒடுக்குமுறைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் தீர்வாய் எல்லார்க்கும் எல்லாம் என்ற பொதுவுடைமை சமத்துவக் கண்ணோட்டத்தை கவிதைத் தொகுப்பு அழுந்தப் பற்றி நிற்கிறது. மிக வீரியமான ஆயுதமாய் இத்தொகுப்பு நமக்குப் பயன்படும்.
இத்துனை அழுத்தம் இருந்தாலும்கூட தொகுப்பில் இடம் பெற்றுள்ள காதல் கவிதைகள் தொகுப்பின் வீரியத்தைக் குறைப்பதாய் அமைந்துள்ளன. கவிஞரே ஒப்புக்கொண்டபடி, கல்லூரிகால பிதற்றல்கள் அவை. வாரமலர் கவிதைகள் போன்ற அவை தொகுப்பின் வேகத்தை மட்டுப்படுத்துகின்றன. அவற்றை தவிர்த்திருந்தால் கவிதைத் தொகுப்பு பேசப்படும் தொகுப்பாக அமைந்திருக்கும். மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான முயற்சியாயும் சில கவிதைகள் அமைந்துள்ளன. சில கவிதைகளைத் தவிர்த்து தொகுப்பின் வரிசையையும் கவனத்துடன் பரிசீலித்து அமைத்திருந்தால் தொகுப்பு முழுமை பெற்றிருக்கும். தொகுப்பின் அரசியலில் கவிஞர் கவனம் செலுத்தத் தவறியிருக்கிறார்.
தோழர் ஸ்ரீபதியின் அடையாளம் அறிந்ததால் மேலும் சில விமர்சனங்கள் உள்ளே எழுகின்றன. பெண்ணியத்திற்கு ஆதரவான குரல் தொகுப்பு முழுவதும் ஒலிக்கும்போது அதற்கெதிரான குரலாய்நவீனப் பெண்ணே … … … உன் பின்புத்தி துடிப்பால்குடும்ப மரம் கருகிடாதா?’ போன்ற வரிகள் அமைந்திருப்பது கவிஞரின் அடையாளத்தை கேள்விக்குட்படுத்துகிறது. மாற்று அரசியலை அறிந்து கவிதைகளில் முன்வைக்கும் அவரே தன் சுயமும், அடையாளமும் நசுக்குப்படுவதாய் புலம்புவது அவரது அரசியலைப் பலவீனப்படுத்துவதாய் உள்ளது.
(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் நூல் விமர்சன அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

நூல் விமர்சனம் : ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல



நூல் விமர்சனம் : ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல
ஆசிரியர்: கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி 

   நல்ல கவிஞராகவும், சிறுகதையாளராகவும் அறியப்படும் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பே ‘ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல’ தொகுப்பாகும். ஸ்ரீபதியின் ‘கந்தகப்பூக்கள்’ மூலம் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

   ‘உணர்வுகளின் மொழி கவிதை’ என்பார்கள். கோபம் என்ற உணர்வை அதிகம் மொழி பெயர்த்திடும் தொகுப்பாக இத்தொகுப்பு திகழ்கிறது. தொகுப்பின் அட்டைப்படம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொன்.குமாரின் அணிந்துரை இந்நூலுக்கு சிறப்பு சேர்த்துள்ளது.

   தொப்பிலுள்ள முதல் கவிதையான ‘அழைப்பிதழ்கள் வரவேற்பதில்லை’ நல்லதொரு யதார்த்த சுவையை வாசிக்கின்ற வாசகருக்கு ஏற்படுத்துகிறது.
‘வாழ்த்துக்களை விட
பற்று வரவு நேர் செய்யும்
நாளை சொல்லி வரும்
‘அழைப்பிதழ்கள் வரவேற்பதில்லை’
என்ற வரிகள் திருமண வீடுகளில் நடைபெறும் மொய் செய்யும் மக்களின் யதார்த்தமாய் பதிவு செய்துள்ளது.

   ‘நிறைந்திடு தமிழே’ என்ற தலைப்பில் அமைந்த கவிதை – மரபுக்கவிதையின் சிறப்புகளாக ‘சீர்,’ மா, விளம், காய், கனி, அசை, எதுகை, மோனை, தொடை, அடி, சந்தம், பா, அணி போன்றவற்றை சிறப்பாய் புதுக்கவிதை நடையில், அதே சமயம் மரபுக்கவிதை போல் ஓசை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பானதொரு கவிதையாகும்.

   இத் தொகுப்பின் சிறந்த கவிதையாக ‘நவீன இராமாயணம்’ என்ற கவிதை விளங்குகிறது.
‘இந்திய சீதை அழுது கொண்டே இருக்கிறாள்
அமெரிக்க அசோக வனத்தில்
– எதற்காக இந்திய சீதை அழுகிறாள்? அடிக்கடி உயர்த்தப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வாலா? ஊழல் பிரச்சனையாலா? நில ஆக்கிரமிப்புகளின் படையெடுப்பு காரணத்தினாலா? என்ற பல கேள்விகளை இக்கவிதை நம்முள் எழுப்புகிறது. இக்கேள்விக்கான விடையை நம்முடைய ஆட்சியாளர்களிடம் கேட்டால், “என் மெளனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது” என்று பஞ்ச் டயலாக் பேசுவார்கள். ஆக இந்த ஆளும் அரசு அடித் தட்டு மக்களுக்கான அரசாக இல்லை. மேல் தட்டு மக்களுக்கான அரசாகவே உள்ளது. வெள்ளையர்களிடம் பெற்ற சுதந்திரம் கொள்ளையர்களிடம் சிக்கிய பூமாலையாக உள்ளது. இந்த நிலையை எண்ணியே இந்திய சீதை அழுது கொண்டே இருக்கிறாள். இக்கவிதையின் நிறைவு வரிகளில் ஸ்ரீபதியின் கலக குரல் மிக அருமையாக,
     ‘இந்த ஜன நாயக தாலியை
கழற்றி எறிந்து
அழுகையைத் துடைத்து
கற்பை நிலை நாட்டும் நாள்
வெகுதூரம் இல்லை
என்பதை உணரத் தொடங்குகிறாள்
சீதை
– என்று எதிரொலிக்கிறது.

   திருப்பதியும், முருகனும் மேல் தட்டு சாமிகளாக பக்தர்களுக்கு  அருள்பாலிக்கின்றனர். ஆனால் கிராமங்களில் வெட்ட வெளியில் வணங்கப்படும். அய்யனார்கள் சிந்துவாரற்று கிடக்கிறார்கள்.
‘நாம் இங்கே வெயிலும் மழையிலும்
நாதியற்று நிற்கும் போது
நமது பக்தர்கள் புரியாமல்
‘அவாள்களின்’ கோவிலுக்குப் போய் படியளப்பதனால்
அங்கே படிகளும் தங்கமாய் மின்னுகிறதே...
அய்யனார்கள்’
-என்ற வரிகள் சிறு தெய்வங்களிடயே நிலவியுள்ள ‘தீண்டாமை’ என்னும் அவலத்தை நன்கு உரக்க பேசுகிறது.

   ‘பொங்கி...’ கவிதை காவிரி நதி நீர் அரசியலை சாட்டையடியாய் விளாசியுள்ளது.
‘உழுதவன் கணக்குப் பார்க்கக் கூடாது
சரிதான்
உயிர்களைக் கூடவா
கர்நாடகத்து கமண்டலத்தை
எந்த காகமாவது
விரித்து விடாதா
- என்ற வரிகள் சமகால அரசியலை அருமையாய் வெளிப்படுத்தியுள்ளது.

   ‘சீதைக்காவது வா’ ‘உனக்காக ஒரு கவிதை’ போன்ற கவிதைகள் காதலைக் கொண்டாடுகிறது. சில மரபுக் கவிதைகளும், சில பாடல்களும் தொகுப்பில் தலை காட்டுகின்றன. தொகுப்பில் உள்ள சில வழக்கமான காதல் குறுங்கவிதைகளைத் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் அக்காதல் கவிதைகள் தொகுப்பின் சீரான வேகத்தை தடை செய்யும் கவிதைகளாக உள்ளது.

   மொத்தத்தில் இத்தொகுப்பு வாசிப்போரை தன் வசப்படுத்திடும்  மந்திர கோலைக் கொண்டுள்ள தொகுப்பு. இன்னும் கவிதைத் துறையில் ஸ்ரீபதி பல தளங்களில் முத்திரை பதிக்க வேண்டுமென ஒரு தோழமை கவிஞராக ஆசைப்படுகிறேன்.

விலை ரூபாய் 60/-
பக்கம் 80.

விமர்சனம் ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன் , விருதுநகர்.
                              பேச:9488001251


நூலின் முகவரி : கந்தகப்பூக்கள் பதிப்பகம்
                     120 – குட்டியணஞ்சான் தெரு,
                     சிவகாசி. – 626123
                     செல்லிடபேசி - 9843577110    
  

Monday, 19 November 2012

துணங்கைக்கூத்து - தினமணி

10/08/2012 திங்கள் அன்று தினமணி மதுரை பதிப்பின் 10ம் பக்கம் நூல் அரங்கம் பகுதியில்
துணங்கைக் கூத்து (சிறுகதைத் தொகுப்பு) கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி. பக். 126, ரூ. 90, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை 98. 044 2635 9906.

சமூகம் சார்ந்த அக்கறையுடன் வாழ்வின் முகவரிகளாக விளங்குகின்றன இத்தொகுப்பில் உள்ள கதைகள். உலகைப் பாழடித்துக் கொண்டிருக்கும் பணம், அதனால் சுருங்கிப் போன உள்ளங்கள் என ஆதங
்கப்படுகிறார் நூலாசிரியர்.

வெளிநாட்டு வேலை என்ற மாய வலைக்குப் பின்னே உள்ள கொத்தடிமைத் தன்மைகள், முதியோர் வாழ்வின் தனிமைச் சிக்கல்களை அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளார்,

மூன்று வேளை சோறு, உடுத்துவதற்குத் துணி, இருப்பதற்கு வீடு, பிள்ளைகளுக்குப் படிப்பு, வயதானவர்களுக்கு மருத்துவ வசதி இவைதான் எதார்த்தமான மனிதக் கனவு என்பது இந்நூலில் எடுத்துக் கூறப்படுகிறது, சமூகத்தின் மனசாட்சியாக நின்று இதனைப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

நம் கண்முன் விரியும் சமூக அவலங்கள், அத்துமீறல்கள், போதாமைகள் மீதான படைப்பாளியின் எதிர்வினையாக இக்கதைகள் விளங்குகின்றன எனலாம்.

துணங்கைக் கூத்து - ஜனசக்தி



(நவம்பர் 18,2012 ஜனசக்திில் வெளியான நூல் அறிமுகம் பகுதியில்)

     இந்நூல் உலகியலை நடப்பியலுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. இலங்கையில் போர்களத்தில் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதைத் தெரிவித்துள்ளபோது,பிணங்களை மட்டுமல்லாது பேய்களையும்  பாலியல் வன்முறை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. பிணங்களையும் பேய்களையும் விடாத பேய்பயல்கள் மக்களை என்ன செய்திருப்பார்கள் என்று கற்பனை செய்யத் தோன்றுகிறது.கலிங்கத்துப் பரணியில் காளியும் கூளியும் பிண்ந்தின்னக் காத்திருக்கும் காட்சிகளைக் கண்முன்னே கொண்டு வந்துள்ளார் கதையாசிரியர்.
    
     சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்துப் போரிட்ட ஒரு வீரனின் புதைவிடத்தில் சடங்குகள் நடத்துவதற்குப் பிராமணப் புரோகிதரின்  எதிர் பார்த்திருப்பது காலத்தின் கோலத்தைக் காட்டுவதாகும். ஒரு காலத்தில் ஆரிய ஆதிக்கம், சமஸ்கிருத மயமாக்கம் என்றெல்லாம் அபயக்குரல் எழுப்பியதுடன்  இந்தி எதிர்ப்புப் போர் நடத்திய தமிழகத்தில் அமைதியாக சமஸ்கிருத மயமாக்கம் பெயர் சூட்டும் முறையில் நடந்துகொண்டிருக்கிறது. இப்போது யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நாமாகவே முன்வந்து வலையில் விழுந்து கொண்டிருக்கிறோம்.

     பணம் ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள் என்று அலைந்துகொண்டிருக்கும் இளைங்கர்களின் வெளிநாட்டு வேலைக்கனவு எவ்வளவு கொடுமையானது என்பதை ஒரு கதை விளக்குகிறது. காய்ச்சலில் கிடந்தால் வெந்நீர் வெதுப்பித் தருவதற்குக் கூட ஆள் கிடையாது. பணம் மட்டும் இருந்து எதற்கு என்று வினாத் தொடுக்கிறது ஒரு கதை. நம் நாட்டில் கிடைக்கும் சம்பளத்துடன் வெளிநாட்டில் கிடைப்பதை ஒப்பிடும்போது அது அதிகமாகத் தெரிகிறது. ஆனால் அந்த நாட்டில் ஒருவனுக்கு கொடுக்கப்படுவதை ஒப்பிடாமல் இது மிகக் குறைவு என்று தெரியும். அப்படித் தெரிய வரும்போது மனம் உடைந்துபோகிறது.

     காதல், ஆன்மீகம், மாயம், அதிவிரைவான முன்னேற்றம், கனவுப் பாட்டுடன் ஒரேநாளில் உச்ச நிலைக்குச் செல்லுதல் இப்படிச் செல்லும் இப்போதைய தமிழகக் கதைக்களகத்தில் உண்மையையும் நடப்பையும் மக்களறிய எடுத்தியம்பியுள்ளது இந்நூல்.

     காதல் கதையிலும் ஒரு மென்மையான கதையைச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அது மனத்தில் உள்ளதை வெளியில் சொல்லிவிட்டால் உறவு கெட்டுவிடுமோ என்று எண்ணும் வகையைச் சேர்ந்தது.

     வெயிலில் அலையும்போதுதான் நிழலின் அருமை தெரியும் என்பார்கள். அதுபோல ஒருவருக்கு உணவு கொடுத்து உடை துவைத்து, உடல் நலம் பேணி எப்படியெல்லாம் அவர் மனைவி பணிவிடையாற்றுகிறாள் என்பது ஒரு கதையில் விளக்கப்பட்டுள்ளது. அவள் இறந்தபோதுதான் அருமை அவருக்குப் புலப்படுகிறது.

     இலக்கிய நடையில் சில கதைகள் மிளிர்கின்றன. வட்டார நடையில் சில கதைகள் விளங்குகின்றன. எளிய இனிய சொற்களில் இக்காலத்து மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியவற்றை எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர். யார் மனமும் புண்படாதபடி மனிதர்களின் உணர்வுகளை நிகழ்வுகளாலும் எண்ணங்களாலும் விவரித்துள்ளார். 

- சே. பச்சைமால் கண்ணன்
     

Thursday, 15 November 2012

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணம் 2


மின்வெட்டைத் தீர்க்க அரசாலும், ஊடகங்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கும் முதல் கட்டத் தீர்வுகளில் உள்ள உண்மை

“தமிழகத்தின் மின்வெட்டிற்கான காரணமும் தீர்வும்” கட்டுரையை 9-10-2012 இல் கீற்று இணைய தளம் மற்றும் முகநூலில் வெளியிட்டிருந்தோம். இந்த

க் கட்டுரையை ஆதாரமாகக் காட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி 15-10-2012 அன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள மின்வெட்டைக் குறைப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைக்கொண்ட 10 பேர் குழுவினை 17-10-2012 அன்று தமிழக அரசு அமைத்தது.
600 மெகாவாட் திறன்கொண்ட புதிய மேட்டுர் அனல் மின் அலகும், பழுதாகி பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த வழுதூர் எரிவாயு மின் நிலையங்களும் தம் உற்பத்தியைத் தொடங்கியிருப்பதாக ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சென்னையில் ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டை இரண்டு மணி நேரமாகக் கூட்டி, உபரி மின்சாரத்தை மாநிலத்தின் பிற பாகங்களுக்கு 18-10-2012 தேதியில் இருந்து பகிர்ந்தளிக்கப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
இந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் நமக்கு மேட்டூர் புதிய மின் அலகில் இருந்து 600 மெகாவாட்டும், வழுதூர் 1 மற்றும் 2 அலகுகளில் இருந்து 187 மெகாவாட்டும், சென்னையில் இருந்து பிரித்தளிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 250 மெகாவாட்டும், ஆக மொத்தம் சுமார் 1037 மெகாவாட் கிடைக்க வேண்டும். அதாவது மாநிலத்தின் பற்றாக்குயான 4000 மெகாவாட்டில் கால் பகுதி இதன் மூலம் சரியாகியிருக்க வேண்டும்.
ஆனால் உண்மை நிலை இதுதானா?
இல்லை என்பதையே நமது ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேட்டூர் புதிய அலகானது 608 மெகாவாட் உற்பத்தியை 12-10-2012 அன்று எட்டியது. ஆனால் அதன் பின் அதனால் அந்த அளவு உற்பத்தியை செய்ய இயலவில்லை. அடுத்து வந்த நாட்களில் 300 - 350 மெகாவாட் மின்சாரத்தை சில நாட்களில் உற்பத்தி செய்வதாகவும், பிற நாட்களில் உற்பத்தி அடியோடு நிறுத்தப்படுவதாகவும் நிலையற்ற நிலையிலேயே அது இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை எப்பொழுது சரியாகும் என்பதை உறுதிப் படுத்தமுடியவில்லை.
வழுதூர் எரிவாயு மின் அலகுகளின் பிரச்சினை வேறாக உள்ளது.
2012 ஜூன் மாதம் மோசமாகப் பழுதடைந்த 95 மெகாவாட் திறன் கொண்ட வழுதூர் 1 ஆம் அலகினை சரி செய்வதற்குத் தேவைப்பட்ட புதிய உபரி பாகங்களை தமிழக அரசு வாங்கவில்லை. மாறாக, பிப்ரவரி 2012 இல் இருந்து பழுதடைந்து நிறுத்தபட்டிருந்த 101 மெகாவாட் திறனுடைய குத்தாலம் எரிவாயு மின் நிலையத்தின் ரோட்டர் மற்றும் கியர் பாக்ஸ் ஆகியவற்றை அது பிரித்தெடுத்தது. இவற்றைக் கொண்டு வழுதூர் 1 இன் பிரச்சினைகளை அது சரி செய்தது.
101 மெகாவாட் திறனுடய குத்தாலம் எரி வாயு மின் நிலையத்தினை சரிசெய்வதை விட்டுவிட்டு வழுதூர் 1 ஆம் அலகின் பழுதினை நீக்குவதற்குத் தேவையான உபரி பாகங்களைக் கொடுக்கும் ஒரு இடமாக அதனை தமிழக அரசு மாற்றியது எதற்காக?
இவ்வாறு குத்தாலம் மின் நிலையத்தின் உபரி பாகங்களைக் கொண்டு பழுது நீக்கப்பட்ட வழுதூர் 1 ஆம் அலகு இன்று உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதிலிருந்து 95 மெகாவாட் கிடைக்கக் கூடும்.
வழுதூர் 2 ஆம் அலகின் கதை என்ன?
தமிழக அரசின் எரிவாயு நிலையங்களிலேயே மிக அன்மையில் நிறுவப்பட்ட மின் உற்பத்தி அலகுதான் இது. 17-2-2009 ஆம் தேதியன்று உற்பத்தியைத் தொடங்கிய இந்த 92 மெகாவாட் திறன்கொண்ட மின் அலகானது 9-1-2010 ஆம் தேதியன்று மிக மோசமாகப் பழுதடைந்தது. அதாவது அதன் கியாரண்டி காலமான ஓராண்டு காலத்திற்குள்ளாகவே பழுதடைந்து போனது. அதனைப் பழுது நீக்க 16 மாத காலம் தேவைப்பட்டது. மீண்டும் 7-5-2011 ஆம் தேதியன்றுதான் அது தன் உற்பத்தியைத் தொடங்கியது. என்றாலும் கூட, அதன் பழுது முற்றாக நீக்கப்படவில்லை. பழுது நீக்கப்பட்ட பிறகும் அதன் ரோட்டர் கருவியானது மிக மோசமான அதிர்வினை வெளிப்படுத்துவதால் 92 மெகாவாட்டுக்கு பதிலாக 68 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே இந்த மின் அலகால் உற்பத்தி செய்யும் சூழ்நிலை உருவானது. இவ்வாறு குறைந்த திறனில் இயக்கப்பட்டு வந்த இந்த அலகானது அடுத்து வந்த ஓராண்டில் சுமார் 15 முறை பிற பழுதுகளால் (ட்ரிப்பிங்) பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. கடைசியில், ஒரு குறிப்பிட்ட உபரி பாகம் இல்லாத காரணத்தால் ஜூன் 2012 இல் இருந்து 45 நாட்களுக்கு அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்றும் அது 92 மெகாவாட்டுக்குப் பதிலாக 68 மெகாவாட்டைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஏன் இந்த அவலம்?
மின் வாரியத்தின் நான்கு எரிவாயு நிலையங்களில் மூன்று நிலையங்கள் – குத்தாலம், கோவில்களப்பால் மற்றும் வழுதூர் 1 – பாரத மிகு மின் நிலையத்தின் (BHEL) எந்திரங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த நிறுவனமே இந்த நிலையங்களை நிறுவும் ஒப்பந்ததாரராகவும் இருந்தது.
ஆனால் வழுதூர் 2 ஆம் நிலையத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பி.ஜி.ஆர் (B.G.Raghupathy) என்ற தனியார் நிறுவனத்திற்கு 2006 ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கியது. இதில் விசித்திரம் என்னவென்றால் இந்த நிறுவனத்திற்கு இதற்கு முன் மின் நிலையங்களைக் கட்டிய அனுபவம் ஏதும் இல்லை என்பதுதான். இதுவே அந்த நிறுவனம் மேற்கொண்ட முதல் மின் நிலைய ஒப்பந்தமாகும்.
இந்த மின் நிலையத்தை நிறுவுவதற்காக அது இத்தாலி நாட்டின் ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களைத் தருவித்தது. தமிழ்நாடு மின்வாரியத்தின் மற்ற மின் நிலையங்களின் ஒப்பந்தகார நிறுவனமான பாரத மிகுமின் நிலையம் போல பி.ஜி.ஆர் நிறுவனமானது எந்திர வடிவமைப்பிலோ, எந்திர உற்பத்தியிலோ ஈடுபட்டதில்லை. வழுதூர் 2 ஆம் மின் அலகினை அமைப்பதன் மூலம் அது மின்நிலையம் ஒன்றை எவ்வாறு நிறுவுவது என்பதற்கான பயிற்சியையும் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டது என்றுதான் சொல்ல முடியும். ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களை அதனால் சரியாக நிறுவத் தெரியவில்லை. இதன் காரணமாகமே ஒப்பந்த காலமான 21 மாத காலத்திற்குள் இந்த நிலையத்தினை அதனால் நிறுவ இயலவில்லை. இதற்காக அது கூடுதலாக 10 மாதங்களை எடுத்துக் கொண்டது. இதற்குப் பிறகும் கூட மின் நிலையத்தின் பணிகளை அது அரைகுறையாகவே முடித்துக் கொடுத்தது.
ஒப்பந்த காலமாகிய ஓராண்டு காலம் வரை நிலையத்தில் ஏற்படும் பழுதுகளுக்கு ஒப்பந்தகார நிறுவனமே – அதாவது பி.ஜி.ஆர் நிறுவனமே - பொறுப்பாகும். ஆனால் 9-1-2010 இல் ஏற்பட்ட பழுதிற்கும், அதன்பிறகு 16 மாத காலம் ஏற்பட்ட உற்பத்தி இழப்பிற்கும் பி.ஜி.ஆர். நிறுவனத்தைத் தமிழக அரசோ, தமிழ்நாடு மின் வாரியமோ பொறுப்பாக்கியதாகத் தெரியவில்லை. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 43 கோடி ரூபாயாகும்.
மேலும், மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தியையே இந்த நிலையம் இன்றும் தந்து கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் யாரைப் பொறுப்பாளியாக்குவது?
இதனை விட மிகப்பெரிய சோகம் ஒன்றும் இருக்கிறது. வழுதூர் 2 ஆம் மின் நிலையத்தைச் சரியாக அமைத்துக் கொடுக்கத் தெரியாத இதே பி.ஜி.ஆர் நிறுவனத்திற்குத்தான் இன்று நாம் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மேட்டூர் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்தத்தை தமிழக அரசு கொடுத்த்து என்பதுதான் அந்தச் சோகம்.
மின்வாரியத்தின் அனைத்து மின் நிலையங்களும் பாரத மிகுமின் நிலையத்தின் எத்திரங்களையே உபயோகின்றன. அதன் புதிய மின் நிலையங்களும் இந்த மரபைத்தான் பின்பற்றி வருகின்றன.
ஆனால், பி.ஜி.ஆர் நிறுவனத்தால் கட்டப்பட்டுவரும் மேட்டூர் 600 மெகாவாட் மின் நிலையத்தில் சீன நாட்டின் Dong Fang Electricals நிறுவனத்தின் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையம் 25-9-2011 இல் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அதனால் நிலையான உற்பத்தியைத் தொடங்க இயலவில்லை.
அனல் மின் நிலையங்களுக்கான சீன நாட்டின் எந்திரங்கள் தரம் குறைவானவை என்பதால் அவற்றைக் கொள்முதல் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நடுவண் மின் துறை அமைச்சகம் கடந்த காலத்தில் அறிவுறுத்தியிருந்ததை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மேட்டூர் 600 மெகாவாட் மின் நிலையத்திலும் வழுதூர் 2 ஆம் நிலையத்தைப் போலவே கட்டுப்படுத்த இயலாத அளவு அதிர்வுகள் இருப்பதாகத் தெரிகிறது. வழுதூர் 2 ஆம் நிலையம் போலவே மேட்டூர் புதிய மின் நிலையம் எதிர்காலத்தில் நோயுற்ற யானையாக இருந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
வழுதூர் 2 ஆம் நிலையத்தின் பழுதுகளுக்குப் பொறுப்பேற்க வைக்கப்படாத பி.ஜி.ஆர். நிறுவனம் எதிர்காலத்தில் மேட்டூர் புதிய மின் நிலையத்தில் ஏற்படும் இழப்புகளுக்கும் பொறுப்பேற்க வைக்கப்படுமா என்ற அச்சம் எழுகிறது. உற்பத்தியைத் துவங்குவதற்கு ஏற்பட்டுள்ள கால தாமதத்திற்கு இந்நிறுவனம் தோராயமாக 1000 கோடி ரூபாய் அளவிற்குப் பொறுப்பேற்க வேண்டும். எல்லாவற்றையும் விட மின் உற்பத்தி இழப்பானது இன்று கடுமையான மின் வெட்டிற்கு மாநிலத்தைத் தள்ளியுள்ளது. இது வழுதூர் 2 ஐப் போன்று 6 மடங்கு உற்பத்தியைக் கொண்ட மின் நிலையமாதலால், இதில் ஏற்படும் பழுதுகள் மாநிலத்தின் மின்சார வினியோகத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.
ஆக, அரசும், செய்தி ஊடகங்களும் சொல்வதைப் போல இன்று நடைமுறையில் உள்ள மின் தட்டுப்பாட்டில் பெரிய மாற்றங்களேதும் உடனடியாக ஏற்பட வாய்ப்பில்லை.
அவ்வாறு ஏற்பட வேண்டுமென்றால்:
• பி.ஜி.ஆர் நிறுவனத்திடம் கொண்டிருக்கும் மென்மையான அணுகு முறையினை அரசு கைவிட வேண்டும். மக்களின் நலன் கருதி ஒப்பந்தகாரப் பொறுப்புகள் அனைத்தையும் அந்த நிறுவனம் உடனடியாக செயல்படுத்தித் தர நிர்ப்பந்திக்க வேண்டும்.
• குத்தாலம் மற்றும் வழுதூர் மின் நிலையங்களில் நிகழும் பழுதுகள் யாவும் நீண்டகாலம் நீக்கப்படாமல் இருப்பது இந்நிலையங்களைச் சுற்றி உள்ள 8 தனியார் எரிவாயு மின் நிலையங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதற்காகத்தானோ என்ற சந்தேகம் உள்ளது . அரசு மின் நிலையங்கள் பழுதடைந்து கிடப்பதால் அவற்றிற்குக் கிடைக்க வேண்டிய அரிதான இயற்கை எரிவாயுவினை இந்தத் தனியார் மின் நிலையங்கள் தங்குதடையின்றி பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அருகில் தனியார் மின் நிலையங்கள் ஏதும் இல்லாத கோவில்களப்பால் அரசு எரிவாயு மின் நிலையம் இதுபோன்ற பழுதுகளை 2004 ஆம் ஆண்டிலிருந்தே சந்திக்கவில்லை என்பது இந்த சந்தேகத்தினை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.
• ஆந்திர மாநிலத்தின் சிம்மத்திரி அனல் மின் நிலைத்தில் இருந்து இன்றுவரை நமக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தைக் கேட்காமல் இருக்கும் நிலைப்பாட்டினை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கைவிட வேண்டும். உடனடியாக நமக்குக் கிடைக்க வேண்டிய இந்தப் பங்கினை நாம் கேட்டுப் பெற வேண்டும்.
• குத்தாலம் எரிவாயு மின் நிலையத்திலிருந்து வழுதூர் 1 அலகிற்குப் பிரித்து எடுத்துச் செல்லப்பட்ட எந்திரங்களுக்குப் பதிலாக பாரத மிகுமின் நிலையத்திலிருந்து உடனடியாகப் புதிய எந்திரங்களை வாங்கிப் பொறுத்தி இயக்க வேண்டும்.

அன்புடன்
கோவை. சா.காந்தி,
19 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111